இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 10:26PM by PIB Chennai
ஆஸ்லோவில் நடைபெற்ற இந்தியா – நார்வே வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நார்வே பட்டத்து இளவரசர் ஹாக்கோன், பிரதமர் திரு ஜோனஸ் கர் ஸ்டர் ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
நார்வே மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி சமூகங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்தியா – நார்வே இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு வளர்ந்து வரும் தருணத்தை இந்த உச்சி மாநாடு குறித்தது.
உயர்நிலை வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சுகாதார நலன் புதுமைக் கண்டுபிடிப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, பேட்டரி மற்றும் எரிசக்தி சேமிப்பு முறைகள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் மின்மயமாக்கல், காற்றாலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி நான்கு வட்டமேசை அமர்வுகள் நடைபெற்றன.
இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு மோடி, வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் வளர்ச்சிக் காணப்படுவது குறித்து பாராட்டுத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இலக்காகக் கொண்டும் இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும் இருதரப்பு பங்குதாரர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதை, மக்கள் தொகை, திறமையான மற்றும் லட்சியமிக்க இளைஞர்கள், உறுதியான வர்த்தக நடைமுறைகள், முதலீட்டாளர்களுக்கு உகந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, போட்டித்தன்மைமிக்க கூட்டாட்சி மனப்பான்மை ஆகியவைக் குறித்து அவர் எடுத்துரைத்தார். நீலப்பொருளாதாரம், கப்பல் கட்டுமானம், பசுமை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதார தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்ற முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு நார்வே நாட்டினரை அவர் ஊக்கப்படுத்தினார். இந்தியாவின் தொலைநோக்குத் திட்டமான பசுமை மாற்றத்தை அவர் வலியுறுத்தினார். அத்துடன் நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகள், பருவநிலை மாற்ற உறுதிப்பாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கட்டமைப்பு, பசுமை ஹைட்டிரஜன், தூய்மை எரிசக்தி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள விரைவான விரிவாக்கம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
தூய்மை எரிசக்தி முதலீடுகள், கடல்சார் கார்பன் வெளியேற்றக் குறைப்பு, கடல்சார் நீடித்தத் தன்மை, பருவநிலை நிதி ஆகியவற்றில் நார்வேயின் உலகளாவிய தலைமைத்துவத்தை அவர் பாராட்டினார்.
இந்த உச்சிமாநாட்டில் இந்தியா – நார்வே நிறுவனங்களுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
***
(Release ID 2262583)
TV/IR/KPG/SU