மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் மண்டபம் முகாம் பகுதியில் கடற்பாசி விவசாயிகளை மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 4:06PM by PIB Chennai
தமிழ்நாட்டின் மண்டபம் முகாம் பகுதியில் உள்ள முன்னைக்காட்டில் கடற்பாசி வளர்ப்பு பகுதியை மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி பார்வையிட்டு, அங்கு சுயஉதவிக் குழுவுடன் இணைந்து செயல்படும் கடற்பாசி விவசாயிகளுடன் உரையாடினார். கடற்பாசி வளர்ப்பை ஊக்குவித்தல், கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக மண்டபத்தில் உள்ள ஐசிஏஆர்-சிஎம்எஃப்ஆர்ஐ மண்டல மையத்தில் நடைபெற்ற கடற்பாசி வளர்ப்பு குறித்த கூட்டத்திற்கு டாக்டர் லிக்கி தலைமை தாங்கினார். அப்போது கடற்பாசி வளர்ப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பு, மதிப்புக் கூட்டுதல், சந்தை இணைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் பல்வேறு வளர்ப்பு, பராமரிப்பு, அறுவடை முறைகள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை விளக்கினார்கள். கடற்பாசி வளர்ப்பு மூலம் நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மகளிர் தலைமையிலான சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பை செயலாளர் பாராட்டினார். அத்துடன், உற்பத்தியை அதிகரிக்க பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்பிடி விவசாயிகள் செழுமை கூட்டுறவுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு உறுப்பினர்களை ஊக்குவித்தார்.
ஐசிஏஆர்-சிஎம்எஃப்ஆர்ஐ மண்டல மையத்தில் நடைபெற்ற கடற்பாசி வளர்ப்பு குறித்த கூட்டத்தில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்ப முகமைகள், நாடு முழுவதுமுள்ள கடற்பாசி துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர், நாட்டில் கடற்பாசி வளர்ப்பில் உள்ள சிறந்த வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார். அத்துடன் 11,099 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இந்தத் துறையை விரிவான அளவில் மேம்படுத்த சாதகமான சூழலை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322786®=3&lang=1
***
AD/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322888)
வருகையாளர் எண்ணிக்கை : 27