பாதுகாப்பு அமைச்சகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 1:52PM by PIB Chennai
ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட மொத்தம் 27 பதக்கங்களை வென்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை, 2026 அக்டோபர் 12 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷியும் கலந்து கொண்டார். முப்படையைச் சேர்ந்த மொத்தம் 92 வீரர்கள், 19 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று பதக்கப்பட்டியலில் இந்தியா 4-ம் இடம் பெறுவதற்கு முக்கியப் பங்கு வகித்தனர். இப்போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்றது.
புதுதில்லியில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்களிடையே உரையாடிய பாதுகாப்பு அமைச்சர், அவர்களுடைய ஒழுக்கம், கடின உழைப்பு, குழு உணர்வு, விளையாட்டுத் திறன் ஆகியவையே வெற்றிக்கு காரணம் என்று கூறினார். அதிக அர்ப்பணிப்பு, உடற்பயிற்சி, காயம் குணமடைதல், தொடர் முயற்சிகள் ஆகியவை பதக்கம் வெல்வதற்கு முக்கியம் என்றும், அதே வேளையில் தங்களுடைய படைப்பிரிவைச் சார்ந்த கடமைகளையும், விளையாட்டு சார்ந்த முன்முயற்சிகளையும், சமநிலையில் பராமரிப்பதையும், குடும்பத்தினரை பிரிந்திருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லாத வீரர்களிடையே உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், முயற்சியை கைவிடுவதே உண்மையான தோல்வி என்று கூறினார். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வீரரும் ஒருவகையில் நாட்டிற்கும், பாதுகாப்புப் படைக்கும் பெருமை அளிக்கும் வகையில் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322172®=48&lang=1
***
SS/IR/LDN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322337)
வருகையாளர் எண்ணிக்கை : 7