தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்த் திரைப்படப் பிரதிகள் இந்தியத் தேசிய திரைப்படக் காப்பகத்திடம் ஒப்படைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 11:40AM by PIB Chennai

புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பிலும், ஏ பி நாகராஜன் இயக்கத்திலும் உருவான மூன்று தமிழ்த் திரைப்படங்கள், புனேவில் உள்ள தேசியத் திரைப்படக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் பிரதிகளை இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நிறுவனத்தின் திரைப்பட ஆய்வு அதிகாரி திருமதி அபர்ணா சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

திருவருட்செல்வர் (1967), தில்லானா மோகனாம்பாள் (1968),  திருவிளையாடல் (1965) ஆகிய மூன்று படங்கள், தேசியத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதில், திருவருட்செல்வர் திரைப்படம் இதுவரை தேசியத் திரைப்படக் காப்பகத்திடம் இல்லாத நிலையில், தற்போது அதன் பிரதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் ஆகிய படங்களின் இரண்டாவது பாதுகாக்கப்பட்ட வெளியீட்டுப் பிரதியும் வழங்கப்பட்டுள்ளதன் வாயிலாக, தமிழ்த் திரைப்பட உலகின் இந்த இரண்டு முக்கிய படைப்புகளின் காப்பகப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.

இரண்டு பிரதிகளை வழங்குவதன் மூலம், ஒரு பிரதியை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கவும், மற்றொரு பிரதியின் மூலம் குறிப்பு எடுத்தல், தொழில்நுட்ப மதிப்பீடு, டிஜிட்டல் மயமாக்கல், ஒப்பீட்டு ஆய்வு போன்ற பணிகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் மக்தும், இந்தியாவின் திரைப்படப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது நிறுவனங்களின் தொகுப்புகளைச் சார்ந்திருப்பதுடன், எஞ்சியிருக்கும் திரைப்படப் பிரதிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ள தனிநபர்கள், அமைப்புகளின் முயற்சிகளையும் சார்ந்துள்ளது என்று கூறினார். இந்த மூன்று முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தேசியத் திரைப்படக் காப்பகத்தில் சேர்க்கப்படுவதன் மூலம், தேசிய திரைப்படத் தொகுப்பை வலுப்படுத்துவதுடன், இந்தியத் திரைப்பட உலகின் முக்கிய படைப்புகள் வருங்கால சந்ததியினருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320561&reg=1&lang=1   

----

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322224) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam