பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெல்ஜியம் பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் விடுத்த ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 2:29PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்திருக்கும் மாண்புமிகு பிரதமரை அன்புடன் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இது அவருடைய முதல் இந்தியப் பயணம் என்றாலும், இந்தியாவுடன் அவருக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. அவர் பல ஆண்டுகளாக ஆண்ட்வெர்ப் நகர மேயராகப் பணியாற்றியுள்ளார். ஆண்ட்வெர்ப் நகரில் வசிக்கும் பெருமளவிலான இந்திய சமூகத்திற்கும், இந்தியா–பெல்ஜியம் இடையிலான வைர வர்த்தகத்திற்கும் அவர் எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளார்.

நண்பர்களே,

இந்தியா–பெல்ஜியம் உறவுகளின் வேர்கள் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. முதல் உலகப் போரின்போது பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் செய்த தியாகமும் நமது இரு நாடுகளின் பகிரப்பட்ட நினைவுகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

 

இன்று, ஜனநாயக விழுமியங்கள், சந்தைப் பொருளாதாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான ஆழமான உறவுகள் ஆகியவை நம்மை இயல்பான கூட்டாளிகளாக உருவாக்கியுள்ளன.

நண்பர்களே,

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்துக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளில் நமது கூட்டுறவு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று, பாரம்பரிய துறைகளைத் தாண்டி, பாதுகாப்புத் துறை மற்றும் தூய எரிசக்தி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கும் நமது ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது.

சோராவர் பீரங்கி போன்ற நவீன பாதுகாப்புத் தளவாடங்களை உருவாக்குவதிலும் நாம் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில், உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா திட்டங்களில் ஒன்றை நாம் உருவாக்கி வருகிறோம்.

நண்பர்களே,

இன்று உலகம் பெரும் மாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

உணவு, எரிபொருள் அல்லது விநியோக இணைப்புகள் என எந்தத் துறையாக இருந்தாலும், அனைத்துத் துறைகளும் நிச்சயமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சவாலான சூழலிலும், இந்தியப் பொருளாதாரம் தனது வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து வருகிறது. கடந்த காலாண்டில் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் உலக நாடுகளுக்கு நம்பிக்கையையும் புதிய வாய்ப்புகளையும் அளிக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

நண்பர்களே,

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நாம் நிறைவு செய்தோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்திகளில் இரண்டுக்கு இடையிலான இந்த முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பு, உலகளாவிய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பகிரப்பட்ட வளம் ஆகியவற்றுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

இந்தியாவின் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றமும், இந்த ஒப்பந்தமும் நமது பொருளாதார உறவுகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளன. இன்று, இந்த வாய்ப்புகளை நடைமுறைப்படுத்தி உறுதியான பலன்களாக மாற்றுவதற்காக பல முக்கிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

பெல்ஜியம் நிறுவனங்களுக்காக, இந்தியாவில் முதலீடுகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் சிறப்பு விரைவுப் பாதை நடைமுறையை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியா–பெல்ஜியம் வர்த்தகக் குழுவைத் தொடர்ந்து செயல்படும் வழிமுறையாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளின் நிதி நிறுவனங்கள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவோம். இந்த அனைத்து முயற்சிகளின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை நாம் நிறைவேற்றுவோம்.

நண்பர்களே,

ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நமது இருதரப்பு உறவின் முக்கியத் தூணாக உள்ளது. இன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவப் பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

 

நமது அரசுகளுக்கும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், பாதுகாப்புத் தளவாடங்களை இணைந்து உருவாக்குவதற்கும், இணைந்து உற்பத்தி செய்வதற்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

குற்றச் செயல்களைத் தடுப்பதில், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும், இரு நாடுகளின் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவோம்.

நண்பர்களே,

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நாம் மேலும் வலுப்படுத்துவோம். திறமையான மனிதவளத்தின் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்கும் வகையில், “இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தத்தை” விரைவில் நிறைவு செய்வோம்.

நண்பர்களே,

இன்று, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். இந்தியாவும் பெல்ஜியமும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளில் நம்பிக்கை கொண்டுள்ளன.

உக்ரைன் விவகாரமாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும், மோதல்களுக்கு விரைவில் முடிவு ஏற்பட்டு அமைதி மீண்டும் நிலைநாட்டப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

அனைத்து வடிவங்களிலும், அனைத்து விதமான வெளிப்பாடுகளிலும் உள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது நமது இரு நாடுகளின் பொதுவான உறுதிப்பாடாகும்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

கடந்த மாதம் பெல்ஜியமும் நெதர்லாந்தும் இணைந்து ஹாக்கி உலகக் கோப்பையை நடத்தின. இந்த மிகப்பெரிய உலகக் கோப்பைப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடுமையாக உழைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது வீரர்களையும் நான் பாராட்டுகிறேன்.

வைரங்கள் நீண்ட காலமாகவே இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான உறவின் முக்கிய இணைப்பாக இருந்து வருகின்றன. இன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொடர்பை புதிய மற்றும் விரிவான உறவாக நாம் மாற்றி வருகிறோம்.

இன்றைய பேச்சுவார்த்தைகள், நமது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை, தங்களையும் தங்களுடன் வந்துள்ள பிரதிநிதிக் குழுவினரையும் இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் அறிக்கை இந்தி மொழியில் வழங்கப்பட்டது.

(Release ID: 2306295)

***

AD/VK/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320557) வருகையாளர் எண்ணிக்கை : 17