உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் துருக்கியிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது வரலாற்றுச் சாதனை: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2026 12:18PM by PIB Chennai

துருக்கியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங் நாடு கடத்தப்பட காரணமாக இருந்து, வரலாற்றுச் சாதனை படைத்த அனைத்து முகமைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், துருக்கியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்ப்ரீத் சிங்கை நாடு கடத்துவதை உறுதிசெய்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என்று கூறியுள்ளார். போலி பெயரான நவாப் விர்க் என்ற பெயரில் துருக்கி குடியுரிமையைப் பெற்று, ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஹெராயின், மெத்தபெட்டமைன் ஆகிய போதைப்பொருட்களை அவர் தொடர்ந்து கடத்தி வந்ததை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். நமது முகமைகள் அவரது முகமூடியைக் கிழித்து, அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடித்து அவரைத் தேடிப்பிடித்து நாடு கடத்தியுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிற குற்ற வழக்குகள் தொடர்பாகவும் அவர் இன்று இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த வெற்றிக்குக் காரணமான அனைத்து முகமைகளுக்கும் வாழ்த்துகள் எனவும் 2029 டிசம்பருக்குள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முற்றிலும் ஒடுக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

தலைமறைவு குற்றவாளிகளை இந்தியா அழைத்துவர மத்திய அரசு ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. 2019 முதல் 2026 ஆகஸ்ட் வரை, 36 நாடுகளிலிருந்து மொத்தம் 288 தலைமறைவு குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தலைமறைவு குற்றவாளிகளை நாடு கடத்துவதை ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்றியுள்ளது.

 2019-ம் ஆண்டில் என்ஐஏ திருத்தச் சட்டம், யுஏபிஏ திருத்தச் சட்டம் ஆகியவற்றை இயற்றியதுடன், 2020 முதல் தலைமறைவு குற்றவாளிகளை இந்தியா அழைத்து வரும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், நிதி வழங்கும் கட்டமைப்புகள் ஆகியவையும் இந்த நடவடிக்கையின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன. இது தலைமறைவு குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களின் கட்டமைப்புகளைத் தகர்க்கும் இந்தியாவின் திறனை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 401 தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதே ரெட் கார்னர் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 182 ரெட் கார்னர் நோட்டீஸ்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318575&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318625) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam