விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய, மாநில அரசுகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து வேளாண்மையை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 8:07PM by PIB Chennai
ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கான பிராந்திய வேளாண் மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மாநிலங்கள் தங்கள் வேளாண் இலக்குகளையும், உறுதிமொழிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார். "மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரே வேளாண் குழுவாகச் செயல்படுகின்றன. நமது விஞ்ஞானிகள், விவசாயிகள், மத்திய-மாநில அரசு அதிகாரிகள் என அனைவரும் இணைந்து ஒரு வேளாண் குழுவை உருவாக்குகிறோம். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்று திரு சவுகான் கூறினார்.
உழவர் அடையாள எண்களை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பேசிய அமைச்சர், இந்த எண்களை உருவாக்கும் பணியில் தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் 75%-ஐத் தாண்டிவிட்டதாகவும், தமிழ்நாடு, கேரளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தப் பணியை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். வரும் ஆண்டுகளில் பல வேளாண் அமைப்புமுறைகள் இந்த அடையாள எண்ணைச் சார்ந்திருக்கும் என்பதால், இப்பணியை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று திரு சவுகான் வலியுறுத்தினார். தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் புவிசார் குறிப்பீட்டிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நில விவரங்களை இன்னும் இணைக்காத தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள், அந்தச் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் வலியுறுத்தினார். தென் மாநிலங்களில் குத்தகை விவசாயிகள், பங்குதாரர் முறையில் விவசாயம் மேற்கொள்வோர், வேளாண் குத்தகைதாரர்கள் உள்ளிட்டோருக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைத் தயாரித்து, அவற்றை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கிராம வரைபடங்களின் புவியியல் குறிப்புப் பதிவை மேற்கொள்ளுமாறு புதுச்சேரி, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
விவசாயிகள் அன்றாடம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆலோசனை பெற அவர்கள் வெவ்வேறு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் திரு சவுகான் கூறினார். இதற்குத் தீர்வாக, செல்பேசி வாயிலாகவே விவசாயிகளுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கும் வகையில் 'பாரத் விஸ்தார்' உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை தற்போது இந்தி, ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். "விவசாயிகளுக்குத் தங்கள் சொந்த மொழியே நன்கு புரியும். எனவே, இம்முறையை விரைவாகச் செயல்படுத்த மாநிலங்களுடன் இணைந்து நாம் பணியாற்ற வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் திட்டங்களை 'பாரத் விஸ்தார்' முறையுடன் கூடிய விரைவில் ஒருங்கிணைக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2312226®=3&lang=1
***
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313557)
வருகையாளர் எண்ணிக்கை : 11