நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகளின் ஊழியர்களுக்குத் தடையற்ற வங்கிச் சேவைகளை உறுதி செய்வதற்கான வேண்டுகோள்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 7:50PM by PIB Chennai
பொதுத்துறை வங்கிகளின் வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் ஆதரவுடன் செயல்படும் இதர சில சங்கங்கள், இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் 'செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை' (பிஎல்ஐ) திட்டத்தை திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை சங்கங்கள் முன்வைக்கின்றன. விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, பிஎல்ஐ திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கை, சங்கங்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் நடைமுறையைப் பின்பற்றி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு பல கட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 11.09.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும், 28.09.2026 முதல் 30.09.2026 வரை மூன்று நாள் வேலைநிறுத்தமும், 26.10.2026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் வேலைநிறுத்தம், வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பு நாளான செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஒத்துப்போகிறது. கணக்குச் சரிபார்ப்பு , ஒதுக்கீடுகள், கருவூலம் மற்றும் சந்தை சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய இடையூறு, அதற்கு முந்தைய வார இறுதி விடுமுறை நாட்களுடன் இணையும்போது, நிதி ஆண்டின் மிக முக்கியமான காலகட்டத்தில் வங்கிச் சேவைகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு முடங்கும் சூழலை உருவாக்கும். இது வாடிக்கையாளர்கள், வணிக நிறுவனங்கள், அரசு சார்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச வங்கிச் செயல்பாடுகள் ஆகியவற்றிற்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலுமாறும், வங்கிச் சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313186®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313267)
வருகையாளர் எண்ணிக்கை : 70