நிதி அமைச்சகம்
வங்கிப் பதிவேடுகள் ஆதாரச் சட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2026 2:53PM by PIB Chennai
வங்கி, நிதித் துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது மாறிவரும் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை நவீனப்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வங்கி சார்ந்த நடவடிக்கைகள், தொழில்நுட்பங்கள், விரைவான வளர்ச்சி கண்டு வரும் நிலையில் வங்கி பதிவேடுகள் தொடர்பான சட்ட விதிகளும் இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
வங்கிப் பதிவேடுகள் ஆதாரச் சட்டத்திற்கு 2026 ஆகஸ்ட் 13 அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது 1891-ம் ஆண்டு இயற்றப்பட்ட வங்கிப் பதிவேடுகள் ஆதாரச் சட்டத்தை மாற்றியமைக்க வகை செய்கிறது. மேலும் தற்போதைய வங்கி நடைமுறைகளுக்கு ஏற்ப வங்கி பதிவேடுகளை ஆதாரங்களாக பயன்படுத்துவதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது.
இச்சட்டம் குறித்த அறிவிப்பு 2026 செப்டம்பர் 10 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, இந்த சட்டத்தின் விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காகித வடிவிலான வங்கி கணக்குப் புத்தகம் அல்லது ஆவணங்கள், மின்னணு, டிஜிட்டல், மெய்நிகர், கிளவுட், பிற நவீன தொழில்நுட்ப வடிவங்களில் பராமரிக்கப்படும் வங்கிப் பதிவேடுகளை அங்கீகரிப்பதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த பாகுபாடு இல்லாத நடைமுறையை மேற்கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. கையெழுத்து, டிஜிட்டல் அல்லது மின்னணு முறையிலான கையொப்பங்கள் மூலம் வங்கிப் பதிவேடுகளுக்கு சான்றளிப்பதற்கான முறையை எளிமையாக்குவதற்கும் அதன் தரநிலையை மேம்படுத்துவதற்கும் இந்த சட்டம் உதவுகிறது.
வங்கிக்கு தொடர்பில்லாத சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அழைப்பாணை பிறப்பிப்பது குறித்தும் இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான அழைப்பாணை பிறப்பிக்க எழுத்துப்பூர்வமான சிறப்பு காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் நிதிச்சேவை சூழலுக்கு ஏற்ப அதன் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வகையில் குறிப்பிட்ட நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் வகையில் இச்சட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு விரிவுபடுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309122®=3&lang=1
***
TV/SV/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2309248)
வருகையாளர் எண்ணிக்கை : 9