பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் முன்பு பிரதமர் விடுத்த அறிக்கையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2026 8:45AM by PIB Chennai

ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1, 2026 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.

அதிபர் திரு. ஷவ்கத் மிர்ஜியோயேவின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக ஆகஸ்ட் 29-30 தேதிகளில் தாஷ்கண்டிற்குச் செல்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான உத்திசார் கூட்டாளித்துவம்  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல்  இணைப்பு , பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா, புதிய உஸ்பெகிஸ்தான் ஆகிய நமது கூட்டு இலக்குகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அதிபர் மிர்ஜியோயேவுடன் விவாதிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும், நமது இரு நாடுகளை இணைக்கும் நெருங்கிய கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான உறவுகளுக்குச் சான்றாக விளங்கும், தாஷ்கண்ட் மாநிலக் கிழக்கனுபவப் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவகம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் நான் செல்வேன்.

தாஷ்கண்டிலிருந்து, கிர்கிஸ்தான் குடியரசின் அதிபர்  திரு. சதீர் ஜபரோவின்  அழைப்பின் பேரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 26 வது உச்சிமாநாட்டில் பங்கேற்க நான் பிஷ்கெக்கிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிர மற்றும் ஆக்கபூர்வமான உறுப்பினராக இருந்து வருகிறது. பாதுகாப்பு , இணைப்பு  மற்றும் வாய்ப்பு  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லவும், நமது அயலகத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு பிராந்தியத்தை உருவாக்க சக உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கிர்கிஸ்தான் குடியரசு அதிபர் ஜபரோவ் மற்றும் பிற ஷாங்க்ய் ஒத்துழைப்பு அமைப்பின் இதர தலைவர்களைச் சந்திக்கவும், மத்திய ஆசியாவின் வளமான வாழும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியா ஆழ்ந்த மரியாதை வைத்துள்ள 6-வது உலக நாடோடி விளையாட்டுகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் பயணம் மத்திய ஆசியாவில் இந்தியாவின் உத்திசார்ந்த கூட்டாண்மைகளை வலுப்படுத்தும், பிராந்தியத்துடனான நமது நாகரிக உறவுகளை ஆழப்படுத்தும், மேலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்; இவைதான் உலகின் மீதான இந்தியாவின் ஈடுபாட்டின் மையமாக விளங்கும் மதிப்புகளாகும்.

 

(Release ID: 2304461)

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2307882) வருகையாளர் எண்ணிக்கை : 21