விவசாயத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 36-வது வருடாந்திர மாநாடு துவக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 6:52PM by PIB Chennai
புதுதில்லியில், வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான 36-வது வருடாந்திர மாநாட்டை, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று தொடங்கிவைத்தார். "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வேளாண் உயர்கல்வியை மறுவடிவமைத்தல்" என்ற கருப்பொருளின் கீழ் 2026 ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (ஐசிஏஆர்) உயர்நிலை அதிகாரிகள், துணைத் தலைமை இயக்குநர்கள், கூடுதல் தலைமை இயக்குநர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, எதிர்காலத்திற்கு ஏற்ற வேளாண் கல்வி முறையை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
துவக்க விழாவில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திரு பகீரத் சௌத்ரி மற்றும் திரு ராம் நாத் தாக்கூர், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும் ஐசிஏஆர்-ன் தலைமை இயக்குநருமான டாக்டர் எம் எல் ஜாட் ஆகியோருடன், உயர்நிலை அதிகாரிகளும், முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வேளாண் கல்வியின் வெற்றியை வழங்கப்படும் பட்டங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடக்கூடாது என்றும், மாறாக, அறிவு மற்றும் திறன்கள், விவசாயிகளின் வாழ்வில் கொண்டுவரப்படும் உறுதியான மாற்றம் ஆகியவற்றைக் கொண்டே அளவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேளாண் கல்வியை நடைமுறைக்கு உகந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், விவசாயிகளின் தேவைகளுடன் பொருந்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு ஏற்றவாறு அதை மறுவடிவமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வேளாண் பல்கலைக்கழகங்கள், ஐசிஏஆர், வேளாண் அறிவியல் மையங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்துறை மற்றும் விவசாயிகள் இடையேயான வலுவான ஒத்துழைப்பின் மூலம், ஆராய்ச்சிகள், ஆய்வகங்களிலிருந்து வயல்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாநாடும், உறுதியான முடிவுகளுக்கு வழிவகுத்து, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக ஒரு நவீன, மீள்திறன் கொண்ட மற்றும் வளமான வேளாண் துறையை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, செயல்படுத்தக்கூடிய செயல் திட்டங்களை உருவாக்கி, அதன் விளைவுகளை அளவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303226®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303358)
வருகையாளர் எண்ணிக்கை : 15