குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய தகவல் பணி அதிகாரிகள் சமூக ஊடகங்களை மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்த வேண்டும் - குடியரசுத்தலைவர்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 4:40PM by PIB Chennai

இந்திய தகவல் பணி, இந்தியப் புள்ளியியல் பணி பயிற்சி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்கள். 

அப்போது பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்திய தகவல் பணி, இந்தியப் புள்ளியியல் பணி ஆகியவை வெவ்வேறு பணிகளைக் கொண்டிருந்தாலும் நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுதல் ஆகியவற்றில் பொதுவான நோக்கங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.  பயன்மிக்க தகவல், நம்பகமான தகவல் ஆகியவை மக்களுக்கான ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் என்று தெரிவித்தார்.

பயிற்சி அதிகாரிகள் தங்கள் பணியைத் தொடங்கும்போது, கற்றலை தொடர வேண்டுமென்று குடியரசுத்தலைவர் கூறினார்.  தொழில்நுட்பம், ஊடகம், பொருளாதாரம், பொதுக் கொள்கை ஆகியவற்றைச் சார்ந்து உலகம் விரைவாக மாறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  எப்போதும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் என்றும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  முடிவெடுப்பதில் புத்திக்கூர்மையுடனும், நடத்தையில் கருணையுடனும், நேர்மையைக் காப்பதில் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

மக்களுடன் அரசின் தொடர்பை வலுப்படுத்துவதில் இந்திய தகவல் பணி முக்கியப் பங்காற்றியுள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.  மக்கள் தகவல்களைப் பெறக்கூடிய, பகிரக்கூடிய, பதில் அளிக்கக்கூடிய முறையை சமூக ஊடகங்கள் மாற்றியுள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார். இந்திய தகவல் பணி அதிகாரிகள் சமூக ஊடக தளங்களை மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காகவும், அவர்களை ஈடுபடுத்துவதற்காகவும் மட்டுமின்றி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அதைப் புரிந்துக்கொண்டு அவற்றுக்கு பதில் அளிக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தகவல்கள் மிக விரைவாக பரவும் சூழலில் துல்லியம், நம்பகத்தன்மை, பொது நலன் ஆகியவை என்றும் அவர்களுடைய தகவல் தொடர்புக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301199&reg=3&lang=1

***

SS/IR/SU/SH    


(रिलीज़ आईडी: 2301321) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Malayalam