குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அந்தமானின் செல்லுலார் சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2026 8:03PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறையைப் பார்வையிட்டார்.  இந்தியாவின் சுதந்திரத்திற்காகக் கடும் இன்னல்களைச் சந்தித்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அப்போது அவர் அஞ்சலி செலுத்தினார். அவர் தியாகிகள் நினைவுக் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையிலும் மரியாதை செலுத்தினார். மேலும் 'சுதந்திர சுடர்', கோபுரம், தூக்குமேடை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய இடங்களையும் குடியரசு துணைத்தலைவர் பார்வையிட்டார். சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சியையும் அவர் கண்டு ரசித்தார்.

இந்தப் பயணத்தின்போது பேசிய குடியரசு துணைத்தலைவர், வீர் சாவர்க்கரை ஒரு தனித்துவமான மற்றும் துணிச்சலான புரட்சியாளராகவும், அவரது தீவிர தேசபக்தி பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் குறிப்பிட்டார். செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்த சிறைவாசம் மற்றும் கடுமையான சித்திரவதைகளை நினைவுகூர்ந்த அவர், "சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சிறைக்கு அனுப்பியதன் நோக்கம் அவர்களின் மன உறுதியைச் சிதைப்பதே ஆகும்; எனினும், சாவர்க்கர் மனதளவில் ஒருபோதும் தளரவில்லை. இறுதியில், ஆங்கிலேயர் ஆட்சியே தளர்ந்துபோனது," என்று கூறினார். தீண்டாமை மற்றும் சமூகப் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் சாவர்க்கரின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தியா, அதிக வலிமைமிக்க நாடாக மாற மேற்கொள்ளும் முயற்சிகள், மற்றவர்களுக்கு நிபந்தனைகளை விதிப்பதற்காக அல்ல; மாறாக, "இந்த உலகில் யாராலும் நமக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவே; அதுவே உண்மையான சுதந்திரம்" என்று  திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷிற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) தேவேந்திர குமார் ஜோஷி, மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர். அவருக்கு முறையான காவலர் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

திரு சி. பி. ராதாகிருஷ்ணன், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்தப் பயணத்தின்போது, ‘இல்லந்தோறும் மூவண்ணக் கோடி’ இயக்கத்தைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதுடன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவையும் பார்வையிடுவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296638&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296885) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Malayalam