தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரைப்படத் திருட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கை - 4,996 டெலிகிராம் சேனல்கள் உட்பட 7,393 இணையதள இணைப்புகள் முடக்கம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தகவல்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:38PM by PIB Chennai

டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாகத் திரைப்படங்கள் சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதைத் தடுக்கவும், இணையவழித் திரைப்படத் திருட்டைக் கட்டுப்படுத்தவும் சட்டக் கட்டமைப்பை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளதாக, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர் திரு பாலஷோரி வல்லபனேனி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், திரைப்படங்கள் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்படுவதையும் திரையிடப்படுவதையும் தடுக்கும் வகையில் 1952-ம் ஆண்டின் ஒளிப்பதிவு (சினிமாட்டோகிராஃப்) சட்டத்தில், 2023-ம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் சமூக ஊடக இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஒளிப்பதிவு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான உள்ளடக்கங்களை நீக்கவோ அல்லது அணுகலை முடக்கவோ அரசு அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட முகமையின் அறிவிப்பு கிடைக்கும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டியது சமூக ஊடகங்களின் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

திரைப்படத் திருட்டு தொடர்பான புகார்கள் பெறப்படும் போது, அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க இடைத்தரகர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டு வருகிறது. பதிப்புரிமை உரிமையாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களைப் பரிசீலித்து, திருட்டுத்தனமாகத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள இணையதள இணைப்புகளை முடக்குவதற்காக அமைச்சகத்தில் தனிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதன்படி 1,263 இணையதளங்கள், 4,996 டெலிகிராம் சேனல்கள் உட்பட மொத்தம் 7,393 இணையதள இணைப்புகளை முடக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294899&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2295180) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam