மக்களவை செயலகம்
முன்னாள் மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி-யின் திருவுருவப் படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUL 2026 11:57AM by PIB Chennai
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, முன்னாள் மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி இன்று, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற முக்கிய பிரமுகர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில், சோமநாத் சாட்டர்ஜிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மக்களவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி 1929-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்தார். சிறந்த தொழில்முறை வழக்கறிஞரான இவர், 1968-ல், தீவிர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். 1971-ல், முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றப் பணிக்காலத்தில், சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, அவர் தொடர்ந்து பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, 14-வது மக்களவையின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சாட்டர்ஜி, 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை, அப்பதவியில் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.
அறிவுக்கூர்மை, சிறந்த பேச்சாற்றல், நாடாளுமன்ற விழுமியங்கள் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்புணர்வு போன்ற நற்பண்புகளுக்குப் பெயர் பெற்ற சாட்டர்ஜி, அவையில், தரமான விவாதங்கள் நடைபெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார். இந்திய நாடாளுமன்ற நடைமுறைக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 1996-ம் ஆண்டில் அவருக்கு 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது' வழங்கப்பட்டது.
மக்களவைத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அவையின் செயல்பாடுகளை நவீனமயமாக்கத் தேவையான பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக, 2006-ம் ஆண்டு ஜூலை மாதம், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நாடாளுமன்றத் தொலைக்காட்சியான 'மக்களவை தொலைக்காட்சி' தொடங்கப்படுவதை மேற்பார்வையிட்ட அவர், 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிநவீன வசதிகள் கொண்ட நாடாளுமன்ற அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பழைய மக்களவைக் கட்டிடத்தின் வெளிப் பகுதியில், சோமநாத் சாட்டர்ஜியின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. ஓவியர் திரு மணீஷ் குமார் ராவ் என்பவரால் வரையப்பட்ட இந்த உருவப்படம், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி-யால் திறந்து வைக்கப்பட்டது.
****
(Release ID: 2289278)
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2289347)
வருகையாளர் எண்ணிக்கை : 46