PIB Backgrounder
மண்ணைக் காப்போம், வயல்களைப் பாதுகாப்போம்“ : ஒவ்வொரு அறுவடைக்கும் வளமான மண் அடிப்படையாக உள்ளது”
प्रविष्टि तिथि:
24 JUL 2026 11:50AM by PIB Chennai
இந்தியாவின் வேளாண் அமைப்புகளுக்கு மண்ணே அடித்தளமாக விளங்குகிறது; இது பயிர் உற்பத்திக்கு ஆதரவளித்து, சூழல் அமைப்புகளை நிலைநிறுத்தி, வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கிறது. தொழிலாளர் எண்ணிக்கையில் 46 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக, மண்ணின் ஆரோக்கியம் கிராமப்புற வருவாய், உணவு அமைப்புகள், ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2022-23-ம் ஆண்டின் நிலப் பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்தப் பரப்பளவு 306.65 மில்லியன் ஹெக்டேர் ஆகும், இதில் ஏறத்தாழ 59 சதவீதம் விவசாயப் பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தித்திறனை நிலைநிறுத்துவதிலும், வளர்ந்து வரும் மக்கள்தொகையின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மண்ணின் முக்கியப் பங்கினை இது எடுத்துக்காட்டுகிறது. ஆரோக்கியமான மண் அதிக விளைச்சலைத் தருவதோடு, வெளிப்புற உள்ளீடுகளைச் சார்ந்திருப்பதையும் குறைக்கிறது. இந்தச் சூழலில், 2030-க்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மண் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் இன்றியமையாதவை. குறிப்பாக, பசியில்லா நிலை (இலக்கு 2), பருவநிலை நடவடிக்கை (இலக்கு 13) தொடர்பான இலக்குகளுக்கு இது மிகவும் முக்கியமானது.
இந்த வியூக முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியா நீடித்த மண் மற்றும் நில மேலாண்மையில் தனது கவனத்தை விரிவுபடுத்தியுள்ளது. தேசிய முயற்சிகள் என்பவை பருவநிலை மீள்திறன், இயற்கை வேளாண்மை, மண் வரைபடமாக்கல், டிஜிட்டல் வேளாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்ற முன்னெடுப்புகள், மீள்திறன் மிக்க, திறனுள்ள வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கின்றன. மண் வள அட்டைத் திட்டம் என்பது மண் பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் ஊட்டச்சத்து பயன்பாட்டிற்கும் ஆதரவளிக்கிறது. இந்த முயற்சிகள், பாரம்பரிய வேளாண் நடைமுறைகளிலிருந்து நவீன அறிவியல் அணுகுமுறைகளுக்கு மண் சார்ந்த அறிவியல் பயணத்தைப் பிரதிபலிக்கின்றன.
குறிப்பிடத்தக்க அளவு இயற்கை கார்பன் சேமிப்பு இடமாக மண் செயல்படுவதன் மூலம், பருவநிலை மாற்றத் தணிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மண், வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, அதனை மண்ணின் கரிம கார்பனாகச் சேமிக்கிறது. இந்த நடைமுறை தாவர வளர்ச்சி, வேர்கள் மற்றும் மண் நுண்ணுயிரிகளால் எளிதாக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட கார்பன் நீண்ட காலத்திற்கு மண்ணில் தங்கி, வளிமண்டலத்தில் உள்ள பசுமைக் குடில் வாயுக்களின் செறிவைக் குறைக்க உதவுகிறது. மண்ணில் கரிம கார்பனின் அளவு அதிகரிப்பது, அதன் கட்டமைப்பை மேம்படுத்துகிறது, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கிறது, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதையும் அதிகரிக்கிறது. இது மண்ணின் வளத்தையும், பருவநிலை மாறுபாடுகளுக்கு எதிரான அதன் மீள்திறனையும் மேலும் வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, பருவநிலைக்கேற்ற வேளாண்மையின் முக்கிய அங்கமாக கார்பன் வேளாண்மை உருவாகி வருகிறது. இது, நீடித்த நில மேலாண்மை நடைமுறைகள் மூலம் வளிமண்டல கார்பனை அகற்றி மண்ணில் சேமிப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288740®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2288829)
आगंतुक पटल : 17