பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வான் இலக்கைத் தாக்கும் தொலை தூர ஏவுகணையான குஷாவின் முதல் கட்ட சோதனை வெற்றி

प्रविष्टि तिथि: 23 JUL 2026 7:37PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ,  இன்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து, ‘குஷா’ என்ற வான் இலக்கைத் தாக்கும் தொலை தூர ஏவுகணையின்  முதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. அதிவேகம் மற்றும் அதிக உயரத்தில் இருந்து வரக்கூடிய வான்வழி அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கும் ஒரு மின்னணு இலக்கை நோக்கி இந்த முதல் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, ஏவுகணை அமைப்புமுறை, அந்த இலக்கை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

 

குஷா ஏவுகணை அமைப்புமுறை, பரந்த அளவிலான தொலைவு மற்றும் உயரத்தில், போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள்  மற்றும் எதிரிகளின் பெரிய ரக விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறன் கொண்டது. ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இந்த ஆயுத அமைப்புமுறையின் அனைத்துக் கூறுகளும், டிஆர்டிஓவின் பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் தொழில் துறை பங்காளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

 

ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மிகச் சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இத்தகைய ஏவுகணை அமைப்புமுறையை  உருவாக்கும் திறனை இது வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். இத்தகைய அமைப்புமுறைகளுக்கான இறக்குமதிச் சார்பு  நிலையை இது நீக்குவதுடன், நாட்டின் வான் பாதுகாப்புத் திறனில் ஒரு பெரும் எழுச்சியையும் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

பாதுகாப்புச் செயலாளரும், டிஆர்டிஓ செயலாளர் மற்றும் தலைவருமான திரு ராஜேஷ் குமார் சிங், சோதனையின்போது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்ததுடன், இதில் ஈடுபட்ட குழு உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288526&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2288659) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , हिन्दी , Marathi , Gujarati