பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தோனேசியாவில் நடைபெற்ற சமூக நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 07 JUL 2026 11:47PM by PIB Chennai

மேதகு அதிபர் பிரபோவோ அவர்களே,

எனது அன்பிற்குரிய நண்பர்களே,

சகோதர சகோதரிகளே,

வணக்கம்

'எப்படி இருக்கிறீர்கள்?'

இந்த நாட்களில், உலகம் முழுவதையும் கால்பந்து காய்ச்சல்  ஆக்கிரமித்துள்ளது. இங்கே இந்தோனேசியாவிலும், கால்பந்து மீதான ஆர்வம் உண்மையிலேயே அசாத்தியமானது. அந்த அதே ஆற்றலையும் உற்சாகத்தையும் தான், நீங்கள் அனைவரும் இன்று இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடிய மற்றொரு வியக்கத்தக்க தற்செயல் நிகழ்வு ஒன்று உள்ளது, அதைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் ஒவ்வொரு முறை இந்தோனேசியாவுக்கு வரும்போதும், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல்முறை 2018-ல் ஜகார்த்தாவில் நாம் ஒன்றுகூடினோம். பிறகு 2022-ல் பாலியில் சந்தித்தோம். இப்போது 2026-ல், மீண்டும் ஜகார்த்தாவில் சந்திக்கிறோம். இந்த மூன்று முறையும், இந்தோனேசியா கால்பந்து மீதான உற்சாகத்தாலும் ஆர்வத்தாலும் துடிப்புடன் இருந்தது.

இருப்பினும் நண்பர்களே,

இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்த மூன்று நிகழ்வுகளிலும் ஆட்டநாயகன் ஒருவராகத்தான் இருந்துள்ளார் - இந்தோனேசியாவில் வாழும் நீங்கள் அனைவரும்! உங்கள் ஒவ்வொருவரும்தான் உண்மையான 'ஆட்டநாயகன்கள்'!

நீங்கள் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். துடிப்பான இந்தியாவின் வாழும் அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். இன்று இவ்வளவு பேர் இங்கே கூடியிருப்பதைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நண்பர்களே, இம்முறை நான் தனியாக வரவில்லை. இன்று என்னுடன் எனது அருமை நண்பர், அதிபர் பிரபோவோ அவர்களும் இணைந்துள்ளார்.

இன்றைய உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, அதிபர் பிரபோவோ அவர்களின் அன்பிற்கும், அவர் உதிர்த்த கனிவான வார்த்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் இந்தியாவின் உண்மையான நண்பர். இங்கே வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!!

மேதகு அதிபர் அவர்களே,

எங்கள் விமானம் இந்தோனேசிய வான்வெளிக்குள் நுழைந்த தருணத்திலிருந்தும், நான் இங்கு காலடி வைத்தது முதலும், இந்தோனேசிய மக்கள் எனக்கு அளித்த அன்பும் பாசமும் என்னை நெகிழச் செய்துவிட்டன. இத்தகைய மனமார்ந்த வரவேற்பிற்கு என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகள் போதவில்லை. அதிபர் பிரபோவோ அவர்களே நேரில் விமான நிலையத்திற்கு வந்து, தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் என்னை வரவேற்றது உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.

இந்தோனேசியாவில் இந்திய கலாச்சாரம் மீதான அன்பு, இன்று அதிபர் மாளிகையில் நான் கண்ட காட்சிகளிலும் எதிரொலித்தது. இங்கே உள்ள மக்களின் உற்சாகம், குழந்தைகளின் புன்னகை மற்றும் இளைஞர்களின் ஆற்றல் ஆகியவை உண்மையிலேயே வியக்கத்தக்கவை; அவற்றை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், ஒவ்வொரு முகத்திலும் இந்தியா மீதான அன்பு, மரியாதை மற்றும் நேசம் ஆகியவற்றை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

நண்பர்களே,

இதற்கிடையில், இந்தியத் திரைப்படப் பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' இங்கே மிகவும் பிரபலமாக இருப்பதை நான் கவனித்தேன். இன்று நான் அதிபர் பிரபோவோவிடம் கூறினேன், இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து முன்னேறும்போது, சிறிய அளவில் மாற்றங்கள் மட்டும் ஏற்படுவதில்லை; அதற்கு மேலாகவே அனைத்தும் நிகழ்கின்றன!

நண்பர்களே,

இன்று காலை, இந்தோனேசியாவின் உயரிய விருதை எனக்கு வழங்கி கவுரவித்தார்கள். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அளிக்கப்படும் மரியாதை. இது இந்தியச் சமூகம் சார்ந்த உங்கள் அனைவருக்கும் உரிய கவுரவம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விருது இந்தோனேசியா மற்றும் இந்தியா இடையிலான நெருங்கிய நட்புறவின் மற்றொரு அடையாளமாகும். இந்த மேடையிலிருந்தும், அதிபர் பிரபோவோ அவர்களுக்கும், இந்தோனேசிய அரசுக்கும், இந்தோனேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு, இந்தியா தனது குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. 26, அதாவது 2 மற்றும் 6-ஐக் கூட்டினால்... அதேபோல், எனது நண்பர் 17ம் தேதி பிறந்தவர், அதாவது 1 பிளஸ்...

அதிபர் பிரபோவோ அவர்கள் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்தப் பயணத்தின்போது, பல்வேறு தலைப்புகளில் விரிவான விவாதங்களை மேற்கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் பயணத்தில் நான் இன்று குறிப்பாக நினைவுபடுத்த விரும்பும் ஒரு அம்சம் உண்டு. அதிபர் பிரபோவோ அவர்களும் அதைப் பற்றி மிகுந்த பெருமையுடன் இங்கே குறிப்பிட்டார்.

மேதகு அதிபர் அவர்களே, நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் கூறியதையும், இன்று மீண்டும் கூறியதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதாவது உங்களுக்கு இந்தியாவின் மரபணு இருப்பதாகக் கூறியதுதான் அது. இன்றும் கூட, நீங்கள் அந்தச் சொற்களைக் கூறியபோதுதான் கைதட்டல்கள் அதிர்ந்தன என்பதை நான் கவனித்தேன். இந்தியாவில், நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றுள்ளீர்கள். நீங்கள் கூறிய அந்த ஒரே வாக்கியம் இந்திய மக்களின் இதயங்களைத் தொட்டது.

உங்கள் அந்தச் சிந்தனையை நான் மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த மரபணு, பரஸ்பர நம்பிக்கையால் உருவானது. அந்த மரபணு நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டது. அந்த மரபணு நமது பகிரப்பட்ட நினைவுகளால் செதுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டு கப்பல்களை ஒருவருக்கொருவர் கரைகளுக்குக் கொண்டு சேர்த்த கடல் காற்றுதான் அந்த மரபணுவை வடிவமைத்துள்ளது.

நண்பர்களே,

இந்தியா-இந்தோனேசியா உறவுகளின் இந்த 'மரபணு', அறிவை எல்லைகளுக்குள் சிறை வைக்காமல் பகிர்ந்துகொண்ட துறவிகள் மற்றும் பௌத்த பிக்குகளால் வடிவமைக்கப்பட்டது. வாசனைத் திரவியங்களை வர்த்தகம் செய்தது மட்டுமல்லாமல், கலாச்சாரங்களுக்கு இடையே பாலங்களை உருவாக்கிய தொழில்முனைவோர்களால் இது செதுக்கப்பட்டது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தங்கள் சொந்த மொழிகளில் ஏற்றுக்கொண்டு, அதே நேரத்தில் அவற்றின் பொதுவான ஆன்மாவை அழியாமல் பாதுகாத்த கலைஞர்களால் இந்த 'மரபணு' வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் துடிப்பான மக்களும், இன்று இங்கே கூடியிருக்கும் பல குடும்பங்களும் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை வளர்த்தெடுத்து, வலுப்படுத்தி, தொடர்ந்து மெருகேற்றி வருகிறீர்கள்.

நண்பர்களே,

உலகெங்கிலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பெரும்பாலும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சில நாடுகள் மூலோபாய ரீதியாக நெருக்கமடைகின்றன, மற்றவை வர்த்தகம் மூலம் உறவை ஆழப்படுத்துகின்றன. ஆனால், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவு நாகரிகங்களின் உறவாகும்; இது கடல் சார்ந்த உறவால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.

பேரரசுகள் வந்தன, மறைந்தன; கடல் வழித்தடங்கள் மாறின; உலக அரசியல் பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆனால், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான பிணைப்பு எப்போதும் நீடித்திருக்கிறது. அதுதான் நமது மிகப்பெரிய பலம்.

நண்பர்களே,

இன்று உலகம் 'இணைப்பு' குறித்து பேசுகிறது. ஆனால், நமது முன்னோர்கள் அந்த இணைப்பை ஏற்கனவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்று, நம்பிக்கையின்மை காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகள்  பாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் என்ற பேச்சே இல்லாத காலத்திலேயே, இந்தியா மற்றும் இந்தோனேசியா விநியோகச் சங்கிலிகளில் நம்பிக்கையை உருவாக்கியிருந்தன.

அந்த நம்பிக்கையின் ஊற்றிலிருந்து, இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து புதிய எதிர்காலத்தை இன்று எழுதுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய வளமான எதிர்காலத்தின் மிகப்பெரிய பயனாளிகள்  இந்தோனேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினரான நீங்கள்தான்.

நண்பர்களே,

இன்றைய காலத்தில் நாம் சமூக ஊடக யுகத்தில் வாழ்கிறோம்; இந்த யுகத்தில் 'கொலாப்' (கூட்டு முயற்சி) பற்றியே நிறைய விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இந்தியாவும் இந்தோனேசியாவும் நூற்றாண்டுகளாகவே இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த 'கூட்டு முயற்சி'தான் இந்தோனேசியாவின் குட்டாயில் சமஸ்கிருத கல்வெட்டுகள் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த 'கூட்டு முயற்சி'தான் இங்கிருந்து அறிஞர்களை நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தது.

 

ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெறும் 'பாலி ஜத்ரா' திருவிழாவாக இருக்கட்டும், மகாநதியில் வாழைத் தண்டுகளால் ஆன படகுகளைச் செலுத்தும் மரபாக இருக்கட்டும், 'வயங் குலித்' நிழல் பொம்மலாட்டம் மூலம் மகாபாரதத்தை அரங்கேற்றுவதாக இருக்கட்டும், அல்லது 'வெசாக்' புனிதப் பயணமாக இருக்கட்டும், அல்லது 'தேவி ஸ்ரீ' வழிபாடு என எதுவாக இருந்தாலும், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான இந்த 'கூட்டு முயற்சி' இவை அனைத்திலும் தெளிவாக எதிரொலிக்கிறது.

நண்பர்களே,

இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான கூட்டு முயற்சிகளின் வரலாறு பழமையானது மற்றும் வளமானது. பண்டைய காலங்களில், சுமத்ராவில் உள்ள 'முவாரோ ஜம்பி' நாளந்தாவின் சகோதரி நிறுவனமாகத் திகழ்ந்தது. அந்தப் பழங்கால மரபை நாம் இன்று மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

"நாளந்தா பல்கலைக்கழகம் இன்று புதிய வடிவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த பல மாணவர்களும் படிக்கிறார்கள். நம்முடைய பழங்கால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இரு நாடுகளும் இணைந்து ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்."

நண்பர்களே,

இந்தியாவும் இந்தோனேசியாவும் நம் இதயங்களில் நெருக்கமானவை மட்டுமல்ல, புவியியல் ரீதியாகவும் அண்டை நாடுகளாகும். இந்தியாவின் கிரேட் நிக்கோபார் தீவுக்கும், இந்தோனேசியாவின் ஆச்சே பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 150 கிலோமீட்டர் மட்டுமே. கற்பனை செய்து பாருங்கள்—இந்தியாவின் பல மாநிலங்களை விட, இந்தோனேசியா இந்தியாவின் ஒரு தீவுக்கு மிக அருகில் உள்ளது.

இந்தோனேசியாவுக்கு வரும் ஒவ்வொரு இந்தியரும் இங்கே ஒரு சொந்த உணர்வையே பெறுகின்றனர். அதனால்தான், பல ஆண்டுகளாக நமது இரு நாடுகளும் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மூலம் இணைந்து, நமது உறவின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றன.

இன்று, இந்தியா புதிய துறைமுகங்களைக் கட்டும்போதும், புதிய கப்பல்களை உருவாக்கும்போதும், புதிய கடல் வழித்தடங்களை ஆராயும்போதும், மற்றும் புதிய கூட்டணிகள் மூலம் கடல்சார் வர்த்தகத்தை மேம்படுத்தும்போதும், இந்தோனேசியா நமது விருப்பத்திற்குரிய நண்பனாக நம்முடன் துணை நிற்கிறது.

நண்பர்களே,

இந்தோனேசியாவோ அல்லது இந்தியாவோ, நம் இரு நாடுகளுமே வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க ஆர்வமாக உள்ளன. நாம் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ நமக்கு நேரமும் இல்லை, வாய்ப்பும் இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தோனேசியாவின் முன்னேற்றம் குறித்துப் பேசினார்கள். இந்தியாவிலிருந்து நானும், உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியாவின் பல முன்னேற்றக் கதைகளுடன் வந்திருக்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய நாட்களில், நீங்கள் எப்போது இந்தியா பற்றி கேள்விப்பட்டாலும், தலைப்புச் செய்திகளில் முதலாவதாக இடம் பிடிக்கும் ஒரே விஷயம் இந்தியாவின் பொருளாதாரம் தான். சிலர் இந்தியா பல டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ந்துவிட்டதாகக் கூறுவார்கள். இன்னும் சிலர் அதன் ஜிடிபி வளர்ச்சியைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த 10-12 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பற்றி சிலர் உங்களுக்குச் சொல்வார்கள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக, பல சாதனைகளை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

இன்று, உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியப் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றி வருகிறது. கோவிட் பெருந்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டிருந்த போதும், இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிவிடவில்லை. மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் நெருக்கடியின் போதும், இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறையவில்லை. சொல்லப்போனால், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டில், நமது வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது.

இந்த வேகமும் முன்னேற்றமும் தற்செயலாக வந்தவை அல்ல. இந்தியா பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம், அதனால்தான் இன்று நாடு மாற்றமடைந்து வருகிறது. "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற மந்திரத்துடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.

நண்பர்களே,

இன்று இந்தியா அடைந்துள்ள இந்த வளர்ச்சி, 140 கோடி மக்களின் கனவுகளின் வளர்ச்சியாகும். இது லட்சக்கணக்கான இந்தியர்களின் விருப்பங்களின் வளர்ச்சியாகும். நீங்கள் அனைவரும் அந்தக் கனவின் ஒரு அங்கமே. இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் அந்தக் கனவின் பங்காளியே.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், நான் இவ்வாறு சொல்வேன்: "செயல்பாட்டில் இருக்கும் 140 கோடி மக்களின் விருப்பங்கள்". இன்று, நமது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் லட்சியங்களால் நிரம்பியிருக்கிறார்கள். "ஆம், நம்மால் வெற்றியை அடைய முடியும்" என்ற நம்பிக்கை இன்று அனைவரிடமும் வளர்ந்து வருகிறது.

நண்பர்களே,

இதற்கு ஒரு உதாரணத்தைத் தருகிறேன். சொந்தமாக வீடு வைத்திருப்பது ஒவ்வொரு தனிமனிதனின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது இந்தியாவின் இந்த புள்ளிவிவரத்தைக் கவனியுங்கள்: கடந்த 10-12 ஆண்டுகளில், இந்தியாவில் அரசாங்கம் ஏழைக் குடும்பங்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. பல நாடுகளில் மொத்த வீடுகளின் எண்ணிக்கையே இவ்வளவு அதிகமாக இருக்காது.

நண்பர்களே,

மக்கள் தங்களுக்கு என்று ஒரு சொந்த வீட்டைப் பெறும்போது, அவர்கள் கண்ணியத்துடன் தங்கள் வாழ்க்கையை வாழ முற்படும்போது, கோடிக்கணக்கான இந்தியர்களின் விருப்பங்கள் வேகம் பெறுகின்றன; அவர்களின் கனவுகள் நனவாகத் தொடங்குகின்றன.

நண்பர்களே,

இந்தியாவில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டம் குறித்த ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் சுமார் 25 கோடி மக்கள் மட்டுமே சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தனர். இன்று, ஏறக்குறைய 100 கோடி இந்தியர்கள் சமூகப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கும் அடுத்த புள்ளிவிவரம் உங்களை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும்.

இந்தியாவில் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இது ஒரு கோப்பை காபியின் விலையை விடக் குறைவு. உலகின் வேறு எங்கும் இத்தகைய திட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் அது இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 60 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்ற மற்றொரு திட்டமும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு சுமார் 1.5 ரூபாய் பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு வெறும் 1.5 ரூபாய் மட்டுமே, ஒரு கோப்பை காபியின் விலை கூட இதைவிட அதிகம். தற்போது, இந்தியாவில் 28 கோடி மக்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

நண்பர்களே,

இந்த இரண்டு அரசுத் திட்டங்களின் கீழ், இதுவரை பயனாளிகளுக்கு சுமார் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 22,000 கோடி ரூபாய்! மக்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமான காலங்களை எதிர்கொண்டபோது, அரசாங்கம் ஒரு கூட்டாளியாக அவர்களுடன் நின்று, அவர்களுக்கு ஆதரவை வழங்கியது.

நண்பர்களே,

இன்று, இந்தியா முன்னெப்போதும் இல்லாத மற்றும் வியக்கத்தக்க மற்றொரு அமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதுதான் 'நேரடிப் பணப் பரிமாற்ற முறை' இது கசிவுகள் எதுவுமின்றி, முழுப் பயனும் பயனாளியைச் சென்றடைவதை உறுதி செய்யும் சிறந்த நிர்வாக ஏற்பாடாகும்.

ஒரு பெருமகன் என்னிடம் வந்து, வங்காளத்தைப் பற்றிய எனது பார்வை என்ன என்று கேட்டார். அதுதான் இந்த தொலைநோக்குப் பார்வை... நேரடிப் பணப் பரிமாற்றம். கசிவுகளுக்கு இடமே இல்லை.

அரசாங்கம் வழங்கும் உதவித் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே செல்கிறது. கடந்த 12 ஆண்டுகளில், சுமார் 50 லட்சம் கோடி ரூபாய், அதாவது 50 டிரில்லியன் ரூபாய், நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

நண்பர்களே,

இத்தகைய அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது, அது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது மற்றும் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக, 25 கோடி இந்தியர்கள் வறுமையை வென்று, அதிலிருந்து மீண்டு, பெருமையுடனும் கண்ணியத்துடனும் வாழத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களே,

மற்றொரு புள்ளிவிவரத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில்  சுமார் 50 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகின்றன என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உலகத்தின் மொத்த பரிவர்த்தனைகளில் இது 50 சதவீதமாகும்.

இன்று, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 75 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. 75 கோடிக்கும் மேல்! இதன் பொருள் என்னவென்றால், அன்றாட வாழ்க்கையில் மக்கள் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், மக்கள் தங்கள் டெபிட் கார்டுகளின்  ரகசிய எண்களையும், வங்கி ஏடிஎம் கடவுச்சொற்களையும் கூட மறக்கத் தொடங்கும் நிலைக்கு நிலைமை வந்துவிட்டது; ஏனென்றால், இன்று அனைத்தும் யுபிஐ மூலம், வெறும் மொபைல் போனைப் பயன்படுத்தி எளிதாகச் செய்யப்படுகின்றன.

நண்பர்களே,

கனவுகள் பெரிதாக இருக்கும்போது, அரசாங்கம் செயல்படும் வேகமும் அதற்கேற்ப அதிகரிக்கிறது. இன்று நீங்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும், எங்கும் நெடுஞ்சாலைகளும் அதிவேகச் சாலைகளும் கட்டப்படுவதைக் காண்பீர்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுவும் உலகில் அதிவேகமான கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்த காலகட்டத்தில், இந்தியாவில் அதிவேகச் சாலைகளின் நீளம் சுமார் 100 கிலோமீட்டரிலிருந்து 3,000 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

இந்த மாபெரும் கனவுகளைச் செயல்படுத்தும் சக்தியாக இந்தியாவின் இளைஞர்கள் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில், உலகளாவிய கியூஎஸ் தரவரிசையில் இடம்பிடித்த இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 11-லிருந்து 50க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

 

இன்று, இந்தியாவின் இளைஞர்கள் பெருமளவில் காப்புரிமைகளை பதிவு செய்து, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர். அதனால்தான், இன்று இந்தியா 2 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 2 லட்சத்திற்கும் மேல்! சுமார் 125 யூனிகார்ன் நிறுவனங்களும் இங்கே உள்ளன.

அதனால்தான் நான் கூறுகிறேன், இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல; இந்தியா 100 கோடிக்கும் அதிகமான கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கும் நாடும் கூட.

நண்பர்களே,

நாங்கள் இந்தியர்கள், புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவை விரும்பி உண்பவர்கள். அதுவும் சூடாகப் பரிமாறப்பட்டால், இன்னும் கூடுதல் சுவைதான். எனவே, இந்தியாவின் திறமைக்கு மிக சமீபத்திய உதாரணத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

இந்தோனேசியா வருவதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜூலை 4-ஆம் தேதி, ஒரே நாளில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரே நாளில் ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள். இந்த அளவில்தான் இந்தியா இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

ஜூலை 4-ம் தேதி, இந்தியா ஒரு முக்கியமான புதிய சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி வைத்தது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு வியக்கத்தக்கது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எஃகின் அளவைக் கொண்டு, 40 புதிய ஈபிள் கோபுரங்களையோ அல்லது 5 புர்ஜ் கலிஃபாக்களையோ கட்டிவிட முடியும்.

இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கேபிள்களின் நீளம், பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு போதுமானது. இத்தகைய திட்டங்களால்தான், சுத்திகரிப்புத் திறனில் இந்தியா இன்று உலகின் முதல் 4 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

நண்பர்களே,

அதே ஜூலை 4-ம் தேதி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தைத் தவிர, ஜோத்பூரில் ஒரு பிரம்மாண்டமான புதிய விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. சிறிய நகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கு இடையிலான வான்வழி இணைப்பை விரிவுபடுத்த 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'உடான்' திட்டம் தொடங்கப்பட்டது. அதே நாளில் ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. மேலும், அன்றுதான் இந்தியாவின் மூன்றாவது செமிகண்டக்டர் ஆலை தனது செயல்பாட்டைத் தொடங்கியது.

இதன் பொருள், எரிசக்தி மற்றும் இணைப்பு முதல் சிப் தயாரிப்பு வரை, இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது!

நண்பர்களே,

இன்று இந்தியா தனது சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நட்பு நாடுகளின் விருப்பங்களுடனும் உறுதுணையாக நிற்கிறது. அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக என்ற மந்திரத்தால் இந்தியா வழிநடத்தப்படுகிறது. அதனால்தான், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அவற்றை புதிய சாத்தியக் கூறுகளுடன் இணைக்கவும் இந்தியா தனது பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இந்தியாவின் தற்சார்பை நோக்கிய பயணம், இந்தோனேசியா மற்றும் முழு ஆசியான் பிராந்தியத்திற்கும் ஒரு உந்து சக்தியாக உள்ளது. உதாரணமாக, சுகாதாரத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உலகில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஐந்து பொதுவான மருந்துகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. யுனிசெஃப் வாங்கும் தடுப்பூசிகளில் ஏறக்குறைய 60 சதவீதம் இந்தியாவிலிருந்தே வருகின்றன. இந்த முழுப் பிராந்தியமும் இதனால் பயனடைகிறது. எங்கள் நண்பர்களுக்காக நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம்.

நண்பர்களே,

இந்தியா குறித்து உங்களிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். இப்போது உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் இந்தோனேசிய நண்பர்களிடம் இந்தியாவைப் பற்றிச் சொல்லுங்கள், அவர்கள் இந்தியாவிற்குச் சுற்றுலா வர அவர்களை ஊக்குவியுங்கள்.

இன்று, ஜகார்த்தாவிலிருந்து மும்பைக்கும், பாலிலிருந்து தில்லி மற்றும் பெங்களூருவிற்கும் பல நேரடி விமான சேவைகள் உள்ளன. இது இந்தியாவிற்கு வந்து செல்வதை முன்பை விட மிகவும் எளிதாக்கியுள்ளது.

நண்பர்களே,

இங்கே வாழும் இந்தியச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் நீங்கள் இந்தியாவைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். இந்தோனேசியாவில், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இந்தியாவை அறிந்துகொள் வினாடி-வினா போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இங்கே ஏராளமான குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழாவின் போதே, உங்கள் அனைவரிடமும் இருந்த அபரிமிதமான உற்சாகத்தை நான் நேரில் கண்டேன்.

இந்த வினாடி-வினா போட்டியின் ஆறாவது பதிப்பில், பழைய தேர்வு முறையை மாற்றி, முழுப் போட்டியையும் ஒரு விளையாட்டு அனுபவமாக மாற்றியுள்ளோம். இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறும், உங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

"இந்தியாவும் இந்தோனேசியாவும் நமது வரலாற்றுப் பிணைப்பால் மட்டுமல்ல, ஒரு பொதுவான எதிர்காலத்தின் மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. நம் இரு நாடுகளின் வாய்ப்புகளும், சவால்களும் ஒன்றே. சர்வதேச யோகா தினத்தில் நாம் இணைந்து யோகா செய்கிறோம்; சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் தோழமையோடு நாம் ஒன்றாக நின்று எதிர்கொள்கிறோம்."

நமது இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை மிகப்பெரிய பலத்தின் ஆதாரமாகும். அதை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் வளமான எதிர்காலத்திற்கு நீங்கள் அனைவரும் மிக முக்கியமான கண்ணிகளாக இருக்கிறீர்கள். இந்தத் தகுதியை நீங்கள் தொடர்ந்து வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும்.

இந்த வார்த்தைகளுடன், எனது அன்பிற்குரிய நண்பர் அதிபர் பிரபோவோ அவர்களுக்கும், இந்தோனேசிய மக்களுக்கும் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் இந்தோனேசியாவும், என்றென்றும் நண்பர்கள்

மிக்க நன்றி.

நாளை, அதிபர் அவர்களுடன் இணைந்து நான் புனிதமான கோவிலுக்குச் செல்லவிருக்கிறேன். நாளை என்ன தேதி என்பதைச் சிந்தியுங்கள்? அதுவே நமது பிணைப்பு எவ்வளவு வலிமையானது என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் முன்னெடுப்புகள் பலவற்றை அதிபர் பிரபோவோவிடம் பகிர்ந்து கொண்டேன்; அவற்றுக்கு எந்தக் காப்புரிமையும் கிடையாது என்று நான் உறுதியளிக்கிறேன். எந்தக் காப்புரிமையும் இல்லை, எந்த ராயல்டி கோரிக்கையும் இல்லை. அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சி என்பதே எமது வழிகாட்டும் மந்திரம்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.

(Release ID: 2282309)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2286649) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam