பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தோனேசிய அதிபருடனான கூட்டு ஊடக சந்திப்பில், பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 07 JUL 2026 12:37PM by PIB Chennai

மாண்புமிகு அதிபர் பிரபோவோ அவர்களே,

இரு நாடுகளையும் சேர்ந்த மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

செலாமத் சியாங்!

முதலில், எனது நண்பர் அதிபர் பிரபோவோ அவர்களுக்கு, எனக்கு அளித்த அன்பான மற்றும் கனிவான வரவேற்பிற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு, இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக அதிபர் பிரபோவோ அவர்களை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொண்டோம். இன்று, அவரது அன்பான மற்றும் கனிவான அழைப்பின் பேரில் இந்தோனேசியாவிற்கு வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இன்று காலை, இந்தோனேசியாவின் உயரிய விருதை மிகுந்த அன்போடும் மரியாதையோடும் பெற்றதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்குச் சொந்தமானது. இது இந்தோனேசிய மக்களின் நற்பெயரை வெளிப்படுத்துவதுடன், இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நீடித்த நட்பு பிணைப்பிற்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது. இந்த உயரிய கவுரவத்திற்காக அதிபர் பிரபோவோ அவர்களுக்கும், இந்தோனேசிய அரசாங்கத்திற்கும், இந்தோனேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையிலான உறவு புதிய ஆற்றலையும், அதிக நம்பிக்கையையும் மற்றும் ஆழமான உத்திசார்ந்த முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

2018-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நமது 'விரிவான உத்திசார் கூட்டாண்மை' இன்று புதிய உயரங்களை எட்டி வருகிறது. மேம்பாடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளிலும் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறோம்.

இந்தியா - இந்தோனேசிய கூட்டாண்மையில் இன்று ஒரு பொற்காலத்தின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த புதிய அத்தியாயம் 21ம் நூற்றாண்டின் உலகிற்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு ஆழமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களே,

நமது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நம்பிக்கை, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் துறைகளில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. பாதுகாப்புப் பரிமாற்றங்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றில் கூட்டு முயற்சியை மேலும் மேம்படுத்த இன்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நமது இரு நாடுகளின் கடலோரக் காவல்படைகளும் இப்போது இணைந்து செயல்படவுள்ளன. கடல்சார் நாடுகளாகிய நாம் இருவரும், நீலப் பொருளாதாரம் துறைமுக மேம்பாடு மற்றும் கடல்சார் வர்த்தகம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கும், வறுமையை ஒழிப்பதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நலத்திட்டப் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்வதும் மிக உயர்ந்த முன்னுரிமைகளாக உள்ளன. மதிய உணவுத் திட்டம் மற்றும் பொது விநியோக முறை தொடர்பான நமது அனுபவங்களையும் தீர்வுகளையும் இந்தோனேசியாவுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்த ஒத்துழைப்பை இப்போது அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறோம்.

சுகாதாரத் துறையில் நமது ஒத்துழைப்பு, இரு நாடுகளிலும் தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இன்று கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், இந்தியாவின் உயர்தரமான மருந்துகளை குறைந்த விலையில் இந்தோனேசிய மக்கள் எளிதில் பெறுவதற்கு வழிவகுக்கும்.

இந்தோனேசியாவின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும் நாங்கள் பங்களிப்போம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோதுமை ரகங்களை வழங்குவது, இந்தோனேசியாவின் உணவுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். கூடுதலாக, நிலையான விவசாயம் மற்றும் வேளாண் தொழில்நுட்பத்தில் சிறந்த நடைமுறைகளை நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்.

நண்பர்களே,

21ம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்பத்தால் உந்தப்படும் ஒரு நூற்றாண்டாகும். இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுமே தங்கள் இளைஞர்களின் ஆற்றலால் இயங்கும் நாடுகள். நமது இளைஞர்களுக்குத் தொழில்நுட்பத்தின் மீது இயல்பான ஈர்ப்பு உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு போன்ற துறைகளில் நமது இளைஞர்களுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த இன்று ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை நாங்கள் முடித்துள்ளோம். நமது இரு நாடுகளின் புத்தொழில் கட்டமைப்பு' இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

புகழ்மிக்க இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம் பெங்களூருவின் வெளிநாட்டு வளாகத்தை இந்தோனேசியாவில் நிறுவவிருக்கிறோம். இது ஆசியான் பிராந்தியம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்குப் பெரும் பயன் அளிக்கும்.

விண்வெளித் துறையில் நமது ஒத்துழைப்பு பல தசாப்த கால நம்பிக்கையையும் கூட்டாண்மையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த வலுவான அடித்தளத்தின் மீது, விண்வெளித் துறையில் கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு இன்று முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

நண்பர்களே,

இன்றைய உலகில், தொழில்நுட்பத்தில் "விநியோகச் சங்கிலி மீளும் திறன்" என்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. முக்கியமான கனிமங்கள் மற்றும் எஃகு துறைகளில் விநியோகச் சங்கிலியின் மீண்டு வருவதற்கான சூழலை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் நாங்கள் முடித்துள்ளோம். கூடுதலாக, துருப்பிடிக்காத எஃகு மற்றும் அரிதான புவி காந்தங்கள் துறையில் நமது நிறுவனங்கள் கூட்டாண்மையின் புதிய கட்டத்தைத் தொடங்குகின்றன.

நண்பர்களே,

மக்களுக்கு இடையிலான உறவுகளே நமது நட்பின் மிகப்பெரிய பலமாகும். இந்தியாவின் ஒருங்கிணைந்த யுபிஐ பணப் பரிவர்த்தனை இந்தோனேசியாவின் கட்டண முறையுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் செய்வதையும், பயணம் செய்வதையும் மேலும் எளிதாக்கும்.

 

நண்பர்களே,

நாளை, பிராம்பனான் கோவிலின் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்க, அதிபர் பிரபோவோவுடன் யோக்யகர்த்தாவில் இணைந்துகொள்ளும் சிறப்பைப் பெறுகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பிராம்பனான் கோவில், இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் பொதுவான கலாச்சார பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத அடையாளமாகத் திகழ்கிறது.

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் இந்தோனேசியாவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் நூற்றாண்டு விழாவையும் நமது இரு நாடுகளும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடவுள்ளன. இந்தோனேசியாவின் குறிப்பிடத்தக்க தேசத்தைக் கட்டமைக்கும் பயணத்தில், தொலைநோக்கு பார்வை கொண்ட கல்வியாளரும், அந்த நாட்டின் முதல் கல்வி அமைச்சருமான கி ஹஜார் தேவந்தராவின் பங்கு மிக முக்கியமானது. அவரது கல்வித் தத்துவம், குருதேவ் தாகூரின் கருத்துக்களால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தது. இந்த பகிரப்பட்ட அறிவுசார் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்த நூற்றாண்டு விழாவை "தாகூர்-தேவந்தரா கலாச்சார மற்றும் கல்வி ராஜதந்திர ஆண்டு" என இந்தியா மற்றும் இந்தோனேசியா இணைந்து கொண்டாடும்.

நண்பர்களே,

ஜனநாயக விழுமியங்களும், வேற்றுமையில் ஒற்றுமையும் நீண்டகாலமாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் பகிரப்பட்ட பலமாக இருந்து வருகின்றன. இன்று நமது இரு நாடுகளின் தேர்தல் ஆணையங்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், நமது ஜனநாயக ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் இந்தோனேசியா உலகளாவிய விவகாரங்களிலும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழப்படுத்தி வருகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது பார்வைகளில் வலுவான ஒற்றுமை உள்ளது. ஆசியான் அமைப்பின் மையத்தன்மைக்கு இந்தியா எப்போதும் சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வந்துள்ளது.

உலகளாவிய கொந்தளிப்பு நிலவும் இந்தக் காலகட்டத்தில், உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின் பங்கு முன்னெப்போதையும் விட இன்று மிகவும் முக்கியமானது என்று இந்தியா நம்புகிறது. பாலஸ்தீன விவகாரத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தொடர்ந்து 'இரு நாட்டுத் தீர்வை' ஆதரிக்கிறோம் மற்றும் நீடித்த அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.

நண்பர்களே,

நமது இரு நாடுகளுக்கும் ஒரு பொற்காலம் தற்போது வாசலில் வந்து நிற்கிறது.

நமது வரலாறு பொதுவான கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது,

நமது நிகழ்காலம் பரஸ்பர நம்பிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளது,

மற்றும் நமது எதிர்காலம் பகிரப்பட்ட வளமையால் வரையறுக்கப்படுகிறது.

நாம் இருவரும் இணைந்து, பொற்கால இந்தோனேசியா தொலைநோக்குப் பார்வையையும், வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது உறுதியையும் நனவாக்குவோம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

மிக்க நன்றி.

(பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான தமிழாக்கமாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.)

(Release ID: 2281904)

***

AD/VK/PD


(रिलीज़ आईडी: 2286526) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam