வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஸ்பெயின் பொருளாதாரக் கூட்டாண்மையை ஆழப்படுத்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஸ்பெயின் பயணத்தைத் தொடங்கினார்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 10:48AM by PIB Chennai

இந்தியா-ஸ்பெயின் பொருளாதாரக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதையும், வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், தொழில்துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தனது அரசுமுறைப் பயணத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2026 ஜூலை 13 அன்று தொடங்கினார். இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும், முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாடுகளும் தங்களின் 70 ஆண்டுகால தூதரக உறவுகளைக் கொண்டாடுவதாலும், இந்தியா-ஸ்பெயின் இருதரப்புக் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டு 2026-ஐ கொண்டாடுவதாலும் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்பெயின் அரசின் மூத்த உறுப்பினர்களுடன் உயர்நிலை இருதரப்பு சந்திப்புகளையும் அமைச்சர் நடத்தினார். வணிகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு முகமைகளுடன் கலந்துரையாடினார், இந்தியா-ஸ்பெயின் வணிக மன்றத்தில் உரையாற்றினார். பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், பரந்த தொழில் கூட்டாண்மைகளை எளிதாக்குவதற்கும், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் வளர்ந்து வரும் வாய்ப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கும் இந்திய வணிகக் குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

ஸ்பெயின் அரசின் முதல்நிலை துணை அதிபரும், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான திரு கார்லோஸ் குவெர்போ கபல்லேரோவை திரு கோயல் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது, வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவது, புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை ஊக்குவிப்பது, பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய துறைகளைக் கண்டறிவது ஆகியவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஸ்பெயின் நாட்டின் தொழில், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜோர்டி ஹெரூ போஹரையும் அமைச்சர் சந்தித்தார். தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நிலையான உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில்நுட்பக் கூட்டாண்மைகளுக்கு ஆதரவளித்தல், தூய்மை எரிசக்தி, போக்குவரத்து, மேம்பட்ட உற்பத்தி, சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவர்களின் கலந்துரையாடல் அமைந்தது.

ஜூலை 13 நிகழ்ச்சிகளின் நிறைவில், ஃபிக்கி தலைமையிலான இந்திய வர்த்தகக் குழுவின் உறுப்பினர்களுடன் திரு கோயல் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் அமர்வின் போது, ​​பயணத்தில் கண்டறியப்பட்ட வாய்ப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களுடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். வரும் ஆண்டுகளில் ஸ்பெயினுடன் இந்திய முதலீடுகளையும் வர்த்தகக் கூட்டாண்மைகளையும் அதிகரிக்க அவர் ஊக்குவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284360&reg=3&lang=1

 

***

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2284429) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati