உள்துறை அமைச்சகம்
குஜராத்தில் மியாவாகி முறையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 3.61 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் உலக சாதனை- மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு
प्रविष्टि तिथि:
12 JUL 2026 7:59PM by PIB Chennai
மியாவாகி முறையைப் பயன்படுத்தி ஒரே மணி நேரத்தில் 3.61 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக, அகமதாபாத் மாநகராட்சிக்கும், இதனுடன் தொடர்புடைய 25,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கும், காந்திநகர் மக்களவைத் தொகுதி மக்களுக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரும், காந்திநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அமித் ஷா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இன்று ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்ற பிரச்சாரம், இயற்கையைப் பாதுகாக்கும் உன்னதமான பணியுடன் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடிமக்களை இணைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியதன் மூலம், காந்திநகர் மக்களவைத் தொகுதி இந்த இயக்கத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஆக்ஸிஜன் பூங்காக்களின் உருவாக்கம், பெருமளவிலான மரக்கன்றுகளின் நடவு, குளங்களின் சீரமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பல்வேறு மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் "இயற்கையுடன் இணைந்த முன்னேற்றம்", "நிலையான வளர்ச்சி" ஆகிய தொலைநோக்குப்பார்வை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக திரு அமித் ஷா தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி ஆகிய துறைகளில் காந்திநகர் மக்களவைத் தொகுதி இன்று நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தில் இணையுமாறும், அதிக மரங்களை நட்டு, தாங்கள் நட்ட மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்குமாறும் அமைச்சர் மக்களைக் கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய இயக்கங்கள், எதிர்கால சந்ததியினருக்குத் தூய்மையான, பசுமையான, சூழலியல் சமநிலை கொண்ட சூழலை உறுதி செய்வதுடன், வளர்ச்சியடைந்த இந்தியா கட்டமைப்பிலும் முக்கியப் பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283926®=3&lang=1
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2284114)
आगंतुक पटल : 19