பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் - சில விளக்கங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUL 2026 9:16AM by PIB Chennai
பெட்ரோலியம் அமைச்சகம், எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம் குறித்த தவறான தகவல்களைக் களைந்து, உண்மையான விளக்கங்களை அளித்து, 2026 ஜூன் 23 அன்று ஒரு பத்திரிக்கை வெளியீட்டின் மூலம் ஏற்கனவே ஒரு விரிவான விளக்கத்தை வெளியிட்டிருந்தது. வாகன உற்பத்தியாளர்களும் 2026 ஜூலை 4 அன்று நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இத்திட்டம் குறித்து விளக்கங்களை வெளியிட்டனர்.
இந்த விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் தொடர்பாக சில கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. பின்வரும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு, உண்மை அடிப்படையிலான பதில்கள்.
கேள்வி: பிரேசில் போன்ற நாடுகள் பல பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டபோது, இந்தியா ஏன் தனது எத்தனால் கலப்பு இலக்குகளை அடைவதில் அவசரம் காட்டியது போல் தோன்றுகிறதே?
பதில்: முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், எத்தனால் ஒரு புதிய எரிபொருள் அல்ல. நாம் எத்தனாலைக் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஹென்றி ஃபோர்டு தனது மாடல் டி காரை எத்தனாலில் இயங்குமாறு வடிவமைத்தார். மேலும், பிரேசில், அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல தசாப்தங்களாக எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தி வருகின்றன.
அதேபோல் முக்கியமாக, இந்தியாவின் எத்தனால் கலப்புத் திட்டம் தற்போதைய அரசின் கீழ் தொடங்கப்படவில்லை. இந்த முயற்சிக்கு ஒரு நீண்ட நிறுவன வரலாறும் மைல்கற்களும் உண்டு.
2001-ல் ஒரு முன்னோட்ட எத்தனால் கலப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, 2004-ல் முறையாக அறிவிக்கப்பட்டு, 2006-க்குள் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், 2013 ஜனவரி மாதம் அரசிதழில் கொள்கைக் கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது. இவை பொது ஆவணங்களாகும்.
எத்தனாலை ஒரு எரிபொருளாகப் பயன்படுத்துவதை யாரும் கேள்வி கேட்கவில்லை. அது ஏற்கெனவே உலகளவில் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இந்தியா எவ்வாறு போதுமான அளவு எத்தனாலை உற்பத்தி செய்வது என்பதே உண்மையான சவாலாக இருந்தது.
எனவே, இந்தியா எத்தனால் கலப்புக்குள் 'அவசரப்பட்டது' என்ற கூற்று, உண்மை அல்ல.
கேள்வி: தூய பெட்ரோல், எத்தனால் கலப்பு ஆகியவற்றை வாங்குவதற்கான விருப்பத் தேர்வு நுகர்வோருக்கு ஏன் இல்லை?
பதில்: இந்தியா அதிக எத்தனால் கலவையை நோக்கி நகர முடிவு செய்தபோது, வாகனத் தொழில் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபடுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் குழுவின் செயல்திட்டம் 2021-ம் ஆண்டிலிருந்தே பொதுவெளியில் இருந்து, 20% எத்தனை நாள் கலப்பை அடைவதற்கான ஒரு சீரான பாதையை வகுத்திருந்தது. இ20 எத்தனால் கலப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, முழு சூழலமைப்பிலும் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, வாகன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சோதனை முகமைகள், பிற சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசு பல சுற்று விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த முடிவுகளில் வாகன உற்பத்தியாளர்கள் முழுமையாகத் திருப்தி அடைந்தனர்.
ஆகவே, உண்மையான தூய்மையான, வேகமான, குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் எரிபொருள் கிடைக்கும்போது, நாம் ஏன் வேண்டுமென்றே தரம் குறைந்த ஒரு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் சுத்தமான பெட்ரோல், 10% எத்தனால் கலப்பு, 20% எத்தனால் கலப்பு பெட்ரோல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் இருப்பு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையானது, இந்தியாவின் எரிபொருள் விநியோக கட்டமைப்பின் யதார்த்தங்களையும் புறக்கணிக்கிறது.
முன்னேற்றம் என்பது மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதே ஆகும்.
20 சதவீதம் எத்தனால் கலப்பு என்பது தூய்மையான எரிப்பு, குறைந்த மாசு வெளியேற்றம், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைதல், இந்திய விவசாயிகளுக்கு அதிக வருமானம், நாட்டிற்கு மேம்பட்ட எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
ஒரு மேம்பட்ட எரிபொருள் அறிவியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டு, விரிவாகச் சோதிக்கப்பட்டு, வாகனத் தொழில்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், தரம் குறைந்த நிலைக்குப் பின்வாங்காமல், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதே நோக்கமாக இருக்க வேண்டும்.
கேள்வி : இ20 ஆனது ரப்பர் பாகங்களைச் சேதப்படுத்துகிறது, பழைய வாகனங்களின் இன்ஜின்களைப் பாதிக்கிறது என்ற கவலைகள் உள்ளன. பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டுமா?
பதில் : இந்தியாவின் எத்தனால் திட்டம் வளர்ந்ததைப் போலவே, அதைச் சுற்றியுள்ள தவறான தகவல்களும் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒரு புதிய வதந்தி வெளிவருகிறது. ரப்பர் குழாய்கள் பழுதடையும், இயந்திரங்கள் செயலிழந்துவிடும், எரிபொருள் தொட்டிகள் அரித்துவிடும் என்பன போன்ற கூற்றுகளில் உண்மை இல்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283118®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2283753)
வருகையாளர் எண்ணிக்கை : 58