பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் மகேந்திரகிரி கப்பல் கடற்படையில் இணைப்பு
प्रविष्टि तिथि:
11 JUL 2026 12:56PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற விழாவில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேம்பட்ட மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் மகேந்திரகிரி' கிழக்கு கடற்படையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் தமது உரையில், இந்த முன்னணிப் போர்க்கப்பல், அதன் சிறப்பான வடிவமைப்புத் திறன்களால் இந்தியாவின் வளர்ந்து வரும் தற்சார்பு அம்சத்தின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறது என்று கூறினார்.
ஐஎன்எஸ் மகேந்திரகிரி, உலகின் அதிவேகமான, மிகவும் சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என அவர் தெரிவித்தார். மேலும், இது நீண்ட தூரங்களில் வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட பல்நோக்கு ரேடார், தரை-வான் ஏவுகணைகளின் கலவையையும் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தத் திறன்கள் அனைத்தும் இந்தப் போர்க்கப்பலை வலிமையானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் ஆக்குகின்றன என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், இந்தக் கப்பல் இந்தியாவின் கடல்சார் நலன்களைக் கடலோரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், ஆழ்கடலிலும் பாதுகாக்கும் என்றார்.
ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, இணையவழிப் போர், விண்வெளி சார்ந்த திறன்கள், அதிவேக ஆயுதங்கள், ஆளில்லா அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை கணிசமாக மாற்றியமைத்துள்ளன என்றாலும், மரபுவழி ராணுவத் திறன்களே திறம்பட்ட பாதுகாப்பிற்கு அடித்தளமாகத் தொடர்ந்து விளங்குகின்றன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடத்தப்படலாம் எனவும் ஆனால் அவை தேசிய உறுதிப்பாடு, பயிற்சி பெற்ற வீரர்கள், நம்பகமான ராணுவ சக்தியால் வெல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது மரபுசார் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொண்டே வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சமச்சீரான அணுகுமுறையைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர்க்கப்பல் கட்டுமானம் என்பது, வடிவமைப்புத் திறன்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம், திறமையான மனிதவளம், ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த கடல்சார் தொழில்துறை சூழலமைப்பையும் வலுப்படுத்துகிறது என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283586®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283618)
आगंतुक पटल : 19