பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 10:24PM by PIB Chennai
இசை, மன வேட்கை, ஆராதனை - இத்தகைய மங்களகரமான தொடக்கத்திற்குப் பிறகு, உங்கள் நிகழ்ச்சி இன்னும் நீண்ட நேரம் தொடர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இப்போது பல மொழிகளில் ஒளிபரப்பாகும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள நண்பர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். நாள் முழுவதும் செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளில், உடனுக்குடன் வரும் செய்திகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும், ஒட்டுமொத்த உலகமே பிரேக்கிங் நியூஸ் என்ற நிலையிலேயே இருப்பது போலத் தோன்றுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும், இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து பங்கேற்றுள்ள உங்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகள். இந்த முறை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள விவாதத் தலைப்பு மிகவும் முக்கியமானது: பெரும் வல்லரசு இந்தியா: தேசமே முதன்மை.
நண்பர்களே,
நமது புனித நூல்கள், 'யதோ தர்மஸ்ததோ ஜய:' என்று கூறுகின்றன. இதற்கு, வலிமையின் வேர் தர்மமே என்று பொருள். தர்மம் என்றால் கடமை, தர்மம் என்றால் நீதி, தர்மம் என்றால் சமத்துவம், தர்மம் என்றால் கலந்துரையாடல், தர்மம் என்றால் கருணை என்று பொருள். இந்த சாராம்சம் தான் 'தேசமே முதன்மை' என்ற உணர்வில் பொதிந்துள்ளது. இந்தியா தனது வலிமையை இந்த கோணத்தில்தான் பார்க்கிறது, இந்த அளவுகோலை கொண்டே மதிப்பிடுகிறது.
நண்பர்களே,
இந்தியாவுக்கு மற்றுமொரு தனித்துவமான குணம் உண்டு, அதை இப்போது உலகம் அங்கீகரித்துள்ளது. நாம் கணநேர நிகழ்வுகளுக்கு அவசரமாக எதிர்வினையாற்றும் நாடு அல்ல. வளர்ச்சி மற்றும் அழிவு இரண்டையும் கண்டு, அவற்றைத் தாங்கி நின்ற நாடு நமது நாடாகும். நம் உணர்வில் பல யுகங்களின் நினைவாற்றல் பதிந்துள்ள நாடு; ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நினைவாற்றலைக் கொண்ட நாடு. அதனால்தான், இன்று இந்தியா செய்து கொண்டிருப்பதுதான் அடுத்த ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலத்தை எழுதப்போகின்றன. இது உலகிற்கு இந்தியா அளிக்கும் மிகப்பெரிய உத்தரவாதம். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல, நம்பகத்தன்மை கொண்ட பொருளாதாரமும் கூட. வளர்ந்து வரும் வலிமையாக இருப்பதோடு நீங்கள் அகராதியை விரிவுபடுத்தி இதை வல்லரசு என்று அழைத்தாலும் - நான் நிச்சயமாகச் சொல்வேன், இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய வலிமையான நாடு. சில நாட்களுக்கு முன்புதான் நான் ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து திரும்பினேன். இன்றைய இந்தியாவுக்கு 'தேசமே முதன்மை' என்பதுதான் மிகப்பெரிய மந்திரம், மிக உயர்ந்த கொள்கை என்பதை ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு நாடும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளன.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்புதான், நமது அரசாங்கம் 12 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதற்காக அர்னாப் உங்களை கைதட்டவும் வைத்தார். கடந்த 12 ஆண்டுகளின் சாதனைகளை நீங்கள் எடைபோட்டுப் பார்த்தால், ஒவ்வொரு முடிவின், ஒவ்வொரு அடியின், ஒவ்வொரு முயற்சியின் மையத்திலும் 'தேசமே முதன்மை' என்ற உணர்வு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். தூய்மை இந்தியா இயக்கம் முதல் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் வரை, கதருக்கு முக்கியத்துவம் அளிப்பது முதல் உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்பது வரை, இவை அனைத்தும் வெற்றி பெற்றன, ஏனென்றால் நாட்டின் மக்கள் தேசத்தை எல்லாவற்றிற்கும் மேலாக மதித்து தங்கள் கடமையைச் செய்தனர். இந்த நாட்டின் குடிமக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
நண்பர்களே,
நம்மோடு நண்பர் திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இங்கு இருக்கிறார். நமது தொழில்முனைவோர் 'தேசமே முதன்மை' என்ற உணர்வுடன் நடக்கும் போதும், நாட்டின் தேவைகளைப் புரிந்துகொண்டு தங்கள் இலக்குகளை நிர்ணயிக்கும்போதும், நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன, நாடும் செழிக்கிறது. திரு. வேம்புவின் பணிகளைப் பற்றி இங்கே எவ்வளவு விவாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சமீபத்தில் நான் பிரான்சில் நடைபெற்ற விவா-டெக் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் இருந்தனர். பிரான்ஸ் அதிபரும் நானும் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளைப் பார்க்க ஒவ்வொரு அரங்காகச் சென்றபோது, ஸோஹோ (Zoho) அரங்கிற்கு வந்தோம். இந்த புதிய கண்டுபிடிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஆர்வத்துடன் அங்கு கூடியிருந்த ஐரோப்பிய இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்தபோது நான் வியப்படைந்தேன், பெருமிதம் கொண்டேன். இந்தியாவில் இதைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்றாலும், பிரான்சில் நான் கண்டது வியக்கத்தக்கது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
நண்பர்களே,
தேசமே முதன்மை' என்பதன் தாக்கம் அரசு கொள்கைகளிலும் முடிவுகளிலும் நமது பழங்குடியினப் பகுதிகளில் வெளிப்படுவதை நீங்கள் காணலாம். நான் இங்கே தத்துவத்தைப் பேச வரவில்லை, ஆனால் பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள சில எளிய உதாரணங்களைப் பகிர்கிறேன். 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பழங்குடியினச் சமூகம் பற்றி நான் பேசுகிறேன். பல தசாப்தங்களாக மாவோயிச பயங்கரவாதம் அங்கு வேரூன்றியிருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். 21-ம் நூற்றாண்டிலும் கூட, அந்தப் பயங்கரவாதிகள் எந்தவொரு வசதியும் அந்தப் பகுதிகளுக்குச் சென்றடைய அனுமதிக்கவில்லை. எந்தவொரு அரசு வாகனமும் அந்த வழியாகச் செல்ல முடியாது; அவை தோட்டாக்களால் துளைக்கப்படும். பல அரசுகள் வந்தன, சென்றன, தலைமுறைகள் கடந்தன, இந்த வன்முறை எனும் துரதிர்ஷ்டம் என்றென்றும் நீடிக்கும் என்று தோன்றியது. நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம் - 2004 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட அந்தப் பத்து ஆண்டுகளில், மாவோயிச பயங்கரவாதத்தால் 17,000-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, கிட்டத்தட்ட 7,000 உயிர்கள் பலியாகியுள்ளன.
நண்பர்களே,
உங்களைப் பொறுத்தவரை, இன்றைய தலைப்புச் செய்தியோ அல்லது அரை மணி நேரத் தொலைக்காட்சி விவாதமோ, மாவோயிச பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்பதாக இருக்கலாம். ஆனால் விஷயங்கள் அப்படி நடப்பதில்லை. இதற்கு மிகப்பெரிய முயற்சி தேவைப்படுகிறது, அதனால்தான் நான் விளக்க விரும்புகிறேன். இப்போதெல்லாம், சிலர் அரசியலமைப்பை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் "அரசியலமைப்பு" என்ற வார்த்தையை உச்சரித்தாலே நீங்கள் சுடப்படலாம். அந்த நேரத்தில், அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள், கைகள் நடுங்க, அரசியலமைப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாமல் இருந்தார்கள். காங்கிரஸ் அந்த வலிய சூழ்நிலையால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
நண்பர்களே,
2014-க்கு பிறகு, அந்தச் சூழலை மாற்ற 'தேசமே முதன்மை' என்ற உணர்வுடன் நாங்கள் முன்னேறினோம். நாங்கள் வெறும் பேச்சு மட்டும் பேசவில்லை, வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடவில்லை, செயல்பட்டோம். நக்சலிசம் மற்றும் மாவோயிசத்தை வேரோடு அகற்ற தீர்மானித்தோம். இன்று அதன் முடிவை ஒட்டுமொத்த நாடும் பார்க்கிறது. இந்தியாவில் மாவோயிச பயங்கரவாதம் இப்போது தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
பெரும்பாலும் இறுதி முடிவு மிகவும் பிரம்மாண்டமாகவும் முக்கியமானதாகவும் இருப்பதால், அதன் பின்னணியில் உள்ள கடின உழைப்பு கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. இதைப் பற்றி ரிபப்ளிக் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் நான் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன்.
நண்பர்களே,
பகல் நேரத்திலேயே வெளியே செல்வதற்கு சாதாரண மக்கள் அச்சப்பட்ட கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் அல்லது கொள்ளையடித்தல் என்ற அச்சத்தில் எங்கே வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதே சாத்தியமற்றதாக இருந்ததோ, அந்த நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் நாங்கள் முன்னேற்றத்திற்கான உறுதிமொழியுடன் சென்றோம். கடந்த 12 ஆண்டுகளில், எங்கள் அரசாங்கம் இத்தகைய பகுதிகளில் 12,000 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகளை அமைத்துள்ளது. பலமுறை, எங்களது கட்டுமான உபகரணங்கள் எரிக்கப்பட்டன, ஒப்பந்ததாரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஒரு சாலையில் 25 பேர் வேலை செய்தால், அந்தப் பணி தொடர்வதற்காக 200 காவலர்கள் அவர்களைப் பாதுகாத்தாக வேண்டியிருந்தது. நாங்கள் இதைச் செய்தோம், ஏனென்றால் அதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம்.
நண்பர்களே,
நாங்கள் 9,500-க்கும் மேற்பட்ட அலைபேசி கோபுரங்களை அமைத்தோம். முன்பெல்லாம், ஒரு கோபுரத்தைக் கூட நிறுவ முடியவில்லை; நிறுவப்பட்டாலும் அது அழிக்கப்பட்டது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் மக்கள் மத்தியில் கோபத்தையே வளர்க்க விரும்பினர். நாங்கள் சுமார் 45,000 கிராமங்களுக்கு அலைபேசி இணைப்பைக் கொண்டு வந்தோம். நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில், 1,800-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. சுமார் 75,000 வங்கி மையங்கள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய அஞ்சலகங்கள் அமைக்கப்பட்டன. நண்பர்களே, நாங்கள் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மட்டும் நம்பியிருக்கவில்லை மக்களின் மனதை வெல்வதற்காக இறைவன் கொடுத்த ஒவ்வொரு துளி ஆற்றலையும் செலவிட்டோம்.
நண்பர்களே,
உறுதியான தீர்மானத்துடன், சாதாரண மக்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற நாங்கள் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளுக்குச் சென்றோம். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் - தலைக்கு பல கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட ஒரு கொடூரமான நக்சலைட், அந்த நபரின் தாயாருக்கு நாங்கள் முதன்முதலில் ரேஷன் கார்டை வழங்கினோம். தனது பயங்கரவாத ஆட்சியை நடத்த விரும்பிய அந்த மகன், தனது தாயாருக்கு அதை ஒருபோதும் பெற அனுமதிக்கவில்லை. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அன்றைய அரசு அரசியலமைப்பைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தது. ஆனால், இந்த முயற்சிகளின் விளைவாக மக்களிடையே புதிய நம்பிக்கைப் பேரலை உருவானது. இன்று பஸ்தாரைப் பாருங்கள் - குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுக்குப் பதிலாக, பஸ்தார் ஒலிம்பிக் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்றுவிட்டன. முதல் பதிப்பில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர், இரண்டாவது பதிப்பில் சுமார் 4 லட்சம் இளைஞர்கள் இணைந்தனர். எங்கே ஒரு காலத்தில் பயங்கரவாதம் இருந்ததோ, அங்கே இப்போது திறமைகள் வாய்ப்புகளைப் பெறுகின்றன, விளையாட்டுகள் செழித்து வருகின்றன.
நண்பர்களே,
இந்த 12 ஆண்டுகால சேவையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, நம்பிக்கையற்ற நிலையிலிருந்து மீண்டு வந்து, நம்பிக்கையும் கனவுகளும் நிறைந்த ஒரு இந்தியாவை உருவாக்கியதாகும்.
நண்பர்களே,
மாவோயிச பயங்கரவாதம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செறிந்து இருக்கலாம், ஆனால் அதன் வலி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உணரப்பட்டது. மாவோயிசம் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி பரவத் தொடங்கியபோது, அந்த நம்பிக்கை உணர்வு பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை; அது நாடு முழுவதும் பரவியது. 2014-க்கு முந்தைய பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ், அதிருப்தி என்பது நிர்வாகம் சார்ந்தது மட்டுமல்ல; விரக்தி மிகவும் ஆழமாக இருந்தது. தேசம் நம்பிக்கையை இழந்திருந்தது. எதையும் மாற்ற முடியாது, எதையும் மேம்படுத்த முடியாது என்று மக்கள் உணர்ந்தனர்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா விரக்தியை நம்பிக்கையாக மாற்றியுள்ளது. இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்று, இன்னும் சற்று முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். "இது நடக்காது, இது நடக்காது" என்றே சொல்லிக்கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. அந்த யுகம் கடந்துவிட்டது. இன்று, "இது நடக்கும்" என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. இந்த புதிய தன்னம்பிக்கையே இந்தியாவின் உண்மையான சாதனை; இதுவே உண்மையான வலிமை. சவால்கள் இன்னும் இருக்கின்றன, அவை எப்போதும் இருக்கும். சவால்கள் உருமாறக்கூடியவை, அவை புதிய வடிவங்களில் வெளிப்படும். ஆனால் அவை எந்த வடிவில் வந்தாலும், நாம் போராடுவோம், நாம் வெற்றி பெறுவோம். "இதைச் செய்ய முடியும், நாமே செய்வோம்" என்ற நம்பிக்கையுடன் தேசம் முன்னேறும்போது, கனவுகள் நனவாகின்றன.
நண்பர்களே,
இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட வட்டங்களைப் பற்றி நான் இங்கே பேச விரும்புகிறேன். இவை வளர்ச்சியின் அனைத்து அளவீடுகளிலும் பின்தங்கியிருந்தன, முந்தைய அரசாங்கங்கள் இவற்றை "பின்தங்கிய மாவட்டங்கள்" மற்றும் "பின்தங்கிய பகுதிகள்" என்று முத்திரையிட்டிருந்தன. அந்தப் பெரும் பகுதிகளைப் பின்தங்கிய நிலையிலான விரக்தியிலிருந்து மீட்டெடுத்து, வளர்ச்சிகான கனவுகளை நாங்கள் தூண்டினோம். முதலில், அவற்றின் அடையாளத்தை நாங்கள் மாற்றினோம். இவை "வளர்ச்சிக்கான விருப்பம் கொண்ட மாவட்டங்கள்", இவை "வளர்ச்சிக்கான விருப்பம் கொண்ட வட்டங்கள்" என்று நாங்கள் கூறினோம். இத்தகைய மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்காகத் திட்டங்களை உருவாக்கினோம், வளர்ச்சியின் ஒவ்வொரு அளவீட்டிலும் அரசாங்கம் நுணுக்கமாகச் செயல்படத் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மீண்டெழ வேண்டிய மூன்று அம்சங்களைக் கண்டறிந்தோம், சிலவற்றில் ஆறு அம்சங்களை அடையாளம் கண்டோம், அவற்றின் மீது கவனம் செலுத்திச் செயல்படத் தொடங்கினோம். இன்று, இந்த விருப்பம் கொண்ட மாவட்டங்களும் வட்டங்களும் மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன. முன்பெல்லாம், இவை வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்தன. இந்த மாவட்டங்களில் வறுமையிலும் வசதியின்மையிலும் வாழும் பெரும் மக்கள் தொகை இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், 25 கோடி ஏழை மக்கள் வறுமையை வென்றுள்ளனர்; இதில் விருப்பம் கொண்ட மாவட்டங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன.
நண்பர்களே,
ஒரு நபர் நோய் நீங்கி குணமடையும்போது, அந்த நபர் மட்டும் குணமடைவதில்லை, ஒட்டுமொத்த குடும்பமும் நிம்மதி அடைகிறது என்பதை நாம் காண்கிறோம். அதேபோல், ஒரு மகன் அல்லது மகள் ஏதேனும் ஒரு சாதனையைச் செய்யும்போது, அது அவர்களின் சாதனை மட்டுமல்ல, முழு குடும்பமும் பெருமிதமும் நம்பிக்கையும் கொள்கிறது. அதே வழியில், ஒருவர் வறுமையிலிருந்து மீண்டு வரும்போது, ஒட்டுமொத்த சமூகமும் பயனடைகிறது, நாடும் பயனடைகிறது. 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு புதிய நடுத்தர வர்க்கத்தினராக மாறியுள்ள நிலையில், அதன் பயன் அந்த குடும்பங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் இதனால் பயனடைகிறார்கள், ஏனென்றால் இவர்கள் புதிய நுகர்வோர்களாகி பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள், இறுதியில் இது நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. எனவே, வறுமை ஒழிப்பு என்பது வெறும் நலத்திட்டம் சார்ந்தது மட்டுமல்ல - அது வாய்ப்புகளை விரிவுபடுத்தும் ஒரு கதை, புதிய கனவுகளின் ஊற்றுக்கண்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் உருவான மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை எளிதாக்க, அரசாங்கம் ஒவ்வொரு நிலையிலும் பணியாற்றியுள்ளது. சொந்த வீடு வாங்கும் கனவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும்பமும் சொந்தமாக ஒரு வீடு வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. 2014-ல் ஒரு குடும்பம் வீடு வாங்க விரும்பினால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இரட்டை இலக்கத்தில் இருந்தன. இன்று, வங்கிகளில் 7 முதல் 8 சதவீத வட்டியில் கடன்கள் கிடைக்கின்றன. முன்பெல்லாம், ஒரு கடன் பெறுவது ஒரு போரை வெல்வது போல இருந்தது, அதற்கு மிகப்பெரிய முயற்சி தேவைப்பட்டது. இன்று, வீட்டிலிருந்தபடியே அதைப் பெற முடிகிறது. தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான நகர்ப்புற நடுத்தர வர்க்க வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் முடங்கிக்கிடந்ததை மக்கள் அறிவார்கள். குடும்பங்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, அவர்கள் கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்களையும் கனவுகளையும் காட்டினர், ஆனால் வீடுகள் ஒருபோதும் ஒப்படைக்கப்படவில்லை. குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்காக முடிவில்லாமல் காத்திருக்கும்போது வாடகை செலுத்த வேண்டியிருந்தது. அது ஒரு பயங்கரமான நிலை. இந்த முடங்கிய திட்டங்களை முடிக்க, நாங்கள் 25,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியை உருவாக்கினோம். நாடு முழுவதும் நீண்டகாலமாகத் தாமதமான சுமார் 60,000 வீடுகள் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
நண்பர்களே,
தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் மற்றொரு அம்சம் இணைப்பு மற்றும் போக்குவரத்து ஆகும். இன்று நீங்கள் சமூக வலைதளங்களைப் பார்த்தால், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் நமது மெட்ரோ ரயில் சேவையைக் கண்டு வியக்கிறார்கள்.
நண்பர்களே,
2014-ல், சுமார் 28 லட்சம் மக்கள் தினமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இன்று, சுமார் ஒரு கோடியே 28 லட்சம் மக்கள் தினமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்கள். இப்போது, வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற அதிவேக ரயில்கள் நாட்டை இணைக்கின்றன. மேம்படுத்தப்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளால், பயண நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, வாகன பராமரிப்பு செலவுகளும் குறைந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. இது பல சிறிய நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தை மட்டுமல்ல, அவர்களின் சேமிப்பையும் அதிகரித்துள்ளது. 2013-14-ம் ஆண்டில், சுமார் 2 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரிக்கு உட்பட்டதாக இருந்தது, அந்தச் சுமையை நடுத்தர வர்க்கத்தினர் சுமந்தனர். இன்று, 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரி இல்லாததாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரி இல்லாத வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் வசதியை அளித்துள்ளன. வரி தாக்கல் செய்வது எளிதாகியுள்ளது, இது நேரம் மற்றும் பணம் இரண்டையும் மிச்சப்படுத்துகிறது. வருமான வரி கணக்குகளை இப்போது வீட்டிலிருந்தே தாக்கல் செய்ய முடிகிறது, மேலும் வரி தொடர்பான தீர்வுகள் கூட நேருக்கு நேர் சந்திப்பு இல்லாமலேயே கையாளப்படுகின்றன.
நண்பர்களே,
நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மிகப்பெரிய செலவு என்பது நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கைமுறை நோய்களுக்கான சிகிச்சைதான். மலிவுவிலை மக்கள் மருந்து மையங்களில், இத்தகைய மருந்துகள் 80 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. முன்பெல்லாம் நீங்கள் 1,000 ரூபாய் செலவு செய்த இடத்தில், இன்று 200 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறீர்கள், இதன் மூலம் 800 ரூபாய் சேமிக்கிறீர்கள். கடந்த ஆண்டுகளில், இது எண்ணற்ற குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாயைச் சேமிக்க உதவியுள்ளது. நடுத்தர வர்க்க வரவு-செலவுத் திட்டத்தின் மற்றொரு முக்கியப் பகுதி முதியோருக்கான மருத்துவச் செலவு ஆகும். இன்று, 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற உரிமை பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
வசதிகள் வழக்கமானதாக மாறும்போது, கடந்த கால சிரமங்களை மறந்து விடுவது மனித இயல்பு. முன்பெல்லாம், நீங்கள் 2 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி கட்டினீர்கள்; இப்போது, 12 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை. இருப்பினும், நினைவூட்டப்படும்போது மட்டுமே கைதட்டல்கள் வருகின்றன. மறுபுறம், ஒரு பேருந்தோ அல்லது ரயிலோ தாமதமானால், புகார்கள் குவிகின்றன. இதுவே மிகவும் குரல் கொடுக்கும் வர்க்கமாகும்.
நண்பர்களே,
நான் சொன்னது போல, மக்கள் பழைய கஷ்டங்களை மறந்துவிடுகிறார்கள். ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு பெறுவதில் முன்பு இருந்த சிரமங்களை நீங்கள் இப்போது நினைவுகூறக்கூட மாட்டீர்கள். முன்பெல்லாம் அது ஒரு போராட்டமாக இருந்தது. இன்று, ஓட்டுநர் உரிமம் பெறுவது எளிதாகிவிட்டது, கடவுச்சீட்டுகளும் பொதுவாக மூன்று நாட்களுக்குள் வழங்கப்படுகின்றன.
நண்பர்களே,
நமது அரசாங்கம் செயல்படும் விதம் மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு தேவை பூர்த்தி செய்யப்பட்டதும், மக்கள் உடனடியாக அதைவிடச் சிறந்த ஒன்றை, மேம்படுத்தப்பட்ட ஒன்றை நாடுகிறார்கள். முன்பு ஒரு புதிய சாலை வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது என்றால், அது அமைக்கப்பட்டவுடன், அடுத்த கேள்வி என்னவாக இருக்கிறது தெரியுமா? "மெட்ரோ ரயில் எப்போது வரும்?" என்பதுதான். முன்பு, ரயில்கள் நேரத்திற்கு வரவேண்டும், சுத்தமான இருக்கைகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்று, "எங்கள் பாதையில் ஏன் வந்தே பாரத் ரயில் ஓடவில்லை?" என்ற கோரிக்கை எழுகிறது.
நண்பர்களே,
இதைச் சிலர் அதிருப்தி என்று பார்க்கிறார்கள், ஆனால் இது ஒரு கனவு (விருப்பம்). உண்மையில், காங்கிரஸ் கட்சி கூட தொடர்ந்து, "மோடி அவர்களே, இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும்" என்றுதான் சொல்கிறது. யாராவது எதையாவது செய்து முடிக்க முடியும் என்றால், அது இந்த அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.
நண்பர்களே,
கனவுகள் நனவாகும் என்று மக்கள் நம்பும் இடத்தில்தான் விருப்பங்கள் பிறக்கின்றன. இதுதான் இந்தியாவின் இளைஞர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. இன்று, இதுவே பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் உந்துசக்தியாக உள்ளது.
நண்பர்களே,
ஒருபுறம், தேசத்தின் ஒரு பெரும் பகுதி முன்னேற்றத்திற்கான விருப்பத்தோடு இருக்கிறது. மறுபுறம், "எப்போதும் எதிர்ப்பு" என்பதையே வாழ்க்கையின் மந்திரமாகக் கொண்ட ஒரு அரசியல் குழு உள்ளது. இந்தக் குழு நாள்பட்ட அதிருப்தியால் நிறைந்துள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள சில அறிகுறிகளை நான் கூறுகிறேன். "ஏன் இந்த இடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லை?" என்று அவர்கள் கேட்பார்கள். ஆனால் மறுநாளே, அணைகள், சூரிய ஒளி மின் பூங்காக்கள், அனல் மின் நிலையங்கள் அல்லது அணுமின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவார்கள். ஒரு நாள் ஏன் மின்சாரம் இல்லை என்று கேட்பார்கள், அடுத்த நாள் மின் உற்பத்தியை எதிர்ப்பார்கள். கனிமச் சுரங்கங்களை ஒரு காலத்தில் எதிர்த்த அதே நபர்கள்தான், இன்று இந்தியாவின் அரிய வகை கனிம இருப்புக்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் எங்கே என்று கேட்கிறார்கள், மற்ற நாடுகளைப் போல ஏன் இந்தியாவில் மின் வாகன சூழல் அமைப்பு இல்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு காலத்தில் "தரவுகளா அல்லது மாவா?" என்று விவாதித்தனர், ஆனால் இப்போது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் என்ன செய்துள்ளோம் என்று கேட்கிறார்கள். ஒரு மூச்சில் ஏஐ இன்னும் முன்னேறியிருக்க வேண்டும் என்று சொல்வார்கள், அடுத்த மூச்சில் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், நாளிதழ்களிலும் முடிவில்லாத குறைபாடுகளைப் பட்டியலிட்டு தரவு மையங்களையும் செமிகண்டக்டர் ஆலைகளையும் எதிர்ப்பார்கள்.
நண்பர்களே,
இவர்கள் உலகெங்கிலும் உள்ள ஊழல் குறியீடுகளைக் காட்டி இந்தியாவை கூண்டில் ஏற்றப் பார்க்கிறார்கள். அவர்களின் ஊடகங்கள் அதை 24 மணி நேரமும் பெரிதுபடுத்துகின்றன. ஆனால் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது, சோதனைகளும் விசாரணைகளும் துன்புறுத்தல் என்று கூறி, அவர்களே முதலில் கூச்சலிடுகிறார்கள். இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, அப்போது ஏன் எடுக்கப்படவில்லை, அந்த நபருக்கு எதிராக ஏன், இந்த நபருக்கு எதிராக ஏன் இல்லை என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுதான் அவர்களின் விளையாட்டு.
நண்பர்களே,
தேசத்தின் நலனுக்காக அவர்களின் குணத்தை புரிந்துகொள்வது மிக முக்கியம். குறிப்பாக நமது இளைஞர்கள், மற்றும் ஜென்-ஸி (Gen Z) தலைமுறையினர் அவர்களை விரைவாக அடையாளம் காண வேண்டும். இல்லையெனில், நான் சொல்வது போல, "சூரியவம்சி வந்துவிட்டார்," அவரே இதை விரைவாக விளக்குவார்.
நண்பர்களே,
ஆயுதப் படைகளுக்கு சுதந்திரமும் ஆயுதங்களும் இல்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், அரசாங்கம் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்யும்போது அல்லது நவீன ஆயுதங்களை வாங்கும்போது, ஏன் என்று கேள்வி கேட்பதில் இவர்களே முதலில் இருக்கிறார்கள். உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திரத்தை இவர்கள் சவால் செய்கிறார்கள், ஆனால் இந்தியா ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கும்போது, உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
நண்பர்களே,
இந்த முக்கியமான காலகட்டத்தில், இந்தியா இத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தவறான வாதங்களைப் புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இன்று முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ், அத்தகைய கூறுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காந்திஜியின் காலத்தில் இருந்ததைப் போல, காங்கிரஸ் 'தேசமே முதன்மை' என்று பேசும் என்று நினைப்பது இப்போது பொய்யான கனவு.
நண்பர்களே,
இன்றைய உலகம் பழைய நடைமுறைகளைச் சவாலுக்கு உட்படுத்தி வருகிறது, சீர்குலைவுகளின் அளவு மிகப்பெரியதாக உள்ளது. ஆனால், இந்தச் சவால்கள் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வருகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும், தொழில்முனைவோரும், புத்தாக்கச் சிந்தனையாளர்களும், புத்தொழில் நிறுவனங்களும் இந்த வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். 'தேசம் முதலில்' என்ற உணர்வுடன் அரசாங்கம் மக்கள் பக்கமே உறுதியாக நிற்கிறது. இந்தியா இப்போது சீர்திருத்த விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வேகம் மேலும் அதிகரிக்கும். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த மேடையிலிருந்து மீண்டும் ஒருமுறை நான் கூறுகிறேன்: நமது கனவுகள் மிகப்பெரியவை, நமது முயற்சிகளும் அதற்கு ஈடாக மிகப்பிரம்மாண்டமாக இருக்கும். 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த இந்தியா உருவாக்கப்படும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அந்த வளர்ந்த இந்தியாவை உங்கள் கண்களாலேயே நீங்கள் காண்பீர்கள். அது எதிர்கால சந்ததியினர் காத்திருக்கும் விஷயமாக இருக்காது. இந்த நம்பிக்கையுடன், ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கும், அதன் பார்வையாளர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி!
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2276878)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282879)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada