பிரதமர் அலுவலகம்
தாரகேஸ்வரில் நடைபெற்ற மேற்கு வங்காள தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
20 JUN 2026 7:47PM by PIB Chennai
ஜெய் பாபா தாரக்நாத்! ஹர் ஹர் மகாதேவ்!
ஆளுநர் ஆர். என். ரவி அவர்களே, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அவர்களே, பெரியோர்களே, மற்றும் எனது வங்காள சகோதர சகோதரிகளே!
"பாபா தாரக்நாத்தின் அருளாசி நிறைந்த இந்தப் புனித மண்! மேற்கு வங்காள தினத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாள்! இத்தகைய மாபெரும் மக்கள் திரளின் முன்னிலையில், தேர்தல் மற்றும் பதவியேற்பிற்குப் பிறகு முதன்முறையாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெருமிதமும், மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன். வங்காளத்தின் வீதிகளில் வீசும் காற்று, இன்று ஏதோ ஒரு புதிய புத்துணர்ச்சியையும், மாற்றத்தின் நறுமணத்தையும் சுமந்து வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. பல தசாப்த கால அடிமைத்தனத்தின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு, வங்காளத்தின் பண்டையப் பெருமையும் கம்பீரமும் மீண்டும் தலைதூக்கி, விண்ணை நோக்கி நிமிர்ந்து நிற்பதை உணர்கிறேன்; இந்த மண்ணின் தொன்மை மீண்டும் உயிர்பெற்று எழுவதை நான் காண்கிறேன்."
இன்றைய நிகழ்வு, இந்தப் புதிய திட்டங்களின் தொடக்கம், புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வங்காளத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும். மக்களின் முகத்தில் இருக்கும் இந்த ஒளி, ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை - உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு வாக்கு, ஒரே தேர்தல், எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு வங்காளமே மிகச் சிறந்த சாட்சி.
இந்த நன்னாளில், மேற்கு வங்காள தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வங்காள மக்களுக்கும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
‘தூய்மையால் வரவேற்பு’ என்ற உங்கள் முன்னெடுப்பைப் பாராட்டவும், அதற்காக எனது மனபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன். தூய்மை என்பது நம் அன்றாட வாழ்க்கையின் இணைபிரியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எங்கு தூய்மை இருக்கிறதோ, அங்கு வளர்ச்சி இன்னும் அழகாகப் பிரகாசிக்கும். தூய்மையுடன் வரவேற்கும் உங்கள் முயற்சிக்கு நான் மனதார வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
இந்த ஆண்டு மேற்கு வங்காள தினத்தின் தேதி இன்னும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காகக் கனவு கண்ட வங்காளத்தின் மாபெரும் ஆத்மாக்களின் தொலைநோக்குப் பார்வை – அந்த கனவுகள் இன்று, முதன்முறையாக மேற்கு வங்காள தினத்தில் நனவாவதை நாம் காண்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேதி, வங்காளத்தின் வளர்ச்சிக்கு ஒரு உத்வேகமாக அமையட்டும், நாம் ஒரு புதிய மற்றும் புகழ்பெற்ற வரலாற்றைப் படைப்போம். இன்று, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசின் கீழ், இந்த நோக்கத்திற்காகவே ஒரு பிரமாண்டமான வளர்ச்சிப் பிரச்சாரம் தொடங்குகிறது.
நண்பர்களே,
பல தசாப்தங்களாக, முதலில் இடதுசாரிகளும், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வங்காளத்தில் ஆழமான குழிகளைத் தோண்டினார்கள். அந்தக் குழிகளை நிரப்புவதற்காக, இரட்டை என்ஜின் அரசு மிக வேகமான வேகத்தில் பணியாற்றத் தொடங்கியுள்ளது. மின்னல் வேகத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன, தேங்கிக் கிடந்த திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த வரிசையில், இன்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ரயில்வே, சாலை, விவசாயம், மீன்வளம் – இந்தத் திட்டங்கள் வங்காளத்தின் வளர்ச்சிக்கு புதிய வேகத்தைக் கொடுக்கும். அவை இங்குள்ள கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இத்திட்டங்களுக்காக வங்காள மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் 23-வது தவணையும் விடுவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 19,000 கோடி ரூபாய் நேரடியாக பரிமாற்றப்பட்டுள்ளது. பயனடைந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
அடிமைத்தனத்தின் காலத்தில், வங்காளம் அளவற்ற துன்பங்களையும், எண்ணற்ற தியாகங்களையும், அளப்பரிய துறப்புகளையும் அனுபவித்தது. 1946-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த வன்முறை, நவகாளியில் நடந்த கலவரங்கள் - எத்தனை அப்பாவி வங்காள மக்கள், வங்காளத்தின் எத்தனை உயிர்கள் பலியாகின.
சகோதர சகோதரிகளே,
வங்காளம் ரத்தக் களரியைச் சந்தித்தது, வங்காளம் தன் சொந்தங்களை இழந்தது, வங்காளம் தனது தாய்நாடு துண்டாடப்படுவதைக் கண்டது. ஆனாலும், வங்காளம் தனது அடையாளத்தையும் சாரத்தையும் அழியவிடவில்லை. அதன் விளைவாக, முழு வங்காளத்தையும் இந்தியாவிலிருந்து பிரிக்க சதி நடந்தபோது, மேற்கு வங்காளத்தின் உருவாக்கம் அந்தச் சதிகளை முறியடித்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிகமும் கலாச்சாரமும், இங்குள்ள அடிப்படை நம்பிக்கைகளும் மரபுகளும் பல போராட்டங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்தன. இன்று அந்த விழுமியங்களும் மரபுகளும் மேற்கு வங்காளத்தில் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை உயிர்ப்புடன் துடிப்புடன் இருக்கின்றன. எனவே, மேற்கு வங்காள தினத்தைக் கொண்டாடும்போது, நாம் ஒரு தேதியை மட்டும் நினைவுகூரவில்லை - நாம் ஒரு முழு வரலாற்றையும் நினைவுகூர்கிறோம். வங்காளத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்திற்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.
நண்பர்களே,
மேற்கு வங்காள தினத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்குத் தொடர்ந்து நினைவூட்டுவது அவசியமாகும். அக்காலத்தில் என்ன நடந்தது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முழு வங்காளத்தையும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிகள் நடந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் அந்தச் சதிகாரர்களுக்கு தலைவணங்கிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அதற்கு எதிராகத் தனது குரலை உயர்த்தினார். 1947 ஏப்ரல் மாதம், அவர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முழு வங்காளமும் பாகிஸ்தானின் பகுதியாக மாறாது என்று அவர் அறிவித்தார். இதற்காக, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையில் 'வங்காள இந்து தாயக இயக்கம்' தொடங்கப்பட்டது. விஞ்ஞானி மேக்நாத் சாஹா, வரலாற்றாசிரியர்கள் ஆர். சி. மஜும்தார் மற்றும் ஜாதுநாத் சர்க்கார், மொழியியலாளர் சுனிதி குமார் சட்டர்ஜி போன்ற வங்காளத்தின் பல முக்கிய அறிவுஜீவிகள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். ஜி. டி. பிர்லா போன்ற தொழில்முனைவோர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர். மடுவா தலைவர் பி. ஆர். தாக்கூர் இதற்கு ஆதரவு அளித்தார். செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதப்பட்டன, கதைகள் வெளியிடப்பட்டன, 'வந்தே மாதரம்' என்ற உணர்வு மீண்டும் தட்டி எழுப்பப்பட்டது. பிரிவினைவாத கொள்கைகளால் ஒடுக்கப்பட்டிருந்த வங்காளத்தின் குரல், இந்த மக்கள் இயக்கத்தின் மூலம் மீண்டும் ஓங்கி ஒலித்தது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த வங்காளத்தையும் இந்தியாவிலிருந்து பிரித்துச் செல்வது சாத்தியமற்றது என்பதை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் உணர்ந்துகொண்டன. இவ்வாறு, மேற்கு வங்காளம் அன்னை இந்தியாவுடனேயே தங்கியது.
நண்பர்களே,
சுதந்திரத்தின் போது மேற்கு வங்காளம் எந்த உணர்வுடன் காப்பாற்றப்பட்டதோ, அதே உணர்வு சுதந்திரத்திற்குப் பிறகும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அதற்கு நேர்மாறானதே நடந்தது. மேற்கு வங்காள தினத்தையும் அதன் உண்மையான பொருளையும் மறக்கடிக்க முயற்சி செய்யப்பட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக, வரலாறு மறைக்கப்பட்டது.
சகோதர சகோதரிகளே,
பிரிவினையின் போது, காங்கிரஸ் வங்காளத்தைக் கைவிட விரும்பியது. பிரிவினைக்குப் பிறகும், எஞ்சியிருந்த மேற்கு வங்காளத்திலும் அது திருப்திப்படுத்தும் அரசியலை விளையாடத் தொடங்கியது. மேற்கு வங்காளத்தின் இந்த வரலாறு ஒடுக்கப்பட்டது. சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தின் நிறுவனராக மாறியதால், அவரது பங்களிப்பு மறுக்கப்பட்டது. அவர் வங்காளத்திற்காகப் போராடிய அதே உணர்வு தொடர்ந்து குறி வைக்கப்பட்டது. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரைப் பெற்றெடுத்த இந்த மண்ணில், வெளிநாட்டு சித்தாந்தங்கள் திணிக்கப்பட்டன. முதலில் காங்கிரஸ், பிறகு இடதுசாரிகள், அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ்- என பல தசாப்தங்களாக, மேற்கு வங்காளத்தைப் பேணிக் காத்து வலுப்படுத்துவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக ஊடுருபவர்களுக்கான மையமாக அது மாறுவதற்கு அவர்கள் அனுமதித்தனர். இந்தியாவின் வளர்ச்சிக்குத் தலைமை தாங்கியிருக்க வேண்டிய வங்காளம், முன்னேறுவதற்குப் பதிலாகப் பின்தங்கிப் போனது.
நண்பர்களே,
மேற்கு வங்காள தினத்தில், வரலாற்றின் அந்தத் தவறுகள் மீண்டும் நடக்காது என்று நாம் உறுதியேற்க வேண்டும். மேற்கு வங்காள தினத்தின் உத்வேகத்திலிருந்து, புதிய வரலாறு எழுதப்படும்.
நண்பர்களே,
பல தசாப்த கால தவறான நிர்வாகம் மேற்கு வங்காளத்தை மைல்கணக்கில் பின்னோக்கித் தள்ளியது. முந்தைய அரசாங்கங்களின் கீழ் நிலைமை எவ்வாறு மோசமடைந்தது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். பெரிய தொழிற்சாலைகள் வெளியேறின, சிறு வணிகங்கள் வீழ்ச்சியடைந்தன, இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர், வளங்கள் ஊடுருவுபவர்களால் கையகப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் வாய்ப்புகளின் பூமியாகத் திகழ்ந்த வங்காளம், வெளியேற்றத்தின் மையமாக மாறியது. இந்தச் சூழலில், நீங்கள் ஒரு சபதத்தை எடுத்தீர்கள் – திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று. நீங்கள் பாஜக-விற்கு சாதனை அளவிலான இடங்களை வழங்கி ஆசீர்வதித்தீர்கள், இன்று வங்காளம் எவ்வாறு உடனடியாக அதன் பலன்களை அறுவடை செய்கிறது என்பதை முழு நாடும் கண்டு கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது உங்கள் வீட்டு வாசலை வந்தடைகின்றன. தேர்தலின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை உங்களுக்கு நான் உறுதி அளித்திருந்தேன். இப்போது, வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை எளிய மக்களும் அதன் பலன்களைப் பெறுவார்கள். அன்னபூர்ணா திட்டத்தின் மூலம் அன்னையர்களும் சகோதரிகளும் நேரடிப் பலன்களைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய, ஓவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் இயக்கத்தின் கீழ் மேற்கு வங்காள அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேர்தலின் போது வங்காள இளைஞர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி, வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு தளர்த்தப்படும் என்று கூறியிருந்தோம் - அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயண வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பல ஆண்டுகளாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பல திட்டங்கள் தேக்கமடைந்தன, தாமதமாயின. இன்று, அந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, மக்கள் நல முகாம் மூலம் ஒவ்வொரு அரசுத் திட்டமும் உங்களை நேரடியாகச் சென்றடைகிறது. இடைத்தரகர்கள் இல்லை, தடைகள் இல்லை - உங்கள் உரிமைகள், வங்காளத்தின் வளர்ச்சி, மற்றும் வங்காளம் மற்றும் நாட்டின் பாதுகாப்பின் மீது மட்டுமே கவனம். முந்தைய அரசுகள் பல தசாப்தங்களாகத் தடுத்து வைத்திருந்த எல்லை வேலி அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி புதிய அரசு அமைந்தவுடன், அந்தப் பணி தொடங்கப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
சகோதர சகோதரிகளே,
மேற்கு வங்காளத்தில் தொழில்துறை வளர்ச்சியின் அடித்தளம் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அடித்தளம் இரண்டு அத்தியாவசியத் தூண்களின் மீது நிற்கிறது - நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், மற்றும் சட்டத்தின் ஆட்சி. இன்று மேற்கு வங்காளம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் இந்த மாற்றத்தைக் கண்டு வருகிறது. உங்களைச் சுரண்டியவர்கள் இப்போது தாங்களாகவே திருடிய பணத்தைத் திரும்பத் தருகிறார்கள். பெரிய கொள்ளையர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். சிண்டிகேட் உறுப்பினர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். சுங்கச் சாவடிகளில் பணம் பறித்த ரவுடிகள் ஓடிவிட்டார்கள். வங்காள மக்கள் தடையின்றி சுதந்திரமாக நடமாடுகிறார்கள். தவறான வழியில் பணம் கேட்பது முடிந்துவிட்டது. வளர்ச்சிப் பணிகள் தொடங்கிவிட்டன.
நண்பர்களே,
மோசமான சாலைகள் மற்றும் சிதிலமடைந்த உள்கட்டமைப்புகளால் தத்தளித்துக்கொண்டிருந்த வங்காளம், இப்போது பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் அதிவேகமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதைக் கண்டுவருகிறது. கவனியுங்கள் – சிங்ரிஹாட்டா கிராஸிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கொல்கத்தா மெட்ரோவின் ஆரஞ்சுப் பாதை பணி இப்போது நிறைவடைந்துள்ளது. ஹவுராவில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் புதிய கோட்ட ரயில்வே மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது அவசர சிகிச்சைகளையும், தீவிர நோய்களுக்கான சிகிச்சையையும் வழங்கும். கிழக்கு மித்னாபூரில், ஹவுர் மற்றும் ராதாமோகன்ட்ர் இடையேயான ரயில்வே மேம்பாலம் மற்றும் சங்க்ரைல்–சந்திரகாச்சி இணைப்புப் பாதை போன்ற திட்டங்கள் மக்களுக்குப் பெரும் வசதியைத் தரும்.
நண்பர்களே,
இன்று, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்காள விவசாயிகளுக்கு மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பு – இன்று முதல், மாநிலத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் கடினமான காலங்களில் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கும். பயிர்கள் சேதமடைந்தால், அதன் சுமை விவசாயியின் மீது விழாது.
நண்பர்களே,
இப்போது மேற்கு வங்காளமும் 'டிஜிட்டல் வேளாண்மை இயக்கத்தில்' இணைகிறது. 'அக்ரி-ஸ்டேக்' மூலம், விவசாயிகளுக்கான பதிவேடு உருவாக்கப்படும். கிராம வரைபடங்கள் மற்றும் பயிர் தகவல்கள் டிஜிட்டல் முறையில் கிடைக்கும். உரங்கள் வாங்குதல், விவசாய கடன் அட்டைகள், நேரடிப் பயன் பரிமாற்றம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் போன்ற சேவைகள் இனி எளிதாகிவிடும்.
நண்பர்களே,
விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த, அரசு பிரதமரின் வளமான வேளாண்மைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் மேற்கு வங்காளத்தின் புருலியா, டார்ஜிலிங், அலிபுர்துவார் மற்றும் ஜார்கிராம் ஆகிய நான்கு மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உற்பத்தித்திறனை அதிகரிப்பது, சேமிப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் விவசாயிகளுக்கு எளிதாகக் கடன் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றிற்காகப் பணிகள் மேற்கொள்ளப்படும். வங்காளத்தில், மீன் வளர்ப்பு என்பது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகளை இணைக்கும் ஒரு பாலமாகும். எனவே, தென் 24 பர்கானாவில் உள்ள பிரேசர் கஞ்ச் மீன்பிடித் துறைமுகத்தின் கொள்ளளவு விரிவாக்கப்பட்டுள்ளது. பீர்பூமிலும் ஒரு நவீன மீன் சந்தை கட்டப்பட்டுள்ளது. இனி வங்காளம் நிற்காது – இப்போது வங்காளம் நிற்காது, அது வரலாற்றைப் படைக்கும்.
நண்பர்களே,
இன்று, நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான விவசாயத் தோழர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். எங்கும் உள்ள விவசாயிகள் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் பயனாளிகள். எனது விவசாய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நான் ஒரு மனமார்ந்த வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து கவனமாகக் கேளுங்கள். உங்கள் முன்னால் கைகூப்பி வேண்டுகிறேன் - நாம் நம் குழந்தைகளுக்கு மலட்டுத்தன்மை கொண்ட நிலங்களை விட்டுச் செல்லக்கூடாது, வளமான நிலங்களையே விட்டுச் செல்ல வேண்டும். நாம் நம் தாய் பூமியைக் காப்பாற்ற வேண்டும். இந்திய அரசு "வயல்களைக் காப்போம்" என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இது மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தப் பிரச்சாரத்தில் பெருமளவில் இணையுமாறும், உங்கள் நிலங்களைக் காக்க உறுதி ஏற்படுமாறும், அருகில் உள்ள விவசாயிகளையும் அவ்வாறே செய்யத் தூண்டுமாறும், ஒன்றாக இணைந்து நம் அன்னை பூமியைப் பாதுகாக்குமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவள் நமது தாய் – ரசாயனங்களால் அவளைக் கொல்லும் பாவத்தை நாம் செய்யக்கூடாது. நாம் நம் அன்னை பூமியைக் காப்பாற்றியாக வேண்டும்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்த உறுதியின் மிகப்பெரிய அடித்தளம் கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியாகும். இதற்காக, நாங்கள் கிழக்கின் எழுச்சித் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த இயக்கத்தில் வங்காளத்தின் பங்கு மிக முக்கியமானது. வங்காளத்தின் முன்னேற்றம் கிழக்கு இந்தியாவின் முன்னேற்றத்தை வேகப்படுத்தும்.
சகோதர சகோதரிகளே,
வளர்ச்சியின் இந்தப் பயணத்தில், நாம் இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் - வளர்ச்சியின் முதல் நிபந்தனை அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக நிலைத்தன்மை ஆகும், இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. நாம் வங்காளத்தின் கலாச்சார அடையாளத்தையும், சமூகக் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
நாளை, நாடும் உலகமும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடவுள்ளன. இம்முறை, நான் இங்கு வங்காளத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறேன். சுவாமி விவேகானந்தர் மற்றும் மஹரிஷி அரவிந்தர் போன்ற யோகிகள் வாழ்ந்த இந்த பூமி, ஒட்டுமொத்த உலகிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு செய்தியை அனுப்பும். வங்காளத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் யோகா தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் யோகா பயிற்சி செய்யுங்கள், யோகா தினத்தின் ஒரு பகுதியாக இருங்கள். இந்த வேண்டுகோளுடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் மேற்கு வங்காள தினத்தை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இவ்வேளையில், உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான் – உங்கள் அலைபேசிகளை எடுங்கள், அதன் ஒளிவிளக்கை ஒளிரச் செய்யுங்கள், நாமெல்லாம் ஒன்றாக இணைந்து இந்த வங்காள தினத்தைக் கொண்டாடுவோம். அனைத்து அலைபேசி விளக்குகளும் பிரகாசிக்கட்டும், என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் – பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மிக்க நன்றி.
(Release ID: 2275811)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282872)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam