பிரதமர் அலுவலகம்
அனைவருக்கும் சமமான, பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரை
प्रविष्टि तिथि:
17 JUN 2026 6:07PM by PIB Chennai
அதிபர் மேக்ரான் அவர்களே,
மதிப்பிற்குரிய தூதர்களே மற்றும் தலைவர்களே,
பிரான்சின் ஜி-7 தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகம் பல சவால்களையும் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், இந்த அமைப்பிலிருந்து வெளிவரும் செய்தி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது.
இன்று, வளர்ச்சிக் குறித்த கேள்வி ஜிடிபி அல்லது வர்த்தக புள்ளி விவரங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உண்மையான கேள்வி இதுதான்: இந்த வளர்ச்சியால் பயனடைவது யார்? இதில் உள்ளடக்கப்படுவது யார்? மேலும், இது எந்த திசையில் செல்கிறது?
நண்பர்களே,
பகிரப்பட்ட வளர்ச்சி என்பது வெறும் கனவாக இல்லாமல், அதை எதார்த்தமாக மாற்ற முடியும் என்பதை இந்தியாவின் அனுபவம் காட்டுகிறது. இந்தியா முன்னேறும்போது, மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களும் அதனுடன் சேர்ந்து முன்னேறுகிறார்கள். எனவே, இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றியது மட்டுமல்ல—அது அனைவரையும் உள்ளடக்கிய, பிரமாண்டமான மற்றும் ஜனநாயக அதிகாரமளித்தல் சார்ந்த ஒரு கதையாகும்.
கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியா "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி" என்ற வழிகாட்டும் கொள்கையின் அடிப்படையில் முன்னேறி வருகிறது. இதுவே நமது உலகளாவிய ஈடுபாட்டிற்கான அடிப்படைக் கொள்கையுமாகும்.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் போது, "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற செய்தியை உலகுடன் பகிர்ந்து கொண்டோம். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதும் நமது நாகரிக அறத்தின் வெளிப்பாடாகும்.
இந்த உணர்வுடன் தான், வரலாற்றுச் சிறப்புமிக்க 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' நாங்கள் தொடங்கினோம். இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடம், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கிறது. இது வர்த்தகத்தை வேகப்படுத்துவதோடு, விநியோக தொடர்புகளை வலுப்படுத்தி, கூட்டாளர் நாடுகளில் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இன்று, இத்தகைய முன்னெடுப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது - அவை உள்ளூர் உரிமையுணர்வு, வெளிப்படையான நிதி மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கான தெளிவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் சிறந்து விளங்க வேண்டும்.
நண்பர்களே,
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவு விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், இன்னும் சில காலத்திற்கு வளர்ந்து வரும் நாடுகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில் நாம் உண்மையாகவே உறுதியுடன் இருந்தால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் இந்த நெருக்கடிகளின் சுமையை மட்டும் சுமக்க விடக்கூடாது.
வளரும் நாடுகள் இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளவும், அவற்றின் பொருளாதார மீள்திறனைத் தக்கவைக்கவும் உதவும் ஆதரவு வழிமுறைகளை நமது சர்வதேச நிதி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
ஐஎம்இசி தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவுப் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் இணைப்புத் திட்டங்களில் நாம் இணைந்து செயல்பட முடியும்.
ஜி-7 நாடுகளின் முதலீடு, இந்தியாவின் திறமை மற்றும் 'குளோபல் சவுத்' நாடுகளின் பங்களிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், "இணைப்பு மற்றும் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச அணிதிரட்டல் கூட்டமைப்பை" நிறுவுவது குறித்து நாம் பரிசீலிக்கலாம். வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வாய்ப்புகளை இணைக்கும் வழித்தடங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நண்பர்களே,
இன்று, வளர்ந்த நாடுகள் வயதான சமூகங்கள் என்ற சவாலை எதிர்கொள்ளும் வேளையில், இந்தியாவும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளும் இளைஞர்களின் திறமை, தொழில்முனைவு மற்றும் திறன் ஆகியவற்றில் அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
இந்த இயற்கையான பரஸ்பரத் தன்மையைச் சரியாகப் பயன்படுத்த, நாம் ஒரு "உலகளாவிய திறன் கூட்டமைப்பை" உருவாக்கப் பரிசீலிக்கலாம். இந்த கட்டமைப்பின் கீழ், திறன் வரைபடமாக்கல் மற்றும் நம்பகமான திறன் சார்ந்த இடப்பெயர்ச்சியை மேம்படுத்துவது குறித்து நாம் இணைந்து செயல்பட முடியும்.
நண்பர்களே,
பகிரப்பட்ட உலகளாவிய செழுமை மீதான இந்தியாவின் உறுதிப்பாடு என்பது வெறும் சொல்லளவில் மட்டுமல்ல; அது எமது செயல்களிலும் தெளிவாகப் புலப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பெரும்பாலான நாடுகளுடன் இந்தியா வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து முடித்துள்ளது.
இது இந்தியா பிரிவினையில் அல்ல, ஒருங்கிணைப்பிலும்; பாதுகாப்புவாதத்தில் அல்ல, கூட்டாண்மையிலும்; நிச்சயமற்ற தன்மையில் அல்ல, பகிரப்பட்ட செழுமையிலும் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
வரும் ஆண்டுகளில், நமது பகிரப்பட்ட பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும், மேலும் நிலையான, நம்பகமான மற்றும் வளமான உலகப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கவும் உங்களனைவருடனும் இணைந்து இந்தியா தொடர்ந்து பணியாற்றும்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் வழங்கப்பட்டது.
(Release ID: 2274143)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282726)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Manipuri
,
Urdu
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam