பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நெக்ஸ்ட் உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:

प्रविष्टि तिथि: 12 MAR 2026 9:57PM by PIB Chennai

இன்று, மார்ச் 12, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அன்றுதான், மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரையைத் தொடங்கினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில், இந்தப் பயணம் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் 'இந்தியாவின் சுதந்திரம்' என்ற ஒற்றை இலக்கோடு இணைத்தது.

இந்த வரலாற்றுப் பயணத்திற்குப் பிறகு சுமார் 100 ஆண்டுகள் கழித்து, இன்று இந்தியர்களாகிய நாம் மற்றொரு பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தப் பயணம் 'வளர்ச்சியடைந்த இந்தியா' நோக்கிய பயணம். நமது இலக்கு ஒன்றுதான், நமது சேருமிடமும் ஒன்றுதான் - அது 'வளர்ச்சியடைந்த இந்தியா'. இந்த இலக்கை அடைவதில், இதுபோன்ற உச்சிமாநாடுகளில் நடக்கும் விவாதங்களும், அவற்றிலிருந்து வெளிப்படும் சாராம்சமும் (அமிர்தம்) பெரும்பங்காற்றுகின்றன. இந்த 'நெக்ஸ்ட்’ மாநாட்டுக்கு என்னை அழைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் பல சகாக்கள் இங்கே வந்துள்ளீர்கள்; உங்களில் சிலர் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள். உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

21-ஆம் நூற்றாண்டின் இந்தக் காலகட்டம் "நபூதோ நபவிஷ்யதி" (இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை, இனி நிகழப்போவதும் இல்லை) என்பது போன்றது. ஒருபுறம் போரின் கொடூரங்கள் நிலவுகின்றன, விநியோகச் சங்கிலிகள் மீண்டும் சீர்குலைந்து வருகின்றன, ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவிய அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலிலும், நமது இந்தியா இந்தத் தடைகளைத் தாண்டி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது.

இன்று, வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில், உலக அளவில் அதிகம் விவாதிக்கப்படும் பெயர் 'இந்தியா'. தற்போதுள்ள இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உலகின் ஒவ்வொரு தீவிரமான தலைவரும், அறிவார்ந்த மனிதரும் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். சமீபத்தில்தான் பின்லாந்து நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர், "இனி உலகத்தின் திசையை 'குளோபல் சவுத்' அதாவது வளர்ந்து வரும் நாடுகள் தீர்மானிக்கும், அந்தத் திசையைத் தீர்மானிக்கும் மிகச் சக்திவாய்ந்த நாடாக இந்தியா இருக்கும்" என்று கூறினார்.

இதற்கு முன்பாக, கனடாவின் பிரதமர் கார்னியும், "அடுத்த மூன்று தசாப்தங்களில், உலகின் 'பொருளாதார ஈர்ப்பு மையம்' எதை நோக்கி நகர்கிறதோ, அது இந்தியாவாகத்தான் இருக்கும்" என்று கூறியிருந்தார். உலகின் மிகப்பெரிய சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியா தவிர்க்க முடியாத பங்காளியாக மாறிவிட்டதாகப் பிரெஞ்சு அதிபர் மேக்ரானும் நம்புகிறார்.

இன்று, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உலகின் உலகளாவிய தலைவர்களின் கூற்றுகளை நாம் உற்றுநோக்கினால், ஒரே ஒரு கருத்து மட்டுமே மேலோங்கி நிற்கிறது: "நீங்கள் எதிர்காலத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்பினால், நீங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும்; நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும்."

நண்பர்களே,

சற்று முன் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் கிரிக்கெட் என்பது எப்படிப்பட்டது என்றால், ஏதோ ஒரு அலுவலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உரையாடல் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு சிறப்பான விளக்கக்காட்சி நடந்து கொண்டிருந்தாலும், வெளிநாட்டு விருந்தினர்கள் அங்கே விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும் கூட - இடையில் ஒரு கணம் ஸ்லைடிலிருந்து கண்ணை எடுத்துவிட்டு ஸ்கோர் என்ன என்று பார்ப்பார்கள். யாராவது ஒருவர் கண்டிப்பாகக் கேட்பார் — "தம்பி, ஸ்கோர் என்ன என்று!  இன்று இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் இதுதான். இன்று ஒவ்வொருவரும் பொருளாதாரத்தைப் பற்றிய நேரலை வர்ணனையை விரும்புகிறார்கள். கடந்த மாதம் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது? இன்று நிலைமை என்ன? இதையெல்லாம் தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு முன்பு நாட்டில் இத்தகைய ஆர்வம் இருந்ததா என்பது எனக்கு நினைவில்லை. அப்படி இருந்திருந்தால், அது எப்போது? இது இன்றைய இந்தியர்களின் விருப்பங்களையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. உலகின் நம்பிக்கை இந்தியா மீது திரும்புவதற்கு இதுவே மிகப்பெரிய காரணமாகும்.

மேலும் நண்பர்களே, நிச்சயமாக, இவ்வளவு எதிர்பார்ப்புகள் நம்மீது இருக்கும்போது, உலகின் கண்கள் நம் நாட்டின் மீது பதியும்போது, நம் அனைவரின் பொறுப்பும் இன்னும் அதிகமாகிறது.

நண்பர்களே,

இன்றைய இந்தியா வெறும் முன்னேறி மட்டும் செல்லவில்லை. இந்தியா தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இன்று நாட்டில் அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன; நாம் அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்பை நோக்கி நகர்கிறோம். யுபிஐ தொழில்நுட்பம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று, உலகில் மிக வேகமான நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடாக இந்தியா திகழ்கிறது.

நண்பர்களே,

இன்றைய இந்தியா அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களையும் செய்து வருகிறது; அது 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணிக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் பல பணிகளும், பல முடிவுகளும் "சாத்தியமே இல்லை" என்று கருதப்பட்டன; இன்று இந்தியா அந்த முடிவுகளையும் எடுத்து வருகிறது.

கஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்குவது சாத்தியமற்றது என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. ஆனால் இன்று ஜம்மு கஷ்மீரில் அந்த 370-வது சட்டப்பிரிவு எனும் சுவர் தகர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் வங்கித் திட்டத்துடன் இணைப்பது ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால் இன்று 50 கோடிக்கும் அதிகமான 'ஜன்தன்' கணக்குகள் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன. முத்தலாக் முறையை ஒழிப்பது சாத்தியமற்றது என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம் சகோதரிகள் அந்த அநீதியிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பதும் ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகவே தோன்றியது. ஆனால் இன்று அதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இந்தியாவின் எல்லைகள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று நிலவுப்பயணம், செமிகண்டக்டர் திட்டம், குவாண்டம் திட்டம் என இவை அனைத்தும் இந்தியாவைத் தொழில்நுட்பத்தின் அடுத்த எல்லைக்கு அழைத்துச் செல்கின்றன.

நண்பர்களே,

இன்றைய இந்தியா வெறும் கனவு மட்டும் காணவில்லை; அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொண்டும் இருக்கிறது. அதனால்தான், இந்தியா வெறும் முன்னேற்றம் மட்டும் அடையவில்லை, இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று இன்று உலகம் கூறுகிறது.

நண்பர்களே,

ஒரு நாட்டின் வளர்ச்சியின் மிக முக்கியமான அடிப்படை என்பது, நாம் சவால்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் உள்ளது. உலகளாவிய சூழல்கள் திடீரென்று மாறும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த ஆண்டுகளில், முதலில் கொரோனா பேரிடரைச் சந்தித்தோம், பிறகு ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியைக் கண்டோம், இப்போது நமக்கு மிக அருகிலேயே மற்றொரு பெரிய போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போர் ஒட்டுமொத்த உலகையும் ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

நண்பர்களே,

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில், ஒரு தேசமாக நாம் இதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். நெருக்கடியான காலம் என்பது, ஒரு வகையில் ஒட்டுமொத்த தேசத்திற்குமான ஒரு சோதனையாகும். நாம் அமைதியுடனும் பொறுமையுடனும் இந்தச் சூழல்களைக் கையாள வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி, ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், தொழில்துறை, இளைஞர்கள், கிராமம், நகரம் என அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது.

கொரோனா காலத்தில் நாம் பார்த்ததுபோல, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது, நெருக்கடியைச் சமாளிக்கும் நாட்டின் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. இன்று நாட்டிற்கு முன் மற்றொரு சவால் உள்ளது, எனவே, தேசிய நலனை முதன்மையாக வைத்து, நமது கடமைகளை நிறைவேற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

இன்று எல்.பி.ஜி சிலிண்டர் தொடர்பாகப் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சிலர் தங்களது சொந்த நலனுக்காக மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயல்கின்றனர். அவர்களைப் பற்றி இப்போது நான் அரசியல் ரீதியான கருத்துகளைக் கூற விரும்பவில்லை. ஆனால், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் மக்கள் மத்தியில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும், நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் நான் நிச்சயமாகக் கூறுவேன்.

நண்பர்களே,

இன்று போரினால் ஏற்பட்டுள்ள இந்த உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்திலிருந்து எந்த நாடும் தப்பவில்லை. சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, ஒவ்வொரு நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய அரசாங்கமும் இந்த நெருக்கடியைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பல்வேறு நிலைகளில் இதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களில், இது குறித்து பல நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் நான் உரையாடினேன். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் அதிவேக வளர்ச்சியைத் தக்கவைக்க, பல்வேறு எரிசக்தி ஆதாரங்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது அவசியமாகிறது. இதனை வலுப்படுத்த, நாங்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் பணியாற்றியுள்ளோம். முதலாவதாக, நாட்டில் எரிசக்தி கிடைப்பதை அதிகரிக்கத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கினோம்.

இரண்டாவதாக, எரிசக்திக்காக நாம் வெளிநாடுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, எரிசக்தித் துறையில் தற்சார்பு அடைய அதிக முக்கியத்துவம் அளித்தோம். இப்போது எரிவாயு துறை தொடர்பான சில புள்ளிவிவரங்களை உங்களுக்கு வழங்குகிறேன். 2014-ம் ஆண்டு வரை, நாட்டில் 14 கோடி எல்.பி.ஜி இணைப்புகள் மட்டுமே இருந்தன. அதாவது, நாட்டில் பாதி குடும்பங்களுக்கு மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, சுமார் 33 கோடி உள்நாட்டு எல்.பி.ஜி இணைப்புகள் உள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், எல்.பி.ஜி உருளைகளை நிரப்பும் திறனை நாம் இருமடங்காக்கியுள்ளோம். விநியோக மையங்களின் எண்ணிக்கையும் 13,000-லிருந்து 25,000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

2014-ல் நாட்டில் 4 எல்.என்.ஜி முனையங்கள் மட்டுமே இருந்தன; இன்று அவற்றின் எண்ணிக்கையும் இருமடங்காகியுள்ளது. சுமார் 3,500 கிலோமீட்டர் நீளமாக இருந்த எரிவாயு குழாய் வழித்தடம், தற்போது 10,000 கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 60 சதவீத எல்.பி.ஜி வெளிநாடுகளிலிருந்து வருவதால், நாட்டின் பெரிய துறைமுகங்களில் இறக்குமதி முனையங்களின் திறனும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014-க்கு முன், நாட்டில் வெறும் 25-26 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலமான எரிவாயு வசதி இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 1.25 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2014-ல் நாட்டில் சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 'நகர எரிவாயு விநியோக' தொடர்புகள் நிறுவப்பட்டதன் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.

நண்பர்களே,

எந்தவொரு நாடும் ஏன் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த உலகளாவிய நெருக்கடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதனால்தான், கடந்த ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் இந்தியாவைச் சுயசார்புடைய நாடாக மாற்ற முழுமையான முறையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நண்பர்களே,

பெட்ரோலியத்தின் மீதான சார்பு நிலையைக் குறைக்க, எத்தனால் மற்றும் உயிரி எரிபொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் அளித்தோம். 2014-ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திறன் வெறும் 1 முதல் 1.5 சதவீதம் மட்டுமே இருந்தது. இன்று நாம் பெட்ரோலில் சுமார் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பணி மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், கடந்த 11 ஆண்டுகளில் நாம் வெளிநாடுகளிலிருந்து சுமார் 18 கோடி பேரல் கூடுதல் எண்ணெயை வாங்க வேண்டியிருந்திருக்கும். இன்றைய சூழ்நிலையைச் சிந்தித்துப் பார்த்தால், எத்தனால் பயன்பாட்டினால், நாம் ஆண்டுக்குச் சுமார் 4.5 கோடி பேரல் குறைவான எண்ணெயையே இறக்குமதி செய்கிறோம். அதாவது, இதன் மூலம் மட்டுமே நாட்டிற்குச் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் பெட்ரோலியத்தை அதிகளவில் பயன்படுத்தும் ஒரு துறையாக நமது ரயில்வேயும் உள்ளது. நமது நாட்டில் ரயில்பாதைகளை மின்மயமாக்கும் பணி 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இருப்பினும், 2014-ம் ஆண்டு வரை 20 சதவீத ரயில்பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள ரயில்பாதைகளில் ஆயிரக்கணக்கான டீசல் என்ஜின்கள் ஓடிக்கொண்டிருந்தன. இன்று, இந்தியாவில் உள்ள அகல ரயில்பாதை பிணையம் கிட்டத்தட்ட 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்திய ரயில்வே சுமார் 180 கோடி லிட்டர் டீசலைச் சேமித்துள்ளது. மின்மயமாக்கல் நடைபெறாமல் இருந்திருந்தால், இவ்வளவு டீசலை உற்பத்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியிருந்திருக்கும். இதேபோல், நாம் மெட்ரோ ரயில் பாதைகள் அதிகரித்ததுடன், மின்சார வாகனப் போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாகவும் நாம் மற்றொரு மிகப்பெரிய பணியைச் செய்துள்ளோம். இன்று நமது மொத்த மின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்தே கிடைக்கின்றன. நமது மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் இன்று 250 ஜிகாவாட் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கைத் தாண்டியுள்ளது. சற்று யோசித்துப்பாருங்கள்: 2014-ல் இந்தியாவின் சூரிய மின்சக்தித் திறன் வெறும் 2 ஜிகாவாட்டாக மட்டுமே இருந்தது; இன்று அது சுமார் 40 மடங்கு அதிகரித்து 130 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு எரிவாயுவுக்குப் பதிலாக மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க, 'பிரதமர் சூரியவீடு இலவச மின்சாரத் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவியுள்ளனர்.

நண்பர்களே,

இது தவிர, நாம் கோபர்தன் திட்டத்திலும் பணியாற்றினோம். இதன் கீழ், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் 600-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

பெட்ரோல்-டீசல் துறையில், சேமிப்புத்திறனை மேம்படுத்துவதிலும் நாம் விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு, இந்தியாவில் 'உத்திசார் பெட்ரோலிய இருப்பு' அதாவது நெருக்கடி காலங்களில் கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கான வசதி கிட்டத்தட்ட இல்லவே இல்லை. இன்று நம்மிடம் 50 லட்சம் டன்னுக்கும் அதிகமான மூலோபாய பெட்ரோலிய இருப்பு உள்ளது. மேலும் அதிக சேமிப்புத்திறனுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த தசாப்தத்தில், நமது சுத்திகரிப்புத்திறனை ஆண்டுக்கு 40 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளோம். அதனால்தான் இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவைச் சுயசார்புடையதாக மாற்ற எவ்வளவு பெரிய அளவிலும், எத்தகைய சிறந்த திசைகளிலும் நாம் பணியாற்றி வருகிறோம் என்பதை நீங்கள் ஊகிக்க முடியும்.

போரினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை நம்மால் நிச்சயமாக எதிர்கொள்ள முடியும். 140 கோடி நாட்டு மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நாட்டை எப்படி கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்தோமோ, அதேபோல இந்த உலகளாவிய நெருக்கடியையும் நாம் முறியடிப்போம். நான் மீண்டும் சொல்கிறேன், அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு முயற்சியிலும் அல்லது செயல்பாட்டிலும் எந்தக் குறையும் வைக்க மாட்டோம். ஒவ்வொரு முடிவிலும் பொதுமக்களின் நலனே முதன்மையாக இருக்கும்.

நண்பர்களே,

உக்ரைன் போர் தொடங்கியது முதல் இன்று வரை, அதன் தாக்கம் உலக சந்தையில் இருந்து உலக குடிமக்கள் வரை எவ்வாறு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். ஆனால், போரினால் உருவான சூழல்களின் சுமை இந்தியக் குடிமக்கள் மீது விழக்கூடாது என்பதில் இந்திய அரசு எப்போதும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உதாரணமாக, ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி அதிகரித்தபோது, உரங்களின் விலை விண்ணைத் தொட்டது. இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை யூரியாவை, நமது விவசாயிகளுக்கு வெறும் 300 ரூபாய்க்கு வழங்கினோம். உலகில் 3000 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த வேளையில், நம் நாட்டில் 300 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இந்த முறையும், போர் சூழல் நாட்டின் விவசாயிகள் மற்றும் குடிமக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச பாதிப்பையே ஏற்படுத்த வேண்டும் என்பதில் எங்களின் அனைத்து முயற்சிகளும் இருக்கும்.

நண்பர்களே,

இன்று இந்த மேடையில் இருந்து, இந்த முக்கியமான நேரத்தில் மாநில அரசுகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். கருப்புச்சந்தை உருவாகாமல் இருப்பதும், வதந்திகள் பரவாமல் இருப்பதும் அவசியம்; எனவே, நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். கருப்புச்சந்தையில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகள் என்பது தற்சார்புடன்  கூடிய 'உணர்வுபூர்வமான நிர்வாகத்தின்' காலமாகும். டெல்லியில் இருந்த காங்கிரஸ் அரசின் சிந்தனைக்கு எட்டாத தூரத்தில், நமது நாட்டின் ஒரு பெரிய பகுதியும் அங்கு வாழும் மக்களும் இருந்தனர். ஆனால், நமது அரசு வளர்ச்சியின் ஓட்டத்தில் பின்தங்கியிருந்த மக்களை, நிர்வாகத்தின் முன்னுரிமைகளுடன் இணைத்தது. இன்று, அந்தப் பகுதிகளில் வீடுகள், சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 'வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டம்', 'வளர்ந்து வரும் வட்டாரங்கள் திட்டம்' மற்றும் 'பிரதமரின் ஜன்மன்' போன்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

காங்கிரஸ் அரசாங்கங்கள் செய்த மிகப்பெரிய பாவம் என்னவென்றால், நாட்டின் ஒரு பெரும்பகுதியை மாவோயிச பயங்கரவாதத் தீயில் எரியவிட்டுச் சென்றதுதான். நாட்டின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய மாநிலத்தின் ஒரு மிகப்பெரிய பகுதி மாவோயிச பயங்கரவாதத்தின் பிடியில் இருந்தது. ஆனால் நண்பர்களே, கடந்த ஆண்டுகளில் இந்தச் சூழ்நிலையை மாற்ற நாடு ஒரு உறுதியான தீர்மானத்தை எடுத்தது. நாம் மிகுந்த மனஉறுதியுடன் முன்னேறினோம். அதன் முடிவை இன்று நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 2013-ம் ஆண்டில் 180-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று, மாவோயிச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளது.

நண்பர்களே,

கடந்த ஓராண்டில் மட்டும் 2100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர், 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இல்லாத 300-க்கும் மேற்பட்ட கொடூரமான நக்சலைட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர். இதன் விளைவாக, ஒரு காலத்தில் அச்சத்தின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பகுதிகளில், இன்று வளர்ச்சியின் புதிய ஆற்றல் பாய்ந்துகொண்டிருக்கிறது.

நண்பர்களே,

இன்று இந்தியா முன்னேறிச்செல்லும் வேகத்தைப் பார்க்கும்போது, அதன் வளர்ச்சிப் பாதையைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள் இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ஒரு கனவு நிறைவேறும்போது, புதிய கனவுகளும், புதிய விருப்பங்களும் பிறக்கும் என்பதை நான் அறிவேன். இதை நான் ஒரு சுமையாகக் கருதவில்லை, மாறாக மக்களின் நம்பிக்கையின் மூலதனமாகவே கருதுகிறேன்.

ஆம்... இந்த நாட்டில் எனக்குச் சில "நலன் விரும்பிகள்" இருக்கிறார்கள்; இவ்வளவு எதிர்பார்ப்புகளின் சுமையால் மோடி என்றாவது ஒரு நாள் நசுக்கப்படுவார் அல்லது ஒடுக்கப்படுவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் மிகவும் தவறானது, அவர்களின் அந்த எதிர்பார்ப்புகள் ஒருபோதும் நிறைவேறாது. நாட்டு மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் வரை, அது நிறைவேறப்போவதும் இல்லை. இனி 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் மட்டுமே நிறைவேறும். இந்தியா ஒவ்வொரு துறையிலும் சுயசார்பு அடையும்; இந்தியா எந்தச் சூழ்நிலையிலும் 'வளர்ச்சியடைந்த நாடாக' மாறும்.

இந்த உணர்வுடன், எனது உரையை நிறைவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி!

----

(Release ID:2239302)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2281967) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam