பிரதமர் அலுவலகம்
வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் மாற்றத்திற்கான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரை
प्रविष्टि तिथि:
06 MAR 2026 1:14PM by PIB Chennai
வணக்கம்! பட்ஜெட் தொடர்பான இந்த இணையவழிக் கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது அமர்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இதற்கு முன்னதாகத் தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற முக்கியமான தலைப்புகளில் நாம் விவாதித்தோம். இன்று ஊரகப் பொருளாதாரம் மற்றும் விவசாயம் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்துகிறோம். இந்த பட்ஜெட் தயாரிப்பில் உங்களது ஆலோசனைகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன. உங்கள் கருத்துக்கள் பட்ஜெட்டில் பிரதிபலிப்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் முழுப் பலனையும் நாடு பெறுவதை உறுதி செய்வது இப்போது மிக முக்கியம். உங்களது அனுபவமும் ஆலோசனைகளும் இந்த பட்ஜெட்டின் நன்மைகளை அதிகப்படியான மக்களுக்கு எளிய வழியில் கொண்டு சேர்க்க உதவும். ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் எப்படி விரைவாகவும் முழுமையாகவும் பயன்படுத்தலாம் என்பதற்கான உங்கள் ஆலோசனைகளை நான் எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே, விவசாயம் மற்றும் கைவினைத் தொழில்கள்தான் நமது பொருளாதாரத்தின் முதன்மையான தூண்கள். இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தில் வேளாண்மை ஒரு முக்கிய அங்கமாகும். இதை உணர்ந்துதான் நமது அரசு விவசாயத் துறையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதுவரை பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகள் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் விவசாயிகளின் இடர்களைக் குறைத்து, அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பைத் தந்துள்ளன. இன்று உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் நாடு சாதனை படைத்து வருகிறது. இப்போது 21-ம் நூற்றாண்டின் அடுத்தகட்டத்தை நாம் எட்டியுள்ள நிலையில், வேளாண் துறையில் புதிய உத்வேகத்தைப் புகுத்துவது அவசியமாகிறது. இந்த ஆண்டு பட்ஜெட் அதற்கான புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தக் கருத்தரங்கின் விவாதங்கள் அந்தத் திட்டங்களைத் தரைமட்டத்தில் விரைவாகச் செயல்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று சர்வதேச சந்தைகள் நமக்காகத் திறக்கப்பட்டுள்ளன, உலகளாவிய தேவைகளும் மாறி வருகின்றன. இந்தச் சூழலில், நமது விவசாயத்தை எவ்வாறு ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றுவது என்பது குறித்து இந்த இணையவழிக் கருத்தரங்கில் விவாதிப்பது அவசியமாகும். நம்மிடம் பல்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகள் உள்ளன; இவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பல்வேறு வேளாண்-காலநிலை மண்டலங்களைக் கொண்டுள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட் இது தொடர்பாக எண்ணற்ற புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஏற்றுமதி வலிமையைப் பெருக்கவும் இது வழிகாட்டுகிறது. இந்த பட்ஜெட் அதிக மதிப்புள்ள வேளாண்மை மீது கவனம் செலுத்துகிறது. தேங்காய், முந்திரி, கோகோ மற்றும் சந்தன மரம் போன்ற பொருட்களுக்குப் பிராந்திய ரீதியிலான ஊக்குவிப்பு முன்மொழியப்பட்டுள்ளது. நமது தென்னிந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அதிக அளவில் தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது, அங்குள்ள மரங்கள் பழமையாகி அவற்றின் உற்பத்தித் திறனை இழந்துவிட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு விவசாயிகளுக்குக் கூடுதல் பலன்களை வழங்குவதற்காக, இந்த முறை தேங்காய் உற்பத்திக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் விவசாயிகளுக்குப் பெரும் பயன் தரும்.
நண்பர்களே,
வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கும்போது, "அகர்பத்தி" என்ற வார்த்தை அகர் மரத்திலிருந்து வந்தது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இமயமலை மாநிலங்களில், மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் பருப்பு வகை பயிர்கள் இந்த பட்ஜெட்டில் ஊக்குவிக்கப்படுகின்றன. ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியை அதிகரிக்கும் போது, பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு உருவாகும். இந்தத் திசையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்; இதற்காக அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஆலோசிக்க வேண்டும். நாம் அனைவரும் கூட்டாக இணைந்து அதிக மதிப்புள்ள வேளாண்மையை மேம்படுத்தினால், விவசாயத்தை உலகளவில் போட்டித்தன்மை கொண்ட ஒரு துறையாக மாற்ற முடியும். வேளாண் வல்லுநர்கள், தொழில்துறையினர் மற்றும் விவசாயிகள் எவ்வாறு ஒன்றிணையலாம்? விவசாயிகளை உலகளாவிய சந்தைகளுடன் எவ்வாறு இணைக்கலாம்? தரம், முத்திரை மற்றும் தரநிலைகளுக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயிக்கலாம்? இவை அனைத்தையும் ஊக்குவிப்பது இந்த இணையக் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். மற்றொரு கருத்தையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இன்று உலகம் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளது. முழுமையான ஆரோக்கியம், இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை விவசாயப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், நாம் ரசாயனமற்ற விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை விவசாயம் மற்றும் ரசாயனமற்ற தயாரிப்புகள் உலகச் சந்தைகளுக்கான ஒரு நெடுஞ்சாலையாக அமையும். இதற்காகச் சான்றிதழ் வழங்கும் முறை மற்றும் ஆய்வக வசதிகளை அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
ஏற்றுமதியை அதிகரிப்பதில் மீன்வளத் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா இன்று உலகில் மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நமது நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் சேர்ந்து சுமார் 4 லட்சம் டன் மீன்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், கூடுதலாக 20 லட்சம் டன் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன. கற்பனை செய்து பாருங்கள், தற்போதைய 4 லட்சம் டன்னுடன் இந்த 20 லட்சம் டன்னையும் சேர்த்தால், நமது ஏழை மீனவர்களின் வாழ்க்கை எவ்வளவு பெரிய மாற்றத்தைச் சந்திக்கும்! கிராமப்புற வருமானத்தை அதிகரிப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. உலகளாவிய தேவை அதிகமாக இருப்பதால், ஏற்றுமதி வளர்ச்சியில் மீன்வளம் ஒரு முக்கியத் தளமாக மாறும். நீர்த்தேக்கங்களின் உற்பத்தித் திறனைத் துல்லியமாகக் கண்டறிதல், தொகுப்புத் திட்டமிடல் மீன்வளத் துறைகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு போன்ற நடைமுறை ஆலோசனைகள் இந்த இணையக் கருத்தரங்கில் உருவானால் அது சிறப்பாக இருக்கும். குஞ்சு பொரிப்பகங்கள், தீவனம், பதப்படுத்துதல், முத்திரை பதித்தல், ஏற்றுமதி மற்றும் தேவையான போக்குவரத்து வசதிகள் என இவை அனைத்திற்கும் புதிய வணிக மாதிரிகள் தேவைப்படுகின்றன. மீன்வளத் துறையை அதிக மதிப்புடைய, கிராமப்புற செழுமைக்கான ஒரு துறையாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
நண்பர்களே,
கிராமப்புறப் பொருளாதாரத்தின் மற்றொரு முக்கியத் தூண் கால்நடை பராமரிப்புத் துறையாகும். பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, தரமான இனப்பெருக்கம், நோய் தடுப்பு மற்றும் அறிவியல் ரீதியிலான மேலாண்மை ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கால்நடைகளின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும். 'ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்' என்று நான் குறிப்பிடும்போது, அதில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியமும் அடங்கும். தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா இப்போது சுயசார்பு அடைந்துள்ளது. கால்நடைகளைக் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க இதுவரை 125 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ் தொழில்நுட்பங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இப்போது விவசாயிகளுக்கான கடன் அட்டை மூலம் பயன்பெற்று வருகின்றனர். தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் செயல்படுத்தி வரும் 'கோபர்தன்' திட்டத்தைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். கிராமங்களையும் நீர்நிலைகளையும் தூய்மையாக வைத்திருக்க விலங்குகளின் கழிவுகள் மற்றும் கிராமக் கழிவுகளை இத்திட்டத்தின் கீழ் பயன்படுத்தலாம். பால் மூலம் வருமானம் கிடைப்பது போல, சாணம் மூலமும் வருமானம் ஈட்ட முடியும். எரிவாயு விநியோகத்தின் மூலம் எரிசக்தி பாதுகாப்பிற்கு கோபர்தன் திட்டம் கணிசமான பங்களிப்பை வழங்கும். இது கிராமங்களுக்குப் பல வழிகளில் பயன் தரக்கூடியது. அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பியிருப்பது விவசாயிகளுக்கு ஆபத்தானது என்பதை நாம் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டோம். இது வருமானத்திற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடுகிறது. எனவேதான், நாம் பயிர் பல்வகைப்படுத்துதலில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இத்துடன், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கான தேசிய இயக்கம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான தேசிய இயக்கம் ஆகியவை இணைந்து வேளாண் துறையை வலுப்படுத்தி வருகின்றன.
நண்பர்களே,
விவசாயம் என்பது மாநிலப் பட்டியலின்கீழ் வரும் ஒரு துறை என்பது உங்களுக்குத் தெரியும். மாநில அரசுகளும் விவசாயத்திற்காகப் பெரும் தொகையை ஒதுக்குகின்றன. மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவதை நாம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? நமது ஆலோசனைகள் அவர்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்? கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீடுகள் மாவட்ட அளவிலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் புதிய கொள்கைகளின் பலன்கள் அதிகப்படியான மக்களைச் சென்றடையும்.
நண்பர்களே,
இது தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு. விவசாயத்தில் தொழில்நுட்பக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவதை அரசு வலியுறுத்தி வருகிறது. இ-நாம் மூலம் சந்தை அணுகல் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. 'அக்ரிஸ்டாக்' மூலம் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அரசு உருவாக்கி வருகிறது. இதன் கீழ் விவசாயிகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 9 கோடி அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன; சுமார் 30 கோடி நிலப்பகுதிகள் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 'பாரத்-விஸ்தார்' போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து வருகின்றன.
ஆனால் நண்பர்களே,
தொழில்நுட்பங்கள் முறையான அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மீது புத்தொழில் முனைவோர் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது மட்டுமே பலன் தரும். இந்த இணையவழிக் கருத்தரங்கில் இது தொடர்பான வலுவான ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும். தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்கலாம்? இந்தத் திசையில் இக்கருத்தரங்கின் ஆலோசனைகள் முக்கியப் பங்கு வகிக்கும்.
நண்பர்களே,
நமது அரசு கிராமப்புறச் செழுமையை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ளது. பிரதமர் வீட்டுவசதித் திட்டம், சுவாமித்வா திட்டம், பிரதமரின் கிராமச் சாலைத் திட்டம் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகள் ஆகியவை கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. நாம் 'லட்சாதிபதி சகோதரி' இயக்கத்தின் வெற்றியைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதுவரை கிராமங்களில் 3 கோடி பெண்களை 'லட்சாதிபதி சகோதரிகளாக' மாற்றுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். வரும் 2029-ம் ஆண்டிற்குள், மேலும் 3 கோடி பெண்களை இணைத்து, மொத்தம் 6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த இலக்கை எப்படி விரைவாக அடையலாம்? இதற்கான உங்களது ஆலோசனைகள் மிகவும் முக்கியமானவை.
நண்பர்களே,
நாட்டில் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதற்கான ஒரு மிகப்பெரிய இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. சேமிப்பிற்கு அப்பால், வேளாண்-தொழில்முனைவோர் உணவுப் பதப்படுத்துதல், விநியோகச் சங்கிலி, அக்ரி-டெக், அக்ரி-பின்டெக் மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகளையும் முதலீடுகளையும் அதிகரிக்க வேண்டும். இன்றைய ஆலோசனைகள் கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புதிய வலிமையையும் ஆற்றலையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். அடித்தட்டு அளவிலான உங்களது கருத்துக்கள், இந்த பட்ஜெட்டை வெற்றிகரமாக்கி ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக்க நன்றி. வணக்கம்!
***
(Release ID: 2235850)
AD/VK/RJ
(रिलीज़ आईडी: 2281586)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Punjabi