பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 08 MAR 2026 3:54PM by PIB Chennai

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

தில்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு. மனோகர் லால் அவர்களே, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களே, திரு. டோகன் சாஹு அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் தில்லியின் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

இன்று தில்லியின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதற்காக நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம். சற்று நேரத்திற்கு முன்புதான், 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இங்கே தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. மெட்ரோ விரிவாக்கம் முதல் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி வரை, தலைநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தில்லிக்கு ஒரு புதிய மீள்திறனை வழங்குகிறது. ஓராண்டிற்கு முன்பு தில்லி மக்களாகிய நீங்கள், எந்த புதிய நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இங்கே பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசை நிறுவினீர்களோ, அது இப்போது இந்த வளர்ச்சிப் பணிகளின் மூலம் கண்கூடாகத் தெரிகிறது. இந்தத் தடையற்ற முன்னேற்றப் பயணத்திற்காக தில்லி குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று சர்வதேச மகளிர் தினம். இன்று இந்தியா பெண்களின் அதிகாரப் பகிர்வில் ஒரு புதிய காவியத்தை எழுதி வருகிறது. ரேகா குப்தா அவர்களின் வெற்றிகரமான தலைமையின் கீழ் தலைநகர் முன்னேறி வருகிறது. அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு அல்லது சமூக சேவை என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவின் பெண் சக்தி ஒவ்வொரு களத்திலும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தின் பெண் சக்திக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய வளர்ச்சியில் அவர்களின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்கள் தொடர்ந்து சமுதாயத்தையும் தேசத்தையும் வலுப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப் பாதையில் மேலும் வழிநடத்த புதிய ஆற்றலை வழங்கவும் எனது எண்ணற்ற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உலகில் யாராவது ஒருவருக்கு இந்தியாவின் இந்த மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பற்றிய எண்ணம் வரும்போது, பெரும்பாலும் தில்லியின் பிம்பமே அவர்களின் நினைவுக்கு வருகிறது. தில்லி என்பது இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல; அது இந்தியாவின் அடையாளம், இந்தியாவின் ஆற்றலின் சின்னம். எனவே, தில்லியின் வளர்ச்சி என்பது வெறும் ஒரு நகரத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த நாட்டின் பிம்பத்தோடும் தொடர்புடையது. தில்லி எந்தளவுக்கு நவீனமாகிறதோ, தில்லி எந்தளவுக்கு வசதியானதாக மாறுகிறதோ, தில்லியின் இணைப்பு எந்தளவுக்குச் சிறப்பாக அமைகிறதோ, அந்தளவுக்கு இந்தியாவின் தன்னம்பிக்கை உலகத்தின் முன்னால் வலுவாகத் தெரியும். அதனால்தான், இன்று நமது தில்லி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பில் மிக வேகமாக முன்னேறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தில்லியின் மோசமான ஏற்பாடுகளைப் பற்றி மட்டுமே பேசப்பட்ட ஒரு காலம் இருந்தது. நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல பல மணிநேரம் ஆகும்; பேருந்து நிலையங்களில் பேருந்துகளுக்காகவும் ஆட்டோக்களுக்காகவும் காத்திருந்து தாய்மார்களும் சகோதரிகளும் தங்களது நேரத்தை வீணடித்தனர். ஆனால், இன்று தில்லியின் சித்திரம் மாறி வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான், வேகமான 'நமோ பாரத்' ரயில் மூலம் தில்லி மீரட்டுடன் இணைக்கப்பட்டது. இது தில்லி மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் இடையிலான பயணத்தை எளிதாக்கியுள்ளது. இன்று, மெட்ரோவின் நான்காவது கட்டம் தொடங்கியுள்ள நிலையில், தில்லி மெட்ரோவின் கட்டமைப்பு 375 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. உலகின் பல பெரிய நகரங்களில் கூட இவ்வளவு பெரிய மெட்ரோ கட்டமைப்பு இல்லை.

நண்பர்களே,

இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ பிரிவு, தலைநகரின் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் வசதியாக இருக்கும். குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கு தில்லி மக்களுக்கு அன்றாடப் பயணம் இனி மிகவும் எளிதாக இருக்கும். இதனுடன் காஸியாபாத், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் போன்ற என்சிஆர் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்னும் வசதியாக மாறும்.

நண்பர்களே,

ஓராண்டிற்கு முன்பு தில்லி இந்த 'பேரிடர் அரசிலிருந்து' விடுபட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சியே சாட்சி. இங்கே அந்த பேரிடர் ஆட்சி மட்டும் இல்லையென்றால், மெட்ரோ நான்காவது கட்டத் திட்டம் எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் அந்த பேரிடர் ஆட்சியாளர்கள், தங்களின் அரசியல் நலனுக்காக லட்சக்கணக்கான தில்லி மக்களின் வசதிகளைப் புறக்கணித்தனர். இப்போது, இங்கே பாஜக அரசு அமைந்த பிறகு, தில்லியின் அனைத்துத் தரப்பு வளர்ச்சியும் பெரும் வேகத்தைப் பெற்றுள்ளது.

நண்பர்களே,

இரட்டை எஞ்சின் அரசின் கீழ், தில்லியின் ஒவ்வொரு போக்குவரத்து வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தில்லியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். எனவே, தில்லி மக்களுக்குத் தூய்மையான, வசதியான மற்றும் நவீன பேருந்து சேவைகளை வழங்குவதே எங்களது முயற்சியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் இன்று தில்லி மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1800 புதிய பேருந்துகள் தில்லி சாலைகளில் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் தில்லியின் குடியிருப்புகளையும் சுற்றுப்புறங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் நூற்றுக்கணக்கான "தேவி பேருந்துகளும்" அடங்கும்.

நண்பர்களே,

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, இங்கே இருந்த பேரிடர் அரசு ஒவ்வொரு வளர்ச்சிப் பணியையும் முடக்கியது. இப்போது தில்லி தொடர்பான பல்வேறு சவால்களைத் தீர்க்க எங்கள் அரசு ஒரு லட்சிய நோக்கோடு செயல்பட்டு வருகிறது. புறவழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டதன் மூலம், லட்சக்கணக்கான வாகனங்கள் தில்லிக்குள் நுழைய வேண்டிய அவசியம் இனி இல்லை. யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் பாஜக அரசு பெரிய அளவில் பணியாற்றி வருகிறது. இதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

தில்லியில் முன்பு இருந்த பேரிடர் அரசு ஏழைகள், நடுத்தர மக்கள் அல்லது வேறு யாருடைய பிரச்சனைகளைப் பற்றியும் கவலைப்படவில்லை. அந்த பேரிடர் அரசு சுகாதாரத் துறையையும் பாழாக்கியது. ஆயுஷ்மான் திட்டத்தைச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களுக்கு நாங்கள் கடிதங்கள் எழுதினோம். இந்திய அரசு கடிதங்களை எழுதியது. ஆனால் அந்தப் பேரிடர் ஆட்சியாளர்கள் ஏழைகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. திருமதி. ரேகா அவர்களின் தலைமையின் கீழ், இந்தச் சூழ்நிலையை மாற்ற பாஜக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும், ஏராளமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் இங்கே நிறுவப்பட்டுள்ளன. இது ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் பெரும் பயனை அளிக்கிறது. இப்போது ஆயுஷ்மான் திட்டம் தில்லியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தில்லி மக்கள் இலவச சிகிச்சையைப் பெறுகிறார்கள். வித்தியாசம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. குறைந்த வேலை, அதிக சாக்குப்போக்கு - இதுதான் அந்தப் பேரிடர் ஆட்சியாளர்களின் வழியாக இருந்தது. ஆனால் இன்று தில்லியின் மாதிரி - 'சாக்குப்போக்குகள் நின்றன, வேலைகள் தொடங்கின'. முந்தைய திட்டங்கள் கோப்புகளிலேயே முடங்கிப் போயின. இன்று திட்டங்கள் களத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

இன்று இங்கே வருவதற்கு முன்பாக, நான் சரோஜினி நகருக்குச் சென்றிருந்தேன். அங்கே புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு தேசிய உறுதிப்பாட்டையும் நிறைவேற்ற இரவும் பகலும் உழைக்கும் அரசு ஊழியர்களுக்காக இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் வசதியான வீடுகளைப் பெறுவது அவசியமாகும். அதனால்தான் இந்த புதிய மற்றும் நவீனக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இன்று ஆயிரக்கணக்கான இத்தகைய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய இல்லங்கள் நமது கர்மயோகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று நாட்டில் எங்கே பாஜக அரசு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் நகரத்திலும் மக்கள் ஏதோ ஒரு திட்டத்தின் மூலம் நிச்சயம் பயனடைந்து வருகின்றனர். நமது ஏழைக் குடும்பங்கள், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், நமது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், சிறு தொழில் செய்யும் நமது சகோதர சகோதரிகள் என இவர்கள் அனைவருக்கும் அரசு ஏதேனும் ஒன்றைச் செய்து வருகிறது. நமது தெருவோர வியாபாரிகளை உதாரணமாகச் சொல்கிறேன். நமது அன்றாட வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவத்தை கொரோனா காலத்தில் நாம் உணர்ந்தோம். இவர்கள் ஒரு காலத்தில் தங்கள் தள்ளுவண்டிகளைக் கூட வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழலில் இருந்தவர்கள். ஒரு சிறு தொழிலைத் தொடங்க, மற்றவர்களிடம் ஒன்று அல்லது இரண்டாயிரம் ரூபாயைக் கூட அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் நமது அரசு அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களை வங்கி முறையுடன் இணைத்தது. இன்று, பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான  கடனுதவி திட்டத்தின் மூலம், இத்தகைய பயனாளிகள் தங்கள் வேலைக்காக எளிதான கடன்களைப் பெறுகிறார்கள். தில்லியிலும், சுமார் 2 லட்சம் தெருவோர வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் சுமார் 350 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

சற்று நேரத்திற்கு முன்புதான், தள்ளுவண்டிகளில் பணிபுரியும் சில பெண்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் எவ்வளவு வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்கள் என்பதைக் கேட்டபோது என் இதயம் பெருமிதத்தால் நிறைந்தது.

நண்பர்களே,

இதே தில்லியில், ஒரு காலத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்வந்தர்களின் கைகளில் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது. இப்போது நமது தெருவோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் கூட கிரெடிட் கார்டு வசதிகளைப் பெற்று வருகின்றனர். இந்தத் தெருவோர வியாபாரிகளுக்குச் 'ஸ்வநிதி கிரெடிட் கார்டுகளை' வழங்க அரசு ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இனி அவர்களின் பாக்கெட்டிலும் ஒரு கிரெடிட் கார்டு இருக்கும், அதை அவர்கள் தங்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். சற்று நேரத்திற்கு முன்பு, இதே மேடையில், இந்தப் பெண்களில் சிலருக்கு ஸ்வநிதி கிரெடிட் கார்டுகளை வழங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த அட்டைகள் ஏழைகளின் கண்ணியத்திற்கான ஒரு புதிய ஊடகமாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நாடு முழுவதும் உள்ள எனது கோடிக்கணக்கான சகோதரிகளுடன் மற்றொரு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் 3 கோடி பெண்களை "லட்சாதிபதி சகோதரிகளாக" மாற்ற வேண்டும் என்று நாங்கள் உறுதி பூண்டோம். கிராமப்புறப் பெண்கள் லட்சாதிபதிகளாவதா என்று பலர் என்னைக் கேலி செய்தனர், தேர்தல் வெற்றி பெற மோடி இவ்வாறு கூறுகிறார் என்றனர். நான் விமர்சிக்கப்பட்டேன், பரிகாசம் செய்யப்பட்டேன்; சமூக ஊடகங்கள் முழுக்க இதைப் பற்றிய கேலிகள் நிறைந்திருந்தன. ஆனால் இன்று, சர்வதேச மகளிர் தினத்தில், எனது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அளப்பரிய வலிமை உள்ளது என்பதை நான் பெருமையுடன் பிரகடனம் செய்கிறேன். வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர்களால் அசாதாரண சாதனைகளை நிகழ்த்த முடியும். 3 கோடி பெண்களை "லட்சாதிபதி சகோதரிகளாக" மாற்ற வேண்டும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது 3 கோடிக்கும் அதிகமான சகோதரிகள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.

நண்பர்களே,

பல தசாப்தங்களாக, நமது கிராமப்புறச் சகோதரிகள் திறமை படைத்தவர்களாகவும் கடினமாக உழைப்பவர்களாகவும் இருந்தனர்; ஆனால் அவர்களிடம் முதலீடும் வாய்ப்புகளும் இல்லை. அதனால்தான் அவர்களைச் சுய உதவிக் குழுக்களுடன் இணைத்தோம், வங்கிகளுடன் இணைத்தோம், அவர்களுக்குப் புதிய பயிற்சி, வாய்ப்புகள் மற்றும் சந்தை வசதிகளை வழங்கினோம். இன்று நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்தகைய குழுக்களில் இணைந்துள்ளனர். இந்தச் சுய உதவிக் குழுக்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக, கிராமப்புறப் பெண்கள் தற்சார்பு உடையவர்களாக மாறி, தங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்தி, "லட்சாதிபதி சகோதரிகளாக" மாறி கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றனர்.

நண்பர்களே,

நமது சகோதரிகளின் வெற்றி, ஒரு புதிய உறுதிப்பாட்டை எடுக்க நமக்கு உத்வேகம் அளித்துள்ளது. 3 கோடி "லட்சாதிபதி சகோதரிகளை" உருவாக்குவது ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியது, ஆனால் அது இப்போது சாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 3 கோடி பேரை இதில் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாறியுள்ள 3 கோடி பேருடன் கூடுதலாக, இன்னும் 3 கோடி பேரை அவ்வாறு மாற்ற நாங்கள் இப்போது உறுதி பூண்டுள்ளோம். நமது தேசத்தின் பெண் சக்தியின் ஆசீர்வாதத்துடன், இந்த உறுதிமொழியும் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

சகோதர சகோதரிகளே,

இன்று நாடு நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் சாதனைகளைக் கொண்டாடும் வேளையில், தில்லி மக்களிடமும் தேசத்திடமும் ஒரு வலியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வலியும் வேதனையும் இதயத்தில் ஏற்பட்ட ஒரு ஆழமான வடுவாகும், அதை குடிமக்களின் முன்னிலையில் வெளிப்படுத்த விரும்புகிறேன். தேசம் இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நிலையில், நேற்று மேற்கு வங்கத்தில் டிஎம்சி அரசு குடியரசுத் தலைவர் மாண்புமிகு திருமதி திரௌபதி முர்மு அவர்களைக் கடுமையாக அவமதித்துள்ளது. சந்தால் பழங்குடி மரபின் ஒரு முக்கிய விழாவில் பங்கேற்பதற்காக அவர் வங்காளத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், குடியரசுத் தலைவரையும் இந்த முக்கியமான பழங்குடியின நிகழ்ச்சியையும் கவுரவிப்பதற்குப் பதிலாக, சந்தால் மக்களின் அந்தப் புனிதமான நிகழ்வையும், குடியரசுத் தலைவரையும் டிஎம்சி புறக்கணித்தது. அவரே பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் சந்தால் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். டிஎம்சி அரசு அந்த நிகழ்ச்சியைச் சீர்குலைத்தது.

நண்பர்களே,

இது குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட அவமானம் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆன்மாவிற்கும் மற்றும் ஜனநாயகத்தின் சிறந்த மரபுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும். போராட்டங்கள் மூலம் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ள ஒவ்வொரு சகோதரிக்கும் மகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானமும் கூட.

நண்பர்களே,

நமது மரபில் ஒரு பொன்மொழி உண்டு:  அதாவது, அகங்காரத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு நபர் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும், இறுதியில் அவர் முற்றிலும் அழிந்து போவார்! இன்று நாட்டின் தலைநகரில் இருந்து உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு குடியரசுத் தலைவரை அவமதித்த டிஎம்சியின் அழுக்கு அரசியலும், அதிகார மமதையும் விரைவில் சுக்குநூறாக உடையும். ஒரு பெண்ணை அவமதித்ததற்காகவும், ஒரு பழங்குடியினரை அவமதித்ததற் காகவும், தேசத்தின் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவரை அவமதித்ததற்காகவும் மேற்கு வங்கத்தின் அறிவுசார்ந்த மக்கள் டிஎம்சியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நாடும் அவர்களை மன்னிக்காது, பழங்குடியின சமூகமும் அவர்களை மன்னிக்காது, தேசத்தின் பெண் சக்தியும் அவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

நண்பர்களே,

ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு சிந்தனையையும் மதிக்க நமது கலாச்சாரம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளவும் நமது பண்பாடு நமக்குக் கற்பிக்கிறது. இதன் உத்வேகத்துடன், இன்று தில்லியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் நாம் பணியாற்றி வருகிறோம். சமீப ஆண்டுகளில், மத்தியில் உள்ள பாஜக அரசு "பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி" என்ற மந்திரத்துடன் செயல்பட்டு, தில்லியின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்தியுள்ளது. தில்லியில் பல புதிய இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தேசத்திற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம், கடமைப் பாதை கர்த்தவ்ய பவன் மற்றும் சேவா தீர்த்தம் ஆகியவை 21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் புதிய பார்வையைப் பிரதிபலிக்கின்றன. சில நாட்களுக்கு முன்புதான், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு பாரத மண்டபத்தில் நடைபெற்றது. பாரத மண்டபம் மற்றும் யசோபூமி போன்ற இடங்கள் இந்தியாவின் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் திறன்களை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன. பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் யுகே-யுகீன் பாரத அருங்காட்சியகம் போன்ற புதிய அருங்காட்சியகங்களும் தில்லியின் அடையாளத்தை வலுப்படுத்தி வருகின்றன.

நண்பர்களே,

தில்லி என்பது இந்தியாவின் வரலாற்றுப் பயணத்தின் நகரம், இன்று இதே தில்லி தேசத்தின் புதிய யுகத்திற்குச் சாட்சியாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் தன்னம்பிக்கை யுகம். இந்தத் தன்னம்பிக்கை நம்மை ஒரு வளர்ந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும். எனவே, ஒவ்வொரு உறுதிப்பாட்டையும் நிறைவேற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ரேகா குப்தா அவர்களது தலைமையின் கீழும், அவரது ஒட்டுமொத்தக் குழுவின் கீழும், தில்லியின் ஒவ்வொரு வளர்ச்சிப் பணியும் இன்னும் அதிக வேகத்தைப் பெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தில்லியின் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சியானதாகவும், செழிப்பானதாகவும் மாறும். இந்த நல்லிணக்க உணர்வுடன், இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்-

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

***

(Release ID: 2236582)

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2281531) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam