கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு அமைச்சகத்தின் 5-வது நிறுவன நாள் விழா - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பல்வேறு முக்கியத் திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 05 JUL 2026 5:21PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (6 ஜூலை 2026) புதுதில்லி, பாரத் மண்டபத்தில் நடைபெறும் கூட்டுறவு அமைச்சகத்தின் 5-வது நிறுவன நாள் விழாவில் கலந்துகொள்கிறார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் “ கூட்டுறவின் மூலம் வளம்” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த விழாவில் பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

 கடந்த ஐந்து ஆண்டுகளில், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், நகர்ப்புற கூட்டுறவு சங்கங்கள், தேசிய அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக இந்த அமைச்சகம் பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர்கள் திரு கிருஷ்ண பால் குர்ஜார், திரு முரளிதர் மோஹோல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். கூட்டுறவு, வேளாண்மை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள். தேசிய கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு கூட்டமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், பால் கூட்டுறவு சங்கங்கள், பாரத் டாக்ஸி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த பிற பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

திரு அமித் ஷா இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை சார்ந்த பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பல முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இவற்றில் 232 தானிய சேமிப்புக் கிடங்குகளின் திறப்பு விழா, அமுல், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும். உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி, மகாராஷ்டிராவின் ஜல்காவ்ன் ஆகிய இடங்களில் உள்ள பிபிஎஸ்எஸ்எல்-ன் திசு வளர்ப்பு வசதிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் இணையதளம் தொடக்கம், கூட்டுறவு வங்கிகளுக்கான உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தளமான சகாகார் சஹயோகி அறிமுகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.

 இந்நிகழ்ச்சியில், திரு அமித் ஷா பால் கூட்டுறவு சங்கங்களுக்கான மாதிரி துணை விதிகளையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவு அமைச்சகத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தையும் வெளியிடுவார்.

கூட்டுறவின் மூலம் வளம், வளர்ச்சியடைந்த இந்தியா, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைகளுடன், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறு உற்பத்தியாளர்கள், பால் பண்ணை விவசாயிகள், நகர்ப்புற கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கூட்டுறவு சூழலமைப்பை உருவாக்குவதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த விழா மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281327&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281360) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Malayalam