பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 16 APR 2026 12:48PM by PIB Chennai

மேதகு அதிபர் திரு. ஸ்டாக்கர் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்! க்ரூஸ் காட்!

அதிபர் திரு. ஸ்டாக்கர் அவர்களே, இந்தியாவிற்கு முதன்முறையாக வருகை தந்துள்ள உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஐரோப்பாவிற்கு வெளியே உங்களது முதல் பயணத்திற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியா-ஆஸ்திரியா உறவுகளின் மீதான உங்களது தொலைநோக்குப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரிய அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குப்  பிறகு, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய கட்டம் தொடங்கியுள்ளது. அதிபர் ஸ்டாக்கரின் இந்த வருகையின் மூலம், இந்தியா-ஆஸ்திரியா உறவுகளை நாம் ஒரு புதிய யுகத்திற்கு இட்டுச் செல்கிறோம்.

நண்பர்களே,

கட்டமைப்பு, புத்தாக்கம்  மற்றும் நிலைத்தன்மை  ஆகியவற்றில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் நம்பகமான பங்காளிகளாக உள்ளன. தில்லி மெட்ரோ முதல் இமயமலையில் 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை  வரை, சுரங்கப்பாதை அமைப்பதில் ஆஸ்திரியாவின் நிபுணத்துவம் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ரயில்வே திட்டங்கள் முதல் குஜராத்தின் கிர்னார் கயிறு வழிப்பாதை வரையிலும், தூய்மையான எரிசக்தி முதல் நகர வளர்ச்சி வரையிலும், இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஏராளமான பொறியியல் திட்டங்களில் ஆஸ்திரிய நிறுவனங்கள் தீவிர பங்காளிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

அதிபர் திரு. ஸ்டாக்கரின் இந்த வருகையானது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய ஆற்றலைக் கொண்டுவர உள்ளது. அவர் ஒரு வலுவான தொலைநோக்குப் பார்வையுடனும், மிகப்பெரிய வணிகக் குழுவுடனும் இந்தியாவிற்கு வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆஸ்திரியாவின் நிபுணத்துவத்தை இந்தியாவின் வேகம் மற்றும் அளவோடு  இணைப்பதன் மூலம், உலகிற்கான நம்பகமான தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை  உருவாக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். மேலும் பாதுகாப்புத் துறை, செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் எங்களது கூட்டாண்மையை ஆழப்படுத்துவோம்.

அதே வேளையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவோம். டெல்லி ஐஐடி  மற்றும் ஆஸ்திரியாவின் மொண்டன் பல்கலைக்கழகத்திற்கு  இடையே இன்று கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த அறிவுப் பரிமாற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

நண்பர்களே,

இந்தியாவின் திறமையானது ஆஸ்திரியாவின் புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 2023-ம் ஆண்டில், ஆஸ்திரியாவுடன் விரிவான 'குடியேற்றம் மற்றும் நகர்வு ஒப்பந்தத்தை' நாம் மேற்கொண்டோம். அந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது செவிலியர் துறையிலும் நகர்வை  மேலும் மேம்படுத்துவோம்.

மேலும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்-அப்  ஒத்துழைப்பை நாங்கள் வலுப்படுத்துவோம். இளைஞர்களிடையே பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், 'இந்தியா-ஆஸ்திரியா வொர்க்கிங் ஹாலிடே'  திட்டத்தையும் இன்று நாங்கள் தொடங்குகிறோம்.

நண்பர்களே,

இன்று ஒட்டுமொத்த உலகமும் மிகவும் கடுமையான மற்றும் பதற்றமான சூழலைக் கடந்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் நம் அனைவராலும் உணரப்படுகிறது. இத்தகைய பதற்றமான உலகளாவிய சூழலில், இராணுவ மோதல்கள் மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது என்பதில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் உடன்படுகின்றன. உக்ரைனாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவாக  இருந்தாலும் சரி, ஒரு நிலையான மற்றும் நீடித்த அமைதியையே நாங்கள் ஆதரிக்கிறோம்.

மேலும், அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம். பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தே அழிப்பது என்பது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடாகும்.

மேதகு அதிபர் அவர்களே,

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, 2024-ம் ஆண்டு எனது ஆஸ்திரியப் பயணம் அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடர்ந்து, இன்று உங்களை இந்தியாவில் வரவேற்பதில் நாங்கள் பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். இந்தியா-ஆஸ்திரியா இடையிலான கூட்டாண்மையை புத்தாக்கத்தை மையமாகக் கொண்டதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்ற நாம் இணைந்து செயல்படுவோம்.

மிக்க நன்றி.

டேன்கே ஷான்

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

----

(Release ID:2252505)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2279002) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam