பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்

நமது மகளிர் சக்தியை வலுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு இது: பிரதமர்

முடிவெடுக்கும் செயல்பாடுகளில் மகளிர் சக்தியை உள்ளடக்குவது, வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்கு முக்கியமானது: பிரதமர்

प्रविष्टि तिथि: 16 APR 2026 6:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.04.2026) மக்களவையில் உரையாற்றினார். முக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீதான விவாதம் அதிகாலையிலேயே தொடங்கியதை குறப்பிட்ட பிரதமர், பலர் உண்மைகளையும் தர்க்கத்தையும் சார்ந்து முக்கியப் பிரச்சினைகளைத் திறம்படக் கையாண்டதாகக் குறிப்பிட்டார்.

ஒரு தேசத்தின் பயணத்தில் முக்கியமான தருணங்கள் வரும் என்று கூறிய பிரதமர், தற்போதைய காலகட்டம் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதுபோன்ற ஒரு வரலாற்றுத் தருணம் என்றார்.  ஜனநாயகத்தின் தாயான இந்தியாவின் அடையாளத்தை எடுத்துரைத்த அவர், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தின் ஒரு புதிய, சீர்திருத்தப் பரிமாணத்தில் அனைத்து அவை உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக உள்ள பெண்களைக் கொள்கை வகுப்பதில் தீவிரப் பங்கேற்பாளர்களாக மாற்றுவது குறிப்பிடத் தகுந்த அம்சம் என்று கூறிய பிரதமர், இந்த முக்கிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியா பெற்றுள்ள புதிய தன்னம்பிக்கையை அங்கீகரித்த பிரதமர், வளர்ந்த இந்தியாவுக்கான தீர்மானத்துடன் இது மிகுந்த பெருமைக்குரிய தருணமாக அமையும் வகையில், தற்போது ஒட்டுமொத்த தேசமும் பரவலான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் கூறினார். 50 சதவீதம் உள்ள பெண்களை கொள்கை உருவாக்கத்தில் ஒரு பகுதியாக ஆக்குவது ஒரு அவசரத் தேவை என்று வலியுறுத்திய அவர், கடந்த காலத்தில் தாமதங்கள் இருந்தபோதிலும், எந்தக் கட்சியும் கொள்கையளவில் மசோதாவை எதிர்க்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

முறைசார்ந்த ஆட்சிக்கு வெளியே ஒரு அமைப்புப் பணியாளராக இருந்த தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், பஞ்சாயத்து மட்டத்தில் இட ஒதுக்கீடுகள் பாரபட்சமின்றி எளிதாக வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். தலைவர்கள் தங்கள் உடனடிப் பதவிகளையோ அல்லது அதிகாரத்தையோ இழக்க நேரிடும் என்ற அச்சம் இல்லாத காரணத்தால், பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடுகளை வழங்குவதில் தயக்கம் காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இப்போது சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களையும் உள்ளடக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த பெண் தலைவர்கள் இனி அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்காலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறினார். 33 சதவீதப் பிரதிநிதித்துவம் எட்டப்பட்டவுடன், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆணாதிக்க மேற்பார்வையின்றி, தனித் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 நாட்டின் பெருமையை உயர்த்துவதில் பெண் சக்தி எந்த வகையிலும் பின்தங்கியிருக்கவில்லை என்று கூறினார். தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள், ஒட்டுமொத்த நாட்டையும் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் மகத்தான பங்களிப்புகளைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களை ஒருங்கிணைப்பது நாட்டின் ஒட்டுமொத்தத் திறனைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த மகத்தான நடவடிக்கையை அற்பமான தேர்தல் கணக்குகளின் அடிப்படையில் அல்லாமல், தேசிய நலனின் அடிப்படையில் மதிப்பிடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

2023-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தச் சட்டம் ஒருமனதாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இது நாடு தழுவிய அளவில் ஒரு நேர்மறையான, கட்சி சார்பற்ற சூழலை வெற்றிகரமாக உருவாக்கியது என்று குறிப்பிட்டார்.  2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற விரிவான விவாதங்கள், விரைவாகச் செயல்பட வேண்டிய பரவலான அவசரத்தை எடுத்துக்காட்டியதாகக் கூறிய அவர், 2024-ம் ஆண்டுக்கு முன்பு உடனடி அமலாக்கம் சாத்தியமில்லை என்றாலும், 2029-ம் ஆண்டு வாய்ப்பைத் தவறவிடுவது பொதுமக்களின் நம்பிக்கையை நிரந்தரமாகச் சிதைத்துவிடும் என்று விளக்கினார்.

அரசியலமைப்பு கடமைகளை நினைவூட்டிய பிரதமர், சபையில் அமர்ந்திருக்கும் எந்தவொரு உறுப்பினருக்கும் நாட்டை துண்டு துண்டாகப் பார்க்கவோ அல்லது புவியியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட முடிவுகளை எடுக்கவோ உரிமை இல்லை என்று கூறினார். காஷ்மீராக இருந்தாலும் சரி, கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் புனிதமான உறுதிமொழிகள், ஒரே ஒருங்கிணைந்த தேசமாக பிரத்யேகமாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படைப் பொறுப்பை வலியுறுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அப்பட்டமான பொய்களால் உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற அரசியல் கருத்துகளை வன்மையாகக் கண்டித்த அவர், புதிய தொகுதி மறுவரையறை செயல்முறைகள் எந்தவொரு மாநிலத்திற்கோ அல்லது பிராந்தியத்திற்கோ எதிராக பாகுபாடு காட்டாது என்று உறுதிபட தெரிவித்தார்.

இது பெண்களின் உரிமை என்பதால், தாங்கள் பெருந்தன்மையுடன் அவர்களுக்கு எதையோ 'கொடுப்பதாக' யாரும் ஆணவத்துடன் கருதக்கூடாது என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக இந்த உரிமையைத் தடுத்து வைத்திருப்பதில் ஒட்டுமொத்த அமைப்பும் குற்றவாளியாக உள்ளது என்றும், எனவே இந்த மசோதா ஒரு அவசியமான செயல் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சேவையாற்றத் தயாராக உள்ள, மிகுந்த அனுபவமும் திறமையும் கொண்ட பெண் சக்தி ஏராளமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தப் பெண்கள் மீது உறுதியான நம்பிக்கை வைப்பது, நாட்டின் நிர்வாகத்திற்கு சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள பங்களிப்புகளை உறுதி செய்யும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

தமது உரையை நிறைவுசெய்த பிரதமர், மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு சபையில் அமர்வதற்கு மறுக்க முடியாத உரிமை உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252690&reg=3&lang=1

***

(Release ID: 2252690)

TV/PLM/KR

 


(रिलीज़ आईडी: 2278832) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam