PIB Backgrounder
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா - 11 ஆண்டு கால மாற்றங்கள்

प्रविष्टि तिथि: 27 JUN 2026 4:51PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா திட்டம், நாடு முழுவதும் மக்கள் பொதுச் சேவைகளை அணுகும் விதத்தை மாற்றி அமைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா டிஜிட்டல் பொது உட்கட்டமைப்புச் சூழலமைப்பை பெரிய அளவில் கட்டமைத்துள்ளது. டிஜிட்டல் தளங்கள், குறிப்பாக கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, விவசாயம், நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கான அணுகலை விரிவுபடுத்தியுள்ளன. டிஜிட்டல் பணம் செலுத்துதலில் இந்தியா ஒரு உலகளாவிய முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. மக்களை மையமாகக் கொண்ட, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வளர்ச்சியில் டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை வலுப்படுத்துகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் 2026 ஜூலை 1 அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 2015-க்கு முன்பு, பொதுச் சேவைகளைப் பெறுவதற்கு பெரும்பாலும் நீண்ட வரிசைகள், காகித வேலைகள், வரையறுக்கப்பட்ட இணைய இணைப்பு ஆகியவை மட்டுமே வழியாக இருந்தன. டிஜிட்டல் இந்தியா, இணைய அணுகலை விரிவுபடுத்தி, சேவைகளை இணையவழியில் கொண்டு வந்ததன் மூலம், இந்த டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க உதவியது. இது டிஜிட்டல் ஆளுகையை வலுப்படுத்தி , சேவைகளை வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும், மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றியது. தற்போது கோடிக்கணக்கானோர் சுகாதாரம், கல்வி, வங்கி, நலத்திட்டங்கள் போன்றவற்றுக்காக டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் அரசு செய்த முதலீடுகள், கிராமப்புற, நகர்ப்புற இந்தியா முழுவதும் இணைய இணைப்பை மேம்படுத்தின. மேலும், இத்திட்டம் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஜனநாயகமயமாக்கலை ஊக்குவித்தது.

கடந்த பத்து ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார கட்டமைப்பின் அடித்தளமாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா தற்போது முன்னணியில் உள்ளது; இதில் யுபிஐ மூலம் உலகளாவிய பரிவர்த்தனை அளவில் கிட்டத்தட்ட 49% கையாளப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 12% முதல் 14% பங்களிக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது சுமார் ஐந்தில் ஒரு பங்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா, அனைத்துத் துறைகளிலும் புத்தாக்கம், புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை வேகப்படுத்தியது. மேலும், இது செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தியது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு நகரும் வேளையில், டிஜிட்டல் இந்தியா நாடு தழுவிய அளவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தொழில்நுட்பத் தன்னிறைவு, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

டிஜிட்டல் இந்தியாவின் ஒன்பது தூண்கள்

தூண் 1: அகண்ட அலைவரிசை

தூண் 2: மொபைல் இணைப்பு

தூண் 3: பொது இணைய அணுகல் திட்டம்

தூண் 4: மின்-ஆளுகை

தூண் 5: இ-கிராந்தி: சேவைகளை மின்னணு முறையில் வழங்குதல்

தூண் 6: அனைவருக்கும் தகவல்

தூண் 7: மின்னணு உற்பத்தி

தூண் 8: வேலைவாய்ப்புகளுக்கான தகவல் தொழில்நுட்பம்

தூண் 9: முன்கூட்டிய தகவல் அளிக்கும் திட்டங்கள்

இந்த 9 தூண்கள், டிஜிட்டல் இந்தியாவிற்கான வியூகக் கட்டமைப்பை வழங்கி, தேசத்திற்கு அடித்தளமிடுகின்றன.

ஆதார், டிஜிலாக்கர், கோவின் (CoWIN), ஜிஇஎம் (GeM), தீக்ஷா (DIKSHA), உமாங் (UMANG), இ-சஞ்சீவனி போன்ற தளங்கள் சர்வதேச டிஜிட்டல் ஆளுகை மாதிரிகளை அதிகளவில் வடிவமைத்து வருகின்றன. மேலும், 2023-ல் தனது ஜி20 தலைமைத்துவத்தின்போது, இந்தியா ஸ்டாக் குளோபல், குளோபல் டிபிஐ ரெபாசிட்டரியை இந்தியா அறிமுகப்படுத்தியது. இது இந்திய டிஜிட்டல் தீர்வுகளுக்கான உலகளாவிய அணுகலை விரிவுபடுத்துகிறது. டிஜிட்டல் இந்தியா தனது அடுத்த பத்து ஆண்டுகளில் நுழையும் வேளையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் அதிகாரமளித்தல், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான ஒரு கருவியாக தொழில்நுட்பத்தை இந்தியா நிலைநிறுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278422&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278441) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Gujarati