பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு
प्रविष्टि तिथि:
26 FEB 2026 5:28PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் மற்றும் எனது நண்பர் திரு. நெதன்யாகு அவர்களே,
இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
நமஸ்கார்!
"ஷாலோம்!”
எனக்கும் இந்தியத் தூதுக்குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்காகப் பிரதமர் நெதன்யாகு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றேன். மீண்டும் ஒருமுறை, இஸ்ரேலின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில் கால் பதிப்பது எனக்குப் பெருமை யாகவும், ஆழமான நெகிழ்ச்சியைத் தரும் தருணமாகவும் அமைந்துள்ளது.
நேற்று, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், எனக்கு அந்த அவையின் தலைவர் பதக்கம்' வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த உயரிய கௌரவத்திற்காக இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கும் மாண்புமிகு சபாநாயகருக்கும், எனது நண்பர் பிரதமர் திரு. நெதன்யாகு அவர்களுக்கும் மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரத்தை 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் நீடித்த நட்புக்கும் நான் சமர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே,
நமது உறவு ஆழமான நம்பிக்கை, பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் வலுவான மனிதாபிமானப் பிணைப்புகளின் அடிப்படையில் அமைந்தது. காலத்தின் சோதனைகளைக் கடந்து நமது உறவு நிலைத்து நிற்கிறது.
இன்று, காலத்தால் சோதிக்கப்பட்ட நமது கூட்டாண்மையை "சிறப்பு உத்திசார் கூட்டாண்மை" என்ற நிலைக்கு உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவானது இரு நாட்டு மக்களின் விருப்பங்களையும் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
இன்றைய கூட்டத்தில், நமது ஒத்துழைப்பிற்கு ஒரு புதிய திசையையும், அதிக வேகத்தையும் அளிப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். நமது பொருளாதாரக் கூட்டாண்மையானது வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் பகிரப்பட்ட வளத்திற்கான இயந்திரமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பரஸ்பர முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்காக, கடந்த ஆண்டு நாம் ஒரு 'இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை' மேற்கொண்டோம். அதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய 'தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும்' விரைவில் இறுதி செய்வோம்.
நமது எதிர்காலக் கூட்டாண்மையின் இதயப்பகுதியாகத் தொழில்நுட்பம் விளங்குகிறது. இன்று, 'முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை' நிறுவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது செயற்கை நுண்ணறிவுகுவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான கனிமங்கள் போன்ற துறைகளில் நமது ஒத்துழைப்பிற்குப் புதிய வேகத்தை அளிக்கும்.
இஸ்ரேலில் 'யுபிஐ' பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்த வகை செய்யும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். டிஜிட்டல் சுகாதாரத் துறையிலும், நமது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.
பாதுகாப்புத் துறையில் பல தசாப்தங்களாக நாம் நம்பிக்கைக்குரிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தக் கூட்டாண்மைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கும். நாம் இணைந்து, கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றை நோக்கி முன்னேறுவோம்.
அதே வேளையில், சிவில் அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற துறைகளிலும் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவோம்.
நண்பர்களே,
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு நீண்ட மற்றும் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டது. இன்று, இந்த ஒத்துழைப்பிற்கு ஒரு எதிர்கால நோக்கிய திசையை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.
இந்தியாவில் இஸ்ரேலின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட ‘மேன்மைமிகு மையங்கள்’ இன்று நமது நட்புறவிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. அவற்றின் வெற்றியால் ஊக்கம் பெற்று, அத்தகைய மையங்களின் எண்ணிக்கையை 100-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்த ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ‘சிறப்பு கிராமங்களை’ உருவாக்குவதை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சியானது இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் கிராமங்களுக்குக் கொண்டு செல்வதுடன், லட்சக்கணக்கான விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் கணிசமாக உயர்த்தும்.
வருங்காலத்திற்கு ஏற்ற விவசாயத் தீர்வுகளையும் நாம் இணைந்து உருவாக்குவோம். இந்தியாவில் "இந்தியா-இஸ்ரேல் விவசாய புத்தாக்க மையம்" நிறுவப்படுவது, இந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வலுவான அடித்தளத்தை வழங்கும்.
நண்பர்களே,
நமது மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்பு, இந்த உறவின் மிக முக்கியமான தூணாக விளங்குகிறது. 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'மனிதவள நடமாடும் ஒப்பந்தத்தின்' மூலம், இஸ்ரேலின் கட்டுமானத் துறை மற்றும் பராமரிப்புப் பணிகளில் இந்தியா குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் தங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.
இந்த ஒத்துழைப்பு தற்போது வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை இணைப்பது எங்களின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது. அந்தத் திசையில், இன்று நாம் 'இந்தியா-இஸ்ரேல் கல்விசார் மன்றத்தை' நிறுவுகிறோம்.
நண்பர்களே,
இன்று பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டோம். பிராந்திய அளவிலான இணைப்பை மேம்படுத்தும் வகையில், 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்' மற்றும் 'I2U2' (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா) ஆகிய திட்டங்களில் புதிய வேகத்துடன் நாம் முன்னேறிச் செல்வோம்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இந்த நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக உள்ளன:
உலகில் பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை.
எத்தகைய வடிவத்தில் இருந்தாலும், எந்த வகையில் வெளிப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பயங்கரவாதத்தையும், அதனை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பதில் நாம் தோளோடு தோள் நின்று செயல்பட்டு வருகிறோம்; அதைத் தொடர்ந்து செய்வோம்.
மேற்கு ஆசியாவின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, ஆரம்பத்திலிருந்தே நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதையே ஆதரித்து வருகிறோம். இதுவே உலகளாவிய வளர்ந்து வரும் நாடுகளின் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அழைப்பாகும்.
இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது:
மனிதகுலம் ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகிவிடக் கூடாது. காசா அமைதித் திட்டம் அமைதியை நோக்கிய ஒரு பாதையைத் திறந்து விட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. எதிர்காலத்திலும் அனைத்து நாடுகளுடனும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
மேதகு பிரதமர் அவர்களே, எனது அருமை நண்பரே,
உங்களது அன்பும் கனிவான உபசரிப்பும் எனது இந்த பயணத்தை உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. உங்களிடமிருந்தும், இஸ்ரேல் நாட்டு மக்களிடமிருந்தும் நான் பெற்ற அன்பு, நல்லெண்ணம் மற்றும் மரியாதைக்காக எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
"தோடா ரப்பா"
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது.
----
(Release ID: 2233150)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2276927)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam