பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாடு 2026-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 19 FEB 2026 12:36PM by PIB Chennai

மேதகு தலைவர்களே, மாண்புமிகு அமைச்சர்களே, தொழில் துறைத் தலைவர்களே, கண்டுபிடிப்பாளர்களே, புத்தொழில் முனைவோரே, ஆராய்ச்சியாளர்களே, பிரதிநிதிகளே மற்றும் சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே - உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்!

உலகின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு' உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடான இந்தியாவில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம், தொழில்நுட்பத் திறமையாளர்களின் மிகப்பெரிய குழு மற்றும் மிகவும் விரிவான தொழில்நுட்ப அடிப்படையிலான சூழல் அமைப்பு ஆகியவற்றின் இருப்பிடமாக பாரதம் திகழ்கிறது.

இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அவற்றைத் தழுவிக்கொள்கிறது. புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ள 140 கோடி இந்தியர்களின் சார்பாக, இங்கு வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும், உலகளாவிய ஏஐ சூழல் அமைப்பின் தலைவர்களுக்கும் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் எனது அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வருகைக்கு எனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உச்சிமாநாட்டை இந்தியா நடத்துவது, இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்குலகிற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஏஐ உலகின் முக்கிய வல்லுநர்கள் அனைவரும் இன்று இங்கே கூடியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதித்துவத்துடனும், உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள சிறந்த பங்கேற்பாளர்களுடனும், இந்த உச்சிமாநாடு வெற்றியின் புதிய உயரங்களை தொட்டுள்ளது.

இளைய தலைமுறையினரின் வலுவான பங்களிப்பு எனக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. பொதுவாக, புதிய தொழில்நுட்பங்கள் தொடக்க நிலையில் சந்தேகத்துடனேயே பார்க்கப்படும். ஆனால், உலகின் இளைஞர்கள் எந்த வேகத்துடனும் நம்பிக்கையுடனும் ஏஐ-யைத் தழுவி, அதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிப் பயன்படுத்துகிறார்களோ, அது உண்மையிலேயே அசாத்தியமானது. இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது; குறிப்பாக இளைய திறமையாளர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.

வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி மற்றும் பன்மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற துறைகளில் இங்கே முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் – இந்தியாவில் தயாரிப்போம்  வலிமைக்கும், இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புத் திறனுக்கும் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.

நண்பர்களே,

மனித வரலாற்றில், சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு திருப்புமுனை ஏற்படும் - அது நாகரிகத்தின் திசையை மாற்றியமைக்கும், வளர்ச்சியின் வேகத்தை மாற்றும் மற்றும் நாம் சிந்திக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் வேலை செய்யும் முறைகளையே மாற்றும். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அத்தகைய மாற்றத்திற்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதன் உண்மையான தாக்கத்தை நாம் அரிதாகவே உணர்கிறோம்.

கற்களில் இருந்து முதன்முதலில் நெருப்புப் பொறி உருவானபோது, அதுவே நாகரிகத்தின் அடித்தளமாக மாறும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பேச்சு முதன்முதலில் எழுத்து வடிவம் பெற்றபோது, அந்த எழுத்துப்பூர்வமான அறிவே எதிர்கால அமைப்புகளின் முதுகெலும்பாக மாறும் என்று யாரும் முன்கூட்டியே கணிக்கவில்லை. சிக்னல்கள் முதன்முதலில் கம்பியில்லாத் தொழில்நுட்பம் மூலம் அனுப்பப்பட்டபோது, ஒரு நாள் ஒட்டுமொத்த உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

நண்பர்களே...

மனித வரலாற்றில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது அத்தகைய ஒரு பெரும் மாற்றமாகும். இன்று நாம் காண்பதும், கணிப்பதும் அதன் தாக்கத்தின் ஆரம்பகால அறிகுறிகள் மட்டுமே. ஏஐ இயந்திரங்களை அறிவார்ந்ததாக மாற்றுகிறது, ஆனால் அதைவிட முக்கியமாக, அது மனிதனின் திறனைப் பலமடங்கு பெருக்குகிறது. இந்த முறை வித்தியாசம் என்னவென்றால், இதன் வேகமும் அளவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது. முன்னதாக, ஒரு தொழில்நுட்பம் தனது தாக்கத்தைக் காட்ட பல தசாப்தங்கள் எடுத்தன. இன்று, ‘இயந்திரக் கற்றலில்’ இருந்து ‘கற்கும் இயந்திரங்களாக’ மாறும் பயணம் வேகமானது, ஆழமானது மற்றும் விரிவானது.

எனவே, நமது பார்வையும் அதே அளவு விரிவானதாக இருக்க வேண்டும், நமது பொறுப்பும் அதே அளவு ஆழமானதாக இருக்க வேண்டும். தற்போதைய தலைமுறையினருடன் சேர்ந்து, எதிர்காலத் தலைமுறையினரிடம் எத்தகைய ஏஐ-யை நாம் ஒப்படைக்கப் போகிறோம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவால் என்ன செய்ய முடியும் என்பது உண்மையான கேள்வி அல்ல, இன்று நாம் அதைக் கொண்டு என்ன செய்யத் தேர்வு செய்கிறோம் என்பதே கேள்வி.

மனிதகுலம் இதற்கு முன்பும் இத்தகைய கேள்விகளைச் சந்தித்துள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அணுசக்தி - அதன் அழிவு சக்தியையும் நாம் பார்த்திருக்கிறோம், அதன் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் நாம் பார்த்திருக்கிறோம். ஏஐ-யும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி: அதற்கு முறையான திசை இல்லையென்றால், அது சீர்குலைவுக்கு வழிவகுக்கும்; சரியாக வழிநடத்தப்பட்டால், அது ஒரு தீர்வாக மாறும். ஏஐ-யை இயந்திரங்களை மையமாகக் கொண்டதாக இல்லாமல், மனிதர்களை மையமாகக் கொண்டதாகவும் பொறுப்பற்றதாக இல்லாமல் உணர்வுபூர்வமானதாகவும், பொறுப்பானதாகவும் மாற்றுவது எப்படி - இதுவே இந்த உலகளாவிய ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

நண்பர்களே,

ஏஐ குறித்த இந்தியாவின் பார்வை இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது: "சர்வஜன் ஹிதாய, சர்வஜன் சுகாய" - அதாவது, அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி. இதுவே எங்களது அளவுகோல். ஏஐ மனிதர்களை வெறும் தரவுப் புள்ளிகளாகவோ அல்லது மூலப்பொருட்களாகவோ சுருக்கிவிடக் கூடாது. எனவே, ஏஐ ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இது குறிப்பாக தெற்குலகம் முழுவதும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் அதிகாரமளித்தலுக்குமான ஒரு ஊடகமாக மாற வேண்டும்.

நண்பர்களே,

நாம் ஏஐ-க்குத் திறந்த வானத்தைக் கொடுக்க வேண்டும், ஆனால் அதன் கட்டுப்பாட்டை நமது கைகளிலேயே வைத்திருக்க வேண்டும். ஜிபிஎஸ் போன்றதுதான் - அது பாதையை பரிந்துரைக்கும், ஆனால் திசை குறித்த இறுதி முடிவு நம்முடையது. இன்று நாம் ஏஐ-க்குத் தேர்ந்தெடுக்கும் பாதையே, நாளை நாம் உருவாக்கும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

நண்பர்களே,

புதுதில்லி ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், ஏஐ குறித்த இந்தியாவின் பார்வையை - M.A.N.A.V. (மானவ் - MANAV) - அதாவது மனிதன் என்பதை நான் முன்வைக்கிறேன். மானவ் (MANAV) பார்வையின் விளக்கம் வருமாறு:

M – Moral and Ethical Systems (ஒழுக்க மற்றும் அறநெறி அமைப்புகள்): ஏஐ என்பது அறநெறி வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.

A – Accountable Governance (பொறுப்புக்கூறத்தக்க நிர்வாகம்): வெளிப்படையான விதிகள் மற்றும் வலுவான கண்காணிப்பு.

N – National Sovereignty (தேசிய இறையாண்மை): தரவு (Data) அதை உருவாக்குபவர்களுக்கே சொந்தம்.

A – Accessible and Inclusive (அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய): ஏஐ ஒரு ஏகபோகமாக இருக்கக் கூடாது, அது ஒரு பெருக்கியாக (Multiplier) இருக்க வேண்டும்.

V – Valid and Legitimate (செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமான): ஏஐ சட்டபூர்வமானதாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டின் ஏஐ சார்ந்த உலகில், இந்தியாவின் இந்த 'மானவ்' பார்வை மனித நலனுக்கான முக்கிய இணைப்பாக இருக்கும்.

நண்பர்களே...

பல தசாப்தங்களுக்கு முன்பு இணையம் தொடங்கப்பட்டபோது, அது எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று யாரும் கற்பனை செய்யவில்லை. அதுவே ஏஐ-க்கும் பொருந்தும். இந்தத் துறையில் எதிர்காலத்தில் எத்தகைய வேலைகள் உருவாகும் என்பதை இன்று கணிப்பது கடினம். வேலையின் எதிர்காலம் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது அல்ல; அது நமது முடிவுகளையும், நாம் எடுக்கும் நடவடிக்கைகளையும் பொறுத்தே அமையும்.

வேலையின் எதிர்காலம் என்பது ஒரு புதிய வாய்ப்பு என்று நான் நம்புகிறேன். இது மனிதர்களும் அறிவார்ந்த அமைப்புகளும் இணைந்து செயல்படும் யுகம். "மனிதர்களும் அறிவார்ந்த அமைப்புகளும் இணைந்து உருவாக்குதல், இணைந்து பணியாற்றுதல் மற்றும் இணைந்து பரிணாம வளர்ச்சியடையும் ஒரு யுகத்திற்குள் நாம் நுழைகிறோம்." ஏஐ நமது வேலையை மிகவும் புத்திசாலித்தனமானதாகவும், திறமையானதாகவும் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்றும். நாம் சிறப்பாக வடிவமைப்போம், வேகமாக உருவாக்குவோம் மற்றும் வலுவான முடிவுகளை எடுப்போம். அதிகமான மக்கள் உயர் மதிப்புள்ள, ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள பணிகளைப் பெறுவார்கள். இது புதிய கண்டுபிடிப்புகள், புத்தொழில் முனைவு மற்றும் புதிய தொழில்துறைகளுக்கான சிறந்த வாய்ப்பாகும். எனவே, திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

நண்பர்களே,

வேலையின் எதிர்காலம் என்பது உள்ளடக்கியதாகவும், நம்பிக்கைக் குரியதாகவும் மற்றும் மனிதர்களை மையமாகக் கொண்டதாகவும் இருக்கும். நாம் அனைவரும் இணைந்து முன்னேறினால், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

நண்பர்களே,

"சூரிய ஒளியே சிறந்த கிருமிநாசினி" என்று ஒரு பழமொழி உண்டு; அதாவது வெளிப்படைத்தன்மையே மிகப்பெரிய பாதுகாப்பு. சில நாடுகளும் நிறுவனங்களும் ஏஐ-யை ஒரு "உத்தி ரீதியிலான சொத்து" என்றும், அதை ரகசியமாக உருவாக்க வேண்டும் என்றும் நம்புகின்றன. ஆனால் இந்தியா வித்தியாசமாகச் சிந்திக்கிறது. ஏஐ பகிரப்படும்போது மட்டுமே அது உலகிற்குப் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். குறியீடுகள் வெளிப்படையாகப் பகிரப்படும்போது, லட்சக்கணக்கான இளைஞர்களின் சிந்தனை அவற்றை இன்னும் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் மாற்றும். எனவே, ஏஐ-யை 'உலகளாவிய பொது நலம்' என்ற அடிப்படையில் மேம்படுத்த நாம் உறுதி ஏற்போம்.

நண்பர்களே,

இன்று மற்றொரு அவசரத் தேவை, உலகளாவிய தரநிலைகளை  நிறுவுவதாகும். 'டீப்ஃபேக்' மற்றும் ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் திறந்தநிலைச் சமூகங்களைச் சீர்குலைக்கின்றன. நிஜ உலகில், நாம் எதை உட்கொள்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள உணவுகளில் ஊட்டச்சத்து லேபிள்களைப் பார்க்கிறோம். அதேபோல், டிஜிட்டல் உலகில், உள்ளடக்கங்கள் உண்மையானவை என்பதற்கான அங்கீகார லேபிள்களைக் கொண்டிருக்க வேண்டும்; அப்போதுதான் எது உண்மையானது, எது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும். ஏஐ அதிகப்படியான உரைகள், படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதால், அதில் 'வாட்டர்மார்க்கிங்' மற்றும் தெளிவான ஆதாரத் தரநிலைகளின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால்தான், தொழில்நுட்பத்தின் தொடக்கத்திலிருந்தே நம்பிக்கையை அதன் ஒரு அங்கமாக உருவாக்க வேண்டும்.

நண்பர்களே...

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பள்ளிக்கூடப் பாடத்திட்டம் எவ்வாறு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ, அதேபோல ஏஐ வெளியும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும், குடும்பத்தினர் வழிகாட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்று உலகம் இரண்டு வகையான மனிதர்களாகப் பிரிந்துள்ளது: ஏஐ-யைப் பார்த்துப் பயப்படுபவர்கள் - அந்தப் பயத்தைப் பற்றி மட்டுமே பேசுபவர்கள்; மற்றொன்று ஏஐ-யில் நல்வாய்ப்பைக் காண்பவர்கள்.

நண்பர்களே,

நான் இதை மிகுந்த பொறுப்புடனும் பெருமையுடனும் கூறுகிறேன்: இந்தியா ஏஐ-யைக் கண்டு அச்சப்படவில்லை. இந்தியா ஏஐ-யில் நல்வாய்ப்பைக் காண்கிறது. இந்தியா ஏஐ-யில் எதிர்காலத்தைக் காண்கிறது. எங்களிடம் திறமை இருக்கிறது, ஆற்றலும் தகுதியும் இருக்கிறது, கொள்கை ரீதியான தெளிவும் இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டின் போது, மூன்று இந்திய நிறுவனங்கள் தங்களது சொந்த ஏஐ மாதிரிகள் மற்றும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாதிரிகள் நமது இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு, இந்தியா வழங்கும் தீர்வுகளின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றன.

நண்பர்களே,

குறைக்கடத்திகள் மற்றும் சிப் தயாரிப்பில் இருந்து குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை ஒரு வலிமையான சூழல் அமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. பாதுகாப்பான தரவு மையங்கள்  வலுவான தகவல் தொழில்நுட்ப அடித்தளம் மற்றும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பு ஆகியவை, மலிவான, விரிவாக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான ஏஐ தீர்வுகளுக்கான இயற்கையான மையமாக இந்தியாவை மாற்றியுள்ளன. இந்தியாவில் பன்முகத்தன்மை, மக்கள் தொகை மற்றும் ஜனநாயகம் ஆகிய மூன்று சிறப்புகள் உள்ளன. இந்தியாவில் வெற்றிபெறும் எந்தவொரு ஏஐ மாதிரியையும் உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும். எனவே, உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்: இந்தியாவில் வடிவமைத்து உருவாக்குங்கள். உலகிற்கு வழங்குங்கள். மனிதகுலத்திற்கு வழங்குங்கள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

----

(Release ID:2230121)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2276922) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam