குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, தொழில்முனைவு உணர்வை வளர்ப்பது உயர்கல்வி நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாகும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

प्रविष्टि तिथि: 21 JUN 2026 4:06PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 21, 2026) கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், எந்தவொரு தனிநபரின் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வியே மிகச் சிறந்த வழிமுறையாகும் என்று குறிப்பிட்டார். எனவே, பழங்குடியின சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபடுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். பழங்குடியின இளைஞர்கள், தங்களது அடையாளத்தையும், தனித்துவத்தையும், அதன் உண்மையான வடிவத்தில் பாதுகாத்துக் கொள்வதுடன், நவீன வளர்ச்சியிலும் பங்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதை ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், பழங்குடியின சமூகத்தின் பாரம்பரியத் திறன்கள், அறிவு ஆகியவை பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பழங்குடியினரின் அறிவு, கைவினை மரபுகள் குறித்த விரிவான ஆய்வு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும், ராணி துர்காவதி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் இது தொடர்பாகச் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதுடன், உயர்கல்வி நிறுவனங்கள் புத்தாக்கம், ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாகவும் செயல்படுகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, தொழில்முனைவு உணர்வை வளர்ப்பது இந்த நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாகும் என்றார். இந்திய கலாச்சாரம், மரபுகள், மொழிகள் மீது மாணவர்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்துவதும் அவசியமானது என்று அவர் கூறினார்.

நவீனத்துவம், பாரம்பரியத்தின் இணக்கமான கலவை மூலம் நாட்டின் சமச்சீரான வளர்ச்சி எட்டப்படும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276158&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276358) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam