பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 11:39PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

தனது உரையில், பிரான்சில் பல்வேறு துறைகளில் இந்திய சமூகம் ஆற்றி வரும் முக்கியப் பங்களிப்புகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய கண்டுபிடிப்புகளையும் கருத்துகளையும் உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதிலும், இந்தியா-பிரான்ஸ் இடையிலான 'சிறப்பு உலகளாவிய உத்திசார்ந்த கூட்டாண்மையை'  முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் பாராட்டினார். அதிகமான இந்திய மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிரான்சைத் தங்கள் இலக்காகக் கொள்வதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் ரீதியான உறவுகள் விரிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். பிரான்சில் யுபிஐ சேவையின் விரிவாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்தார்.

 

இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றங்கள் குறித்துப் பேசிய பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி , பெண்களை முன்னிலைப்படுத்தும் மேம்பாடு முதல் மனித குலத்தை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள உருமாற்றங்களைப் பட்டியலிட்டார். கடந்த 12 ஆண்டுகளில், 250 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியத் தொழிலாளர்கள், விவசாயிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

 

நைஸ் நகரில் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ் 2026'  மற்றும் பாரீஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026'  ஆகியவற்றில் இந்தியாவின் பங்கேற்பைக் குறிப்பிட்ட பிரதமர், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஒரு விருப்பமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதை வலியுறுத்தினார். 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வின் வெற்றியைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தளம் 'புத்தாக்க ராஜதந்திரத்திற்கு'  ஒரு சிறந்த முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.

 

எவியன் நகரில் நடைபெற்ற ஜி7  உச்சிமாநாட்டில் தனது பங்கேற்பு குறித்து விவரித்த பிரதமர், வளர்ந்து வரும் நாடுகள் சமமான கூட்டாளிகளாக நடத்தப்படும், நம்பிக்கையின் அடிப்படையிலான சர்வதேசக் கூட்டாண்மையை உருவாக்க இந்தியா உறுதியுடன் நிற்கிறது என்று தெரிவித்தார். டிஜிட்டல் யுகத்தின் சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பதில் இந்தியாவின் திறமை, அறிவு மற்றும் புத்தாக்கம் உலகிற்குப் பெரும் உதவியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்களிக்கவும், வளர்ச்சியடைந்த  இந்தியா பயணத்தில் இணையவும் புலம்பெயர் இந்தியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

 

இந்தக் கலந்துரையாடல் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான ஆழமான மக்கள் ரீதியான உறவுகளைப் பிரதிபலித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள தனது புலம்பெயர் மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274980&reg=3&lang=1

 

செய்தி அடையான எண்:2274980

***

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2275685) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Gujarati , Telugu , Malayalam