19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா : மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தொடங்கி வைத்தார்
ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் படங்களுக்கான இந்தியாவின் முதன்மைத் திருவிழாவான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 19-வது பதிப்பு, பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மும்பை தாதரில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் அரங்கில் இன்று (15.06.2026) மாலை தொடங்கியது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், இவ்விழாவைத் தொடங்கி வைத்து, ஒரு வார கால நிகழ்விற்கான முன்னோட்டமாக சிறப்புரை ஆற்றினார். கதைசொல்லல், உள்ளடக்க உருவாக்கம், படைப்பாற்றல் தொழில்முனைவு ஆகியவற்றில் வளர்ந்து வரும் உலகளாவிய மையமாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு படைப்பாற்றல் சக்தியாகவும், உள்ளடக்க உருவாக்கத்தில் நம்பகமான நாடாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நமது கதைகள் கண்டங்கள் கடந்து பார்வையாளர்களை ஊக்குவிக்கும் திறனைக் கொண்டுள்ளன எனவும் அதே நேரத்தில் நமது படைப்பாற்றல் மிக்க திறமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
வேகமான டிஜிட்டல் மாற்றம், விரிவடைந்து வரும் உள்ளடக்க நுகர்வு ஆகியவற்றால், இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை 2025-ம் ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி பெற்று ₹2.78 லட்சம் கோடியை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார். டிஜிட்டல் ஊடகம் இத்துறையின் மிகப்பெரிய பிரிவாக உருவெடுத்து, முதல் முறையாக ₹1 லட்சம் கோடி வருவாய் மைல்கல்லைக் கடந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இத்துறை 7 சதவீதத்திற்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2028-ம் ஆண்டுக்குள் ₹3.3 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரவித்தார். 2025-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிடப்பட்டு, திரையரங்கு வருவாயில் 16 சதவீத உயர்வுக்கு பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மும்பையை இந்தியாவின் படைப்பாற்றல் தலைநகரம் என்று கூறிய அவர், 2025-ல் இந்நகரில் நடைபெற்ற உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் (வேவ்ஸ் - WAVES) வெற்றியை நினைவு கூர்ந்தார்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம், இந்த விழாவுடன் தொடர்புடைய மற்ற அனைத்து தரப்பினருக்கும் வாழ்த்துத் தெரிவித்த டாக்டர் எல். முருகன், மும்பை சர்வதேச திரைப்பட விழாவானது, புதுமை, படைப்பாற்றல் ஆகியவை மூலம் ஊடக, பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடக்க விழாவில் உரையாற்றிய மகாராஷ்டிராவின் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு ஆஷிஷ் ஷேலார், உலகம் முழுவதிலுமிருந்து மும்பைக்கு வருகை தந்துள்ள பங்கேற்பாளர்களை வரவேற்றதோடு, படைப்பாற்றல் தொழில்களுக்கு ஆதரவளிப்பதில் மாநிலத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மும்பையில் முதல் இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தை அமைத்ததற்காக மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தினரை வரவேற்றுப் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், இந்த மும்பை சர்வதேச திரைப்பட விழா, கருத்துகளின் சுதந்திரமான பரிமாற்றம், படைப்பாற்றல் வெளிப்பாடு ஆகியவற்றின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.
இந்தியத் திரைப்படத்துறைக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக, புகழ்பெற்ற நடிகர் ஜெய்தீப் அலாவத்தை பாராட்டியது அந்த நிகழ்வின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. மற்ற முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், டாக்டர் எல். முருகன் அவரை கௌரவித்தார். இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட அலாவத், தமது நன்றியைத் தெரிவித்தார்.
தொடக்க விழாவில், இந்தியாவின் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு உயிரோட்டமான கலாச்சார நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இவ்விழாவில், புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளர் திரு அஷுதோஷ் கோவாரிகர், பிரசார் பாரதியின் தலைவர் திரு பிரசூன் ஜோஷி, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவர் திரு கிருஷ்ணகுமார், திரைப்படப் படைப்பாளர்கள், நடுவர் குழு உறுப்பினர்கள், இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்டு, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தால் (என்எஃப்டிசி) நடத்தப்படும் இந்த 7 நாள் விழா, திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையுலக வல்லுநர்கள், சினிமா ஆர்வலர்கள் என அனைவருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பிராந்திய சினிமா குரல்களை வெளிக்கொணரவும், இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், இந்த ஆண்டு இரண்டு புதிய பிரத்யேகப் பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்காசியாவின் மிகப் பழமையான, மிகப்பெரிய திரைப்பட விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மும்பை சர்வதேச திரைப்பட விழாவானது, ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு ஆகியவற்றின் ஒரு துடிப்பான கொண்டாட்டமாக நீண்ட காலமாகத் திகழ்கிறது. 1990-ல் நிறுவப்பட்டு, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா, உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், சினிமா ஆர்வலர்களை ஈர்க்கும் ஒரு மதிப்புமிக்க சர்வதேச தளமாக வளர்ந்துள்ளது.
இந்த ஆண்டு, விழாவின் போட்டிப் பிரிவிற்கு இந்தியா உட்பட 46 நாடுகளில் இருந்து 1,459 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருவிழா, 42-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், இந்தியாவிற்கு வெளியே 30-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களைத் திரையிடுவதன் மூலம், அதன் உலகளாவிய தாக்கத்தையும் கலாச்சாரப் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273245®=1&lang=1
Release ID : 2273245
****
TV/PLM/SH
रिलीज़ आईडी:
2273276
| Visitor Counter:
17