வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
'பவ்யா' இணையதளத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2026 6:07PM by PIB Chennai
'பாரத் தொழில் வளர்ச்சி (பவ்யா) திட்டத்தைச் செயல்படுத்துவதில், ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், புதுதில்லியில் இன்று அதற்கான இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பியூஷ் கோயல், பவ்யா திட்டம், போட்டித்தன்மை வாய்ந்த முன் மாதிரியைப் பின்பற்றும் என்று கூறினார். இத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள், தங்களது தொழில்துறை சார்ந்த வலிமை, நிலம் கையகப்படுத்துதல், முதலீட்டாளர்களின் ஆர்வம், துறைசார்ந்த வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி விரிவான திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படும். ரசாயனம், உற்பத்தி, தரவு மையங்கள் அல்லது பிற தொழில்கள் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு இடத்திற்கும் மிகவும் பொருத்தமான துறைகள், உள்கட்டமைப்புத் தேவைகளை அடையாளம் காண மத்திய அரசு தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார். நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதிகள், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்துறை பூங்காக்கள் குறித்த விரிவான தகவல்களை முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பெற முடியும் என்றும், இது அவர்கள் சரியான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள உதவிடும் என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறு துறைகள், முதலீட்டாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்துறை பூங்காக்கள் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், உள்நாட்டு, சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த இடங்களாக மாற்றுவதற்கும் இத்திட்டம் உதவிடும்.
கடந்த பத்தாண்டுகளில், சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, மெட்ரோ, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உள்கட்டமைப்பு, நீர் வசதி, டிஜிட்டல் இணைப்பு போன்ற துறைகளில் முதலீடுகள் செய்வதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான சாதகமான சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, திவால் மற்றும் நொடிப்பு நிலைச் சட்டம், தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகள், 5ஜி அலைக்கற்றை இணைப்பு விரிவாக்கம், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், முதலீடுகளுக்கு உகந்த, பரஸ்பரம் நன்மை அளிக்கும் பொருளாதார நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் நிலப் பரப்பு, சந்தை அளவு, அதிகரித்து வரும் தேவை, இளம் திறமையாளர்கள், இளையோரின் சக்தி ஆகியவற்றின் காரணமாக, இந்தியா நம்பகமான நட்பு நாடாகவும், முதலீட்டிற்கு உகந்த இடமாகவும் உள்ளது என்று திரு. கோயல் கூறினார். வணிகங்கள், தொழில்துறை, விவசாயிகள், மீனவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும் திரு. கோயல் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270334®=3&lang=1
(Release ID: 2270334)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270433)
வருகையாளர் எண்ணிக்கை : 74