பிரதமர் அலுவலகம்
கர்மயோகி சாதனா வார’ விழாவின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
02 APR 2026 11:38AM by PIB Chennai
முதன்மைச் செயலாளர் திரு. பி. கே. மிஸ்ரா அவர்களே, கர்மயோகி பாரத் அமைப்பின் தலைவர் திரு. எஸ். ராமதுரை அவர்களே, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திருமதி. எஸ். ராதா சவுகான் அவர்களே, மற்ற புகழ்பெற்ற விருந்தினர்களே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!
'கர்மயோகி சாதனா வார' விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக வேகமாக மாறிவரும் அமைப்புகள், துரிதமாக உருமாறி வரும் உலகம் மற்றும் அதே வேகத்தில் முன்னேறி வரும் இந்தியா ஆகியவற்றைக் கொண்ட இந்த 21-ஆம் நூற்றாண்டில், காலத்திற்கு ஏற்ப பொதுச் சேவையைத் தொடர்ந்து புதுப்பிப்பது அவசியமாகும். இந்த முயற்சியில் கர்மயோகி சாதனா வாரம் ஒரு முக்கியமான படியாகும். இன்று நாம் பின்பற்றி வரும் ஆளுகை கொள்கையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அதன் முக்கிய மந்திரம் ‘சிட்டிசன் தேவோ பவ’ (குடிமக்களே தெய்வம்) என்பதாகும். இந்த உணர்வோடு, பொதுச் சேவையை அதிக திறன் கொண்டதாகவும், குடிமக்கள் மீது அதிக அக்கறை கொண்டதாகவும் மாற்றுவதில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது. ஆளுகையை குடிமக்களை மையமாகக் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அதற்கு ஒரு புதிய அடையாளம் வழங்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
வெற்றியின் ஒரு முக்கியக் கொள்கை என்னவென்றால், மற்றவர்களின் கோட்டைச் சிறிதாக்குவது அல்ல, மாறாக உங்கள் கோட்டை நீளமாக்குவதுதான். சுதந்திரம் அடைந்தது முதல், நம் நாட்டில் பல நிறுவனங்கள் வெவ்வேறு நோக்கங்களுடன் பணியாற்றி உள்ளன. ஆனால், ஒவ்வொரு அரசு ஊழியரின், ஒவ்வொரு கர்மயோகியின் திறனை மேம்படுத்தக்கூடிய 'திறன் மேம்பாட்டிற்காக' அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. இந்த தொலைநோக்குப் பார்வைதான் திறன் மேம்பாட்டு ஆணையம் உருவாகக் காரணமாக அமைந்தது. அதன் நிறுவன தினமான இன்று, இந்த புதிய தொடக்கமும், 'ஐகாட் மிஷன் கர்மயோகி'யின் வெற்றிகரமான பங்களிப்பும் நமது முயற்சிகளுக்குப் பன்மடங்கு ஆற்றலை வழங்குகின்றன. இந்த முன்முயற்சிகளின் மூலம் நவீனமான, திறன்மிக்க, அர்ப்பணிப்புள்ள மற்றும் உணர்வுப்பூர்வமான கர்மயோகிகளின் குழுவை உருவாக்குவதில் நாம் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
சில வாரங்களுக்கு முன்பு, 'சேவா தீர்த்தம்' தொடங்கி வைக்கப்பட்ட போது, வளர்ந்த இந்தியா எனும் உறுதிப்பாடு குறித்து நான் உங்களிடம் விரிவாகப் பேசினேன். இந்த இலக்கை அடைய நமக்கு வேகமான பொருளாதார வளர்ச்சி, நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மற்றும் ஒரு பெரிய அளவிலான திறன்மிக்க பணியாளர்கள் தேவை. இந்த இலக்குகளை அடைவதில் நமது பொது நிறுவனங்கள் மற்றும் பொதுச் ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைய இந்தியா எவ்வளவு லட்சியம் மிக்கதாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நேரில் பார்த்துக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி கனவுகளும் இலக்குகளும் உள்ளன, அவற்றை நிறைவேற்றுவதில் அதிகபட்ச ஆதரவை வழங்குவது நமது பொறுப்பாகும். குடிமக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதும்' , வாழ்க்கைத் தரமும் நாளுக்கு நாள் மேம்படுவதை நமது ஆளுகை உறுதி செய்ய வேண்டும். அதுவே நமது அளவுகோல். இதற்காக, நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் கர்மயோகியின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
நிர்வாகச் சேவைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றி நாம் பேசும்போது, அது பொதுச் ஊழியர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் குறிக்கிறது. பழைய அமைப்பில், ஒரு 'அதிகாரி'யாக இருப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இன்று, நாடு கடமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது - முக்கியத்துவம் என்பது பதவியில் இல்லை, வேலையில் இருக்கிறது. நமது கடமைகளின் மூலமாகவே அரசியலமைப்பு நமக்கு உரிமைகளை வழங்குகிறது. ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் கடமை எதைக் கோருகிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், உங்கள் முடிவுகளின் தாக்கம் தானாகவே பலமடங்கு பெருகும். நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்: நமது தற்போதைய முயற்சிகளை எதிர்காலத்தின் பின்னணியில் நாம் பார்க்க வேண்டும். 2047, வளர்ச்சியடைந்த இந்தியா - அதுதான் நமது திரை , அதுதான் நமது இலக்கு. இன்று நாம் செய்யும் வேலை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒரு முடிவின் மூலம் எத்தனை குடிமக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்? தனிமனித மாற்றம் எவ்வாறு நிறுவன மாற்றமாக மாறும்? இந்தக் கேள்விகள் ஒவ்வொரு முயற்சியின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும். எனது அனுபவத்திலிருந்து நான் சொல்வேன், இதற்கு அபரிமிதமான ஆற்றல் தேவை, அத்தகைய ஆற்றல் சேவை மனப்பான்மையால் மட்டுமே வர முடியும்.
நண்பர்களே,
கற்றல் பற்றி நாம் பேசும்போது, இன்றைய சூழலில் தொழில்நுட்பம் என்பது மிகவும் முக்கியமானதாகிறது. கடந்த 11 ஆண்டுகளில், ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் தொழில்நுட்பம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள். ஆளுகை மற்றும் விநியோகம் முதல் பொருளாதாரம் வரை, தொழில்நுட்பப் புரட்சியின் ஆற்றலை நாம் நேரில் கண்டிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவின் வருகையுடன், இந்த மாற்றம் இன்னும் வேகமாக துரிதப்படுத்தப்படும். எனவே, தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், அதைச் சரியாகப் பயன்படுத்துவதும் பொதுச் சேவையின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் யார் சரியாகப் புரிந்துகொள்கிறார்களோ, அவர்களே இனி சிறந்த நிர்வாகிகளாகவும் பொதுச் ஊழியர்களாகவும் இருப்பார்கள். இதுவே முடிவெடுப்பதற்கான அடிப்படையாக அமையும். எனவேதான், செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான கற்றலை எளிதாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உங்கள் பங்களிப்பும் ஈடுபாடும் மிகவும் முக்கியமானது. 'கர்மயோகி சாதனா வாரம்' இந்த விஷயத்தில் சமமான கவனத்தை செலுத்தும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நமது கூட்டாட்சி அமைப்பில், தேசத்தின் வெற்றி என்பது மாநிலங்களின் கூட்டு வெற்றியைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, மாநிலங்கள் முன்னேறியவை, பின்தங்கியவை அல்லது நலிவடைந்தவை என வகைப்படுத்தப்பட்டு வந்தன. இன்று, நாம் அத்தகைய வரையறைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருகிறோம். மாநிலங்களுக்கு இடையிலான ஒவ்வொரு இடைவெளியையும் நாம் குறைக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் சமமான தீவிரத்துடன் செயல்படும்போது மட்டுமே இது சாத்தியமாகும். நாம் தனித்தனித் பிரிவுகளாகச் செயல்படுவதைத் தவிர்த்து, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பரப் புரிதலுடன் முன்னேற வேண்டும். இதற்காக, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை நமக்குத் தேவை. அரசாங்கமும் அதிகார வர்க்கமும் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், ஒவ்வொரு திட்டமும் வெற்றியடையும். கர்மயோகி சாதனா வாரம் என்பது துல்லியமாக இதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
நண்பர்களே,
சாதாரண குடிமகனைப் பொறுத்தவரை, உள்ளூர் அலுவலகமே அரசாங்கத்தின் முகம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பணி நடைமுறை, உங்கள் நடத்தை - இவைதான் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளின் மீது குடிமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தீர்மானிக்கின்றன. எனவே, நாம் எந்த மட்டத்தில் எதைச் செய்தாலும், அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும். மீண்டும் ஒருமுறை, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் முழு குழுவிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்மயோகி சாதனா வாரம், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248156®=3&lang=2
***
SS/VK/SE
(रिलीज़ आईडी: 2268079)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Manipuri
,
Assamese
,
Kannada
,
Malayalam
,
Urdu
,
Bengali
,
English
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia