பிரதமர் அலுவலகம்
சுமார் ₹11,200 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
நொய்டா சர்வதேச விமான நிலைய முதற்கட்டத்தின் திறப்பு விழா, உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து எதிர்காலத்திலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்: பிரதமர்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் தற்போது உருவெடுத்துள்ளது: பிரதமர்
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக, எங்களது அரசு நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளைச் செய்து வருகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
28 MAR 2026 2:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய பிரதமர், 'வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசம் - வளர்ச்சியடைந்த பாரத இயக்கம்' என்பதில் இப்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று கூறினார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், தற்போது அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய விமான நிலையத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பிரதமர், நொய்டா விமான நிலையம் ஆக்ரா, மதுரா, அலிகர், காஜியாபாத், மீரட், எட்டாவா, புலந்தஷர், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பிராந்தியத்திற்குப் பயனளிக்கும் என்று கூறினார். இந்த விமான நிலையம், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகள், சிறு, நடுத்தர நிறுவனங்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு ஏராளமான புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். விமானங்கள் இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்குப் பறக்கும் எனவும், இந்த விமான நிலையம், வளர்ச்சி பெற்ற உத்தரப் பிரதேசத்திற்கான ஓர் அடையாளமாகவும் திகழும் என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, மாநில மக்களுக்கும், குறிப்பாக மேற்கு உத்தரப் பிரதேச மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தற்போதைய உலகளாவிய நிலைமை குறித்துப் பேசிய பிரதமர், மேற்கு ஆசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடந்து வருவதால், பல நாடுகளில் உணவு, பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது உலகம் முழுவதும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மோதலால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இந்தியா மிக அதிக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியின் சுமை சாதாரண குடும்பங்கள், விவசாயிகள் மீது விழாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி தெளிவுபடுத்தினார்.
உலகளாவிய நெருக்கடி காலங்களிலும் இந்தியாவின் தொடர்ச்சியான விரைவான வளர்ச்சி வேகம் தொடர்வதாக அவர் கூறினார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மட்டும், சமீபத்திய வாரங்களில் திறந்து வைக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட நான்காவது பெரிய திட்டம் இது என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு தற்போதைய மத்திய மாநில அரசுகளே காரணம் என பிரதமர் கூறினார். செமிகண்டக்டர் தொழிற்சாலை இந்தியாவைத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையச் செய்யும் என்றும், மீரட் மெட்ரோ, நமோ பாரத் ரயில் ஆகியவை வேகமான, நவீன போக்குவரத்து இணைப்பை வழங்குகின்றன என்றும், ஜெவார் விமான நிலையம் வட இந்தியா முழுவதையும் உலகத்துடன் இணைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசின் கீழ், அதே நொய்டா, உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த இயந்திரமாக மாறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
விமான நிலையத் திட்டத்தின் வரலாற்றை விவரித்த பிரதமர், ஜெவார் விமான நிலையத்திற்கு 2003-ம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒப்புதல் அளித்ததை சுட்டிக் காட்டினார். தற்போது உள்ள மாநில அரசு இங்கு அமைந்தவுடனேயே, இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று, தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
சரக்குப் போக்குவரத்து மையமாக இப்பகுதி மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இரண்டு முக்கிய சரக்கு வழித்தடங்களின் மையமாக இப்பகுதி மாறி வருவதாகவும், இவை வட இந்தியாவின் இணைப்பை வங்காளம், குஜராத் ஆகியவற்றின் கடற்பகுதிகளுடன் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு வழித்தடங்களும் சங்கமிக்கும் முக்கிய இடமாக தாத்ரி விளங்குகிறது என்றும், இங்கு விவசாயிகள் பயிரிடும் பயிர்கள், தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் அனைத்தும் இப்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் உலகின் பல்வேறு மூலைகளுக்கும் விரைவாகச் சென்றடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வகையான பல்முனை இணைப்பு, உத்தரப் பிரதேசத்தை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக மாற்றுகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
இத்திட்டத்தை நனவாக்குவதற்காகத் தங்கள் நிலங்களைத் தியாகம் செய்த விவசாயிகளுக்குப் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இப்பகுதியின் பொருளாதாரத்தில் விவசாயமும் வேளாண்மையும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார். நவீன போக்குவரத்து இணைப்பு வசதிகளின் விரிவாக்கம், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உணவு பதப்படுத்தும் வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இங்கிருந்து வரும் விவசாய விளைபொருட்கள் இனி உலகச் சந்தைகளை மிகவும் எளிதில் சென்றடையும் என்றும் கூறினார்.
கச்சா எண்ணெய் மீதான இந்தியாவின் சார்பைக் குறைப்பதில் கரும்பு விவசாயிகளின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். எத்தனால் உற்பத்தியை அதிகரித்து, அதை பெட்ரோலுடன் கலக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஆண்டுதோறும் கூடுதலாக நான்கரை கோடி பேரல்கள், அதாவது சுமார் 700 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியிருந்திருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். நெருக்கடியான இந்த நேரத்தில் நமது விவசாயிகளின் கடின உழைப்பு நாட்டிற்கு இந்த மாபெரும் நிவாரணத்தை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
எத்தனால் நாட்டிற்கு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் விளக்கினார். கரும்பு விவசாயிகள் தங்களுக்குரிய நிலுவைத் தொகைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்த முந்தைய காலங்களை அவர் நினைவு கூர்ந்தார். இப்போது, தற்போதைய அரசின் முயற்சிகளால், கரும்பு விவசாயிகளின் நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
விமான நிலையங்கள் வெறும் வசதிகள் மட்டுமல்ல எனவும் அவை முன்னேற்றத்திற்கான ஊக்க சக்திகிகள் என்றும் கூறிய பிரதமர், இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைச் சுட்டிக்காட்டினார். இப்போது நாட்டில் 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்த பிரதமர், விமான இணைப்பு இப்போது பெருநகரங்களை மட்டுமல்லாமல் சிறிய நகரங்களையும் சென்றடைகிறது என்று குறிப்பிட்டார். தற்போதைய அரசு விமானப் பயணத்தை சாதாரண இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்துள்ளது என்று கூறிய அவர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை பதினேழாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
உடான் திட்டத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், விமான நிலையங்கள் கட்டப்படும் அதே வேளையில், விமானக் கட்டணங்கள் சாதாரண குடும்பங்களின் திறனுக்குள் இருப்பதை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் கூறினார். உடான் திட்டத்தின் கீழ் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மலிவு விலையில் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். உடான் திட்டத்தின் கீழ், வரும் ஆண்டுகளில் சிறிய நகரங்களில் 100 புதிய விமான நிலையங்களும் 200 புதிய ஹெலிபேடுகளும் கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய விமான நிலையங்கள் கட்டப்படுவதால் புதிய விமானங்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதாகவும், பல்வேறு விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களுக்கு ஆர்டர்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது விமானிகள், விமானப் பணிப்பெண்கள், பராமரிப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட பலருக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அரசு, விமானப் போக்குவரத்துத் துறையில் பயிற்சி வசதிகளையும் விரிவுபடுத்தி வருகிறது என்று கூறினார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நவீன உள்கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள விரிவான முதலீடுகள் குறித்துப் பேசிய பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ஆறு மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகளுக்காக ₹17 லட்சம் கோடி செலவிடப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு 20,000 கிலோமீட்டராக இருந்த ரயில்வே மின்மயமாக்கல், அதன் பின்னர் 40,000 கிலோமீட்டருக்கும் மேலாக விரிவடைந்துள்ளதாகவும், தற்போது அகல ரயில் பாதையில் கிட்டத்தட்ட 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முதன்முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கும் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களும் ரயில் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் துறைமுகங்களின் திறன் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு நீர்வழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்தியர்களின் நலனையும், இந்தியாவின் நலனையும் கருத்தில் கொண்டு அரசின் கொள்கையும் வியூகமும் எப்போதும் அமையும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246413®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2267920)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada