பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சர், ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இணைந்து இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2026 3:13PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்ல்ஸ், 2026 ஜூன் 01 அன்று புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு கூட்டாக தலைமை தாங்கினர். இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்கவும், பிராந்திய அமைதி, மற்றும் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கவும் இரு நாட்டுப் பிரதமர்களின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை அமைச்சர்கள் முன்னெடுத்தனர்.
கடல்சார் பாதுகாப்பிற்கான கூட்டு வரைபடத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டது. சுதந்திரமான, திறந்த, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பராமரிக்க பிராந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்டத்துக்கு உட்பட்டு கடற்பரப்பில் சுதந்திரமான போக்குவரத்து, தடையற்ற வர்த்தகத்திற்கு தங்களது வலுவான ஆதரவை அமைச்சர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புத் தொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் அடுத்த கட்டமாக, பாதுகாப்பு தளவாடங்கள், சேவைகளை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. சென்சார் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் எதிர்கால பாதுகாப்பு அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர்.
பல்வேறு கூட்டு ராணுவப் பயிற்சிகளில் இரு நாட்டுப் படைகளின் வளர்ந்து வரும் ஈடுபாட்டை அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், குவாட் கூட்டாண்மை முன்முயற்சிகளின் மூலம் தகவல் பகிர்வு, ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் தங்களது வலுவான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267486®=3&lang=1
***
(Release ID: 2267486)
SS/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267726)
வருகையாளர் எண்ணிக்கை : 6