சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் தொடர்பான செயலியின் முன்னோட்டப் பதிப்பு தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 2:08PM by PIB Chennai
2026-ம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, புகையிலையற்ற கல்வி நிறுவனங்கள் (டிஓஎஃப்இஐ) என்பது தொடர்பான செயலியின் முன்னோட்டப் பதிப்பைத் தொடங்கி வைத்தார். புகையிலை, நிக்கோட்டின் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல சீர்கேட்டில் இருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுதில்லி கடமை மாளிகையில் இன்று (29.05.2026) நடைபெற்ற நிகழ்வில் இந்த செயலி வெளியிடப்பட்டது.
டிஓஎஃப்இஐ செயலி என்பது, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் புகையிலை இல்லாத நெறிமுறைகளின் செயலாக்கம், கண்காணிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் முன்முயற்சி ஆகும்.
இந்தச் செயலி பின்வருவனவற்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:
* கல்வி நிறுவனங்களின் சுய மதிப்பீடு, அறிக்கை வெளியிடல்
* டிஓஎஃப்இஐ வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைக் கண்காணித்தல்
* புகையிலைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துதல்;
* கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை
* மாணவர்கள், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள்
* புகையிலை இல்லாத நடைமுறைகள் அமலாக்கத்தை வலுப்படுத்துதல்
இந்த டிஜிட்டல் தளம், தரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, அறிக்கையிடல், இணக்க மதிப்பீட்டு வழிமுறைகள் ஆகியவை மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், கல்வி நிறுவனங்கள், திட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பொறுப்புணர்வை மேம்படுத்தி, குழந்தைகள், இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியமான, புகையிலையற்ற சூழல்களை இது ஊக்குவிக்கும்.
புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் (டிஓஎஃப்இஐ) செயலியின் முன்னோட்டப் பதிப்பின் வெளியீடு குறித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
புகையிலைப் பயன்பாடு, புற்றுநோய்கள், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட சுவாச நோய்கள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் புகையிலைக் கட்டுப்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வல்லுநர்கள், அமலாக்க அதிகாரிகள், சமூக அமைப்புகள், சமூகப் பணியாளர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக அமைப்பினர், புகையிலைக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றும் பிற தரப்பினர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266568®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266761)
வருகையாளர் எண்ணிக்கை : 10