விவசாயத்துறை அமைச்சகம்
நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக அளவு உணவு தானிய உற்பத்தி - விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 6:01PM by PIB Chennai
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், 2025-26-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை இன்று (27.05.2026) புதுதில்லியில் வெளியிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான, அரசு விவசாயிகளின் செழிப்பு, வேளாண் துறையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும், அதன் நேர்மறையான தாக்கம் தற்போது சாதனை அளவிலான வேளாண் உற்பத்தியின் வடிவில் தெரிகிறது என்றும் கூறினார்.
மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 376.563 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உற்பத்தியான 357.732 மில்லியன் டன்களை விட கிட்டத்தட்ட 18.8 மில்லியன் டன்கள் அதாவது 5.3% அதிகமாகும். இது நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச உணவு தானிய உற்பத்தியாகும். இந்த வரலாற்றுச் சாதனைக்காக திரு சிவராஜ் சங் சௌகான் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வேளாண்மை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள், இந்தியாவின் விவசாய முன்னேற்றம் குறித்த வலுவான ஊக்கமளிக்கும் போக்குகளை வெளிப்படுத்துகின்றன. பயிர் வாரியான சுருக்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட மத்திய வேளாண் அமைச்சர், நெல் உற்பத்தி சாதனை அளவாக 154.024 மில்லியன் டன்களாகவும், கோதுமை 120.657 மில்லியன் டன்களாகவும், மக்காச்சோளம் சாதனை அளவாக 55.093 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். சிறுதானிய உற்பத்தி 17.584 மில்லியன் டன்களாகவும், துவரை 3.592 மில்லியன் டன்களாகவும், கொண்டைக்கடலை 12.514 மில்லியன் டன்களாகவும், பயறு 1.762 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், மொத்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 43.059 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கடலை உற்பத்தி சாதனை அளவாக 13.074 மில்லியன் டன்களையும், சோயாபீன்ஸ் உற்பத்தி 12.596 மில்லியன் டன்களையும் எட்டியுள்ளது. கரும்பு உற்பத்தி சாதனை அளவாக 500.063 மில்லியன் டன்களாகவும், பருத்தி உற்பத்தி 29.024 மில்லியன் பேல்களாகவும், சணல் உற்பத்தி 9.176 மில்லியன் பேல்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 150.184 மில்லியன் டன்களாக இருந்த நெல் உற்பத்தி, இந்த ஆண்டு 154.024 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளதாக திரு சௌகான் தெரிவித்தார்.
மண், நீர் வள மேலாண்மை, பருவநிலைக்கேற்ற வேளாண்மை, நிலையான வேளாண் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள ஒருங்கிணைந்த புத்தாக்கங்கள் போன்றவை, முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன என்று வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265965®=3&lang=1
***
TV/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266095)
வருகையாளர் எண்ணிக்கை : 23