ஆயுஷ்
இந்த ஆண்டு சர்வதேச யோகா தின பிரதான நிகழ்வு கொல்கத்தாவில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 11:25AM by PIB Chennai
இந்த ஆண்டு (2026) சர்வதேச யோகா தினத்தின் பிரதான கொண்டாட்ட நிகழ்வு,மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என, ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று அறிவித்துள்ளார். இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதாகும் என்றும், இது உடல் ஆரோக்கியம், மன நலம், ஆரோக்கியமான முதுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை எடுத்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்துக்கான 25 நாள் இறங்குமுக முன்னோட்ட (கவுண்ட்டவுன்) நிகழ்வைக் குறிக்கும் வகையில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கஜுராஹோவில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்வின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான யோகா ஆர்வலர்கள் பங்கேற்று யோகா பயிற்சிகளைச் செய்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதாப்ராவ் ஜாதவ், இந்தியாவின் பாரம்பரியப் பெருமையிலும் ஆன்மீக உணர்விலும் ஊறியிருக்கும் கொல்கத்தாவில், 2026 சர்வதேச யோகா தின 2026 பிரதான கொண்டாட்டம் நடைபெறும் என்று கூறினார். யோகா இந்தியாவின் பழங்கால ஞானத்தைப் பிரதிபலிப்பதாகவும், நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு, சமச்சீரான வாழ்க்கை ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசினார். யோகாவும் கஜுராஹோவும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265716®=3&lang=1
(Release ID: 2265716)
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2265997)
வருகையாளர் எண்ணிக்கை : 7