பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

செஷல்ஸ் அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 09 FEB 2026 2:15PM by PIB Chennai

செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி அவர்களே,

இரு நாடுகளின் மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

அதிபர் ஹெர்மினி மற்றும் அவரது தூதுக்குழுவை இந்தியாவிற்கு வரவேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

செஷல்ஸ் அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் அதிபராக இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தருகிறார். செஷல்ஸ் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நமது தூதரக உறவுகளின் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் ஒரு நல்ல ஆண்டில் அவரது வருகை நடைபெறுகிறது. இந்த மைல்கற்கள் நம்மை ஒன்றாக புதிய உயரங்களை அடைய தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

இந்தியாவும் செஷல்ஸும் தூதரக ஈடுபாட்டிற்கு அப்பாற்பட்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியப் பெருங்கடலின் அலைகள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களை இணைத்து வருகின்றன. அதன் கரையோரங்களில், நமது நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வளர்ந்துள்ளது. கலாச்சாரங்கள் ஒன்றிணைந்துள்ளன. நம்பிக்கையின் மரபுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.

இந்தியாவும் செஷல்ஸும் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், வரலாறு, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட பார்வையாலும் இணைக்கப்பட்டுள்ளன.

எங்கள் பிணைப்பு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் வரை பரவியுள்ளது. கடல்சார் அண்டை நாடாகவும், நம்பகமான நட்பு நாடாகவும், செஷல்ஸ் இந்தியாவின் மஹாசாகர் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எங்கள் ஒத்துழைப்பு கடல், நிலம், வான்வெளிப் பகுதிகளை உள்ளடக்கியது.

இன்றைய விவாதங்களில், இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பாதையை நாங்கள் வகுத்துள்ளோம். எங்கள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து ஆராய்வதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதோடு, நிதித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தீர்வுகளிலும் எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்.

இந்தியா-செஷல்ஸ் உறவுகளின் வளர்ச்சி ஒரு வலுவான தூணாக இருந்து வருகிறது. எங்கள் அனைத்து முயற்சிகளும் செஷல்ஸின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளால் வழிநடத்தப்பட்டுள்ளன.

இந்த திசையில் கட்டமைத்து, இன்று 175 மில்லியன் டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறோம். இந்த தொகுப்பு வீட்டுவசதி, மின்சார வாகனப் போக்குவரத்து, தொழில் பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் உறுதியான திட்டங்களை உருவாக்கும். இந்த முயற்சிகள் செஷல்ஸ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறன் வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தியாவின் ஐடிஇசி திட்டம் செஷல்ஸில் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளது. செஷல்ஸைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தொழில்நுட்பத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம்  எதிர்கால திசையை வழங்குகிறோம். டிஜிட்டல் மாற்றம் குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன் கீழ் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தை செஷல்ஸுடன் பகிர்ந்து கொள்வோம்.

சுகாதாரத் துறையில், இந்தியா செஷல்ஸுக்கு நிலையான, நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது. மலிவு விலையில், தரமான மருந்துகள் வழங்குதல், மருத்துவ சுற்றுலா, சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் செஷல்ஸுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

எரிசக்தி, பருவநிலை ஆகிய துறைகளில், நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பால் எங்கள் ஒத்துழைப்பு வழிநடத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீள்தன்மை, பருவநிலைக்கு ஏற்ற தீர்வுகள் ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவோம்.

நண்பர்களே,

கடல்சார் அண்டை நாடுகளாக உள்ள நிலையில், நீலப் பொருளாதாரம் எங்களுக்கு ஒத்துழைப்பின் இயற்கையான பகுதியாகும். கடல் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, தரவுப் பகிர்வு போன்ற துறைகளில் இந்தியாவின் நிபுணத்துவத்தை செஷல்ஸுடன் பகிர்ந்து கொள்வோம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை எங்கள் ஒத்துழைப்பின் முக்கிய தூண்கள். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் முழு உறுப்பினராக செஷல்ஸை வரவேற்கிறோம். இது எங்கள் பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன் இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும்.

ஒன்றாக இணைந்து, இருதரப்பு ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலுக்கான பகிரப்பட்ட எதிர்காலத்தையும் வடிவமைப்போம்.

நண்பர்களே,

இந்தியா-செஷல்ஸ் உறவுகளின் மிகப்பெரிய பலம் நமது மக்களுக்கு இடையேயான உறவுகளில் உள்ளது. செஷல்ஸில் உள்ள இந்திய சமூகம் நாட்டின் சமூக - பொருளாதார வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. அதே நேரத்தில், அவர்களது தலைமுறைகள் எங்கள் நட்பை வலுப்படுத்தியுள்ளனர்.

சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு மூலம் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தோம். இரு நாடுகளின் இளைஞர்களிடையே பரிமாற்றங்களை அதிகரிப்பதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம்.

நண்பர்களே,

இந்த சந்திப்பு, இந்தியா-செஷல்ஸ் ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியா-செஷல்ஸ் கூட்டு தொலைநோக்கு இலக்கை வெளியிடுகிறோம். இந்த தொலைநோக்கு இலக்கு வரும் ஆண்டுகளில் எங்கள் ஒத்துழைப்புக்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும்.

செஷல்ஸ் அதிபர் அவர்களே,

மீண்டும் ஒருமுறை, உங்கள் இந்திய வருகைக்கும், இந்தியா மீதான உங்கள் அசைக்க முடியாத நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

----

(Release ID: 2225348)

AD/PLM/KR

 

 


(रिलीज़ आईडी: 2265325) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam