பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2026 5:42PM by PIB Chennai

மேதகு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களே,

எனது அன்பிற்குரிய நண்பர்களே, சகோதர சகோதரிகளே,

ஸலாமத் பதாங்! (மதிய வணக்கம்!)

வணக்கம்!

சௌக்கியமா?

சத் ஸ்ரீ அகால்!

பாகுன்னாரா? (நலமா?)

கேம்-சோ? (எப்படி இருக்கிறீர்கள்?)

உங்களின் இந்த அன்பான வரவேற்பு, நமது பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

முதலாவதாக, இந்தச் சமூகக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட எனது அன்பிற்குரிய நண்பர், பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-மலேசியா நட்புறவின் அளவு மற்றும் எதிர்காலத் திறன் குறித்துச் சற்று முன் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட கனிவான வார்த்தைகளுக்காகவும் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், பிரதமர் அவர்கள் என்னை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கே வந்திருந்தார்; மேலும் அவர் தனது காரிலேயே என்னை இங்கு அழைத்து வந்தார். அவரது கார் மட்டுமல்ல, தனது இருக்கையையும்  அவர் எனக்கு அளித்தார். இத்தகைய சிறப்பான செயல்கள், இந்தியாவின் மீதும் உங்கள் அனைவர் மீதும் அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கின்றன.

உங்களின் கனிவான வார்த்தைகள், உபசரிப்பு மற்றும் நட்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நண்பர்களே,

சாதனை படைக்கும் வகையிலான ஒரு கலை நிகழ்ச்சியை நாம் இப்போதுதான் பார்த்தோம். 800-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மிகச் சரியான ஒத்திசைவுடன் அதனை நிகழ்த்திக் காட்டினர். இந்தத் திறமையான செயல்பாடு வரும் ஆண்டுகளில் நமது மக்களால் நினைவுகூரப்படும். இதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன். கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களும் நானும், அவர் பிரதமர் ஆவதற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம். சீர்திருத்தங்கள் மீதான அவரது கவனம், அவரது சிறந்த அறிவுத்திறன் மற்றும் 2025-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பிற்கு அவர் வழங்கிய திறமையான தலைமைத்துவம் ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன்.

கடந்த ஆண்டு, ஆசியான் உச்சிமாநாட்டிற்காக என்னால் மலேசியாவிற்கு வர இயலவில்லை. ஆனால், விரைவில் மலேசியா வருவேன் என்று எனது நண்பரிடம் நான் உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியின்படியே, இதோ நான் வந்திருக்கிறேன்.

2026-ம் ஆண்டில் எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தத் திருவிழாக் காலங்களில் உங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சங்கராந்தி, பொங்கல் மற்றும் தைப் பூசம் ஆகியவற்றை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் சிவராத்திரி பண்டிகை வரவுள்ளது. இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்குகிறது, அதனைத் தொடர்ந்து ஹரி ராயா மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும். அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் விரும்புகிறேன்.

நண்பர்களே,

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இந்திய வம்சாவளி சமூகம் மலேசியாவில்தான் உள்ளது. இந்திய மற்றும் மலேசிய இதயங்களை இணைக்கும் விஷயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. சற்று நேரத்திற்கு முன்பு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களும் நானும் பார்த்த கண்காட்சி, இந்தத் தொடர்புகளை அழகாகக் காட்டுகிறது. எங்களை இணைக்கும் ஒரு வாழும் பாலமாக நீங்கள் இருக்கிறீர்கள்.

நீங்கள் 'ரோட்டி செனாய்'  என்பதை 'மலபார் புரோட்டா'வுடன் இணைத்துள்ளீர்கள்.

தேங்காய், மசாலாப் பொருட்கள் மற்றும் நிச்சயமாக 'தே தாரிக்' (Teh Tarik)...

கோலாலம்பூராக இருந்தாலும் சரி, கொச்சியாக இருந்தாலும் சரி, இந்தச் சுவைகள் மிகவும் பரிச்சயமானவை. நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்கிறோம். நமது மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே அதிக அளவில் பொதுவான வார்த்தைகள் இருப்பதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

மலேசியாவில் இந்தியத் திரைப்படங்களும் இசையும் மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டுள்ளேன். பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் மிக நன்றாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. அவரது கடந்த கால இந்தியப் பயணத்தின் போது, அவர்கள் மகிழ்ச்சியான ஆச்சரியமடைந்தனர். அவர் இந்தியாவில் பழைய ஹிந்திப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோக்கள் வைரலாகின! புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களின் தமிழ்ப் பாடல்களையும் அவர் விரும்புகிறார் என்பது மிகவும் அற்புதமானது.

நண்பர்களே,

உங்கள் இதயங்களில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடம் இருப்பதை நான் அறிவேன். 2001-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு எனக்கு இப்போதும் மிகத் தெளிவாக நினைவிருக்கிறது. எனது சொந்த மாநிலமான குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, உங்களில் பலர் உதவி செய்ய முன்வந்தீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கும் மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தியாவை ஒரு சுதந்திர நாடாக்குவதற்காக உங்கள் முன்னோர்கள் ஆயிரக்கணக்கானோர் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவைப் பார்த்ததே இல்லை. ஆனாலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்தியத் தேசிய ராணுவத்தில் முதன்முதலாக இணைந்தவர்களில் அவர்களும் அடங்குவர்.

அவரது நினைவாக, மலேசியாவில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டினோம். மலேசியாவில் உள்ள நேதாஜி சேவை மையம் மற்றும் நேதாஜி நல வாரியம் ஆகியவற்றின் முயற்சிகளையும் இந்தத் தருணத்தில் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

பல நூற்றாண்டுகளாக நீங்கள் பாரம்பரியங்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் விதம் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், எனது மாதந்திர வானொலி உரையான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உங்களைப் பற்றிப் பேசினேன். மலேசியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு இந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து 140 கோடி இந்தியர்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன்.

மகான் திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களின் தாக்கத்தையும் இங்கு உணர முடிகிறது. கடந்த வாரம் பத்து குகையில் நடைபெற்ற தைப் பூசம் மிகவும் தெய்வீகமாக இருந்தது; அது பழனியில் நடக்கும் கொண்டாட்டங்களைப் போலவே காட்சியளித்தது. அதேபோல், பாகன் டத்தோவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் மிகச் சிறப்பாக அமைகின்றன.

இங்கு கர்பா நடனம் மிகவும் பிரபலம் என்று என்னிடம் கூறப்பட்டது. இங்கு வாழும் நமது சீக்கிய சகோதரர்களுடனான கலாச்சாரத் தொடர்புகளையும் நாம் ஆழமாக மதிக்கிறோம். 'நாம ஜபோ, கிரத் கரோ, வந்த் சாக்கோ' (நாமத்தை உச்சரிப்போம், உழைப்போம், பகிர்ந்து உண்போம்) ஆகிய போதனைகளைப் பரப்புவதன் மூலம் ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி அவர்களின் போதனைகளை இன்றும் நீங்கள் தாங்கி நிற்கிறீர்கள்.

நண்பர்களே,

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் இங்கு உள்ளனர். கலாச்சார ஒற்றுமை எனும் இழை நம்மை வலிமையாகப் பிணைத்துள்ளது. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதனைப் புரிந்து கொண்டிருப்பதே நமது பலமாகும்.

நண்பர்களே,

தமிழ் மொழி உலகிற்கு இந்தியா அளித்த கொடையாகும். தமிழ் இலக்கியம் என்றும் அழியாதது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. அதேபோல், தமிழ் மக்கள் தங்களின் திறமையால் மனிதகுலத்திற்குச் சேவையாற்றி வருகின்றனர். நான் பெருமையுடன் கூறுகிறேன், இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று நம்முடன் இருக்கும் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்கள், ஒன்பது முறை நமது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், நமது தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் என அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல், மலேசியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகளில் சமூகத்திற்குச் சேவையாற்றி வருகின்றனர். உண்மையில், தமிழ் சமூகத்தினர் பல நூற்றாண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இந்த வரலாற்றால் ஈர்க்கப்பட்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்போது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த ஒரு திருவள்ளுவர் மையத்தை அமைப்போம்.

நண்பர்களே,

மலேசியாவுடனான நமது உறவு ஒவ்வொரு ஆண்டும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. 2024-ம் ஆண்டில், பிரதமர் அன்வர் இப்ராஹிம் புதுதில்லிக்கு வருகை தந்தபோது, நமது உறவை 'விரிவான உத்திசார் ஒத்துழைப்பு' (Comprehensive Strategic Partnership) நிலைக்கு உயர்த்தினோம்.

இன்று நாம் முன்னேற்றம் மற்றும் செழிப்பை நோக்கிப் பங்காளிகளாகக் கைகோர்த்து நடக்கிறோம். ஒருவருக்கொருவர் வெற்றியை நமது சொந்த வெற்றியாகக் கொண்டாடுகிறோம். சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் தெரிவித்த நல்வாழ்த்துகள் என்னை நெகிழச் செய்தன. எனது அன்பிற்குரிய நண்பரே, நான் உங்களுடன் உடன்படுகிறேன்; இந்தியாவின் வெற்றி என்பது மலேசியாவின் வெற்றி, இது ஆசியாவின் வெற்றி.

அதனால்தான், நமது உறவின் வழிகாட்டும் சொல் 'IMPACT' என்று நான் கூறுகிறேன். 'IMPACT' என்றால் கூட்டு மாற்றத்தை முன்னெடுப்பதற்கான இந்தியா-மலேசியா கூட்டாண்மை (India Malaysia Partnership for Advancing Collective Transformation) என்று பொருள்.

நமது உறவுகளின் வேகத்தில் 'தாக்கம்' (IMPACT)

நமது இலட்சியங்களின் அளவில் 'தாக்கம்' (IMPACT)

நமது மக்களின் நலனுக்காக 'தாக்கம்' (IMPACT)

ஒன்றிணைந்து, நாம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்க முடியும்!

நண்பர்களே,

இந்திய நிறுவனங்கள் மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற எப்போதும் ஆர்வமாக உள்ளன. மலேசியாவின் முதலாவது மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய இன்சுலின் உற்பத்தி வசதியை உருவாக்குவதில் நாங்கள் பங்காற்றியது எங்களுக்குக் கிடைத்த பெருமையாகும்.

100-க்கும் மேற்பட்ட இந்தியத் தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்கள் மலேசியாவில் இயங்கி வருகின்றன, இவை ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில், நமது டிஜிட்டல் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் யுபிஐ (UPI) விரைவில் மலேசியாவிற்கு வரும் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இந்தியப் பெருங்கடலின் அதே நீல நிற நீரை நாம் பகிர்ந்து கொள்கிறோம். கடலுக்கு அப்பால், நாம் ஒருவரை ஒருவர் சந்திப்பதில் விருப்பம் கொண்டுள்ளோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வருமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஒரு தசாப்தத்தில் நமது விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. நெடுஞ்சாலைகள் சாதனை வேகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. 'வியத்தகு இந்தியா'வை  நீங்கள் அதிகம் பேர் நேரில் வந்து அனுபவிக்குமாறு நான் ஊக்குவிக்கிறேன்.

நீங்கள் வரும்போது உங்கள் மலாய் நண்பர்களையும் உங்களுடன் அழைத்து வர வேண்டும். தனியாக வராதீர்கள். ஏனென்றால், மக்களிடையேயான தொடர்பே நமது நட்புறவின் அடித்தளமாகும்.

நண்பர்களே,

நாம் 2015-ல் சந்தித்தபோது, இந்தியாவின் திறன் குறித்து உங்களிடம் பேசினேன். இப்போது, இந்தியாவின் செயல்பாடு  குறித்து உங்களிடம் பேசுகிறேன். ஒரு தசாப்தத்தில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது.

அப்போது, நாம் உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தோம். இப்போது, முதல் 3 இடங்களின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாகவும் திகழ்கிறோம்.

அப்போது, 'மேக் இன் இந்தியா' என்பது நடப்பட்ட ஒரு சிறு செடியாக இருந்தது. இப்போது, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தியாளராக உள்ளது. 2014-ம் ஆண்டு முதல் நமது பாதுகாப்புத் துறை ஏற்றுமதி சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில்  மையமாகவும் உருவெடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பையும், உலகின் மிகப்பெரிய நிதியியல் தொழில்நுட்ப  சூழல் அமைப்பையும் நாம் உருவாக்கியுள்ளோம். நமது யுபிஐ  தளத்தின் உதவியால், உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் நடக்கிறது.

வேகமாக வளரும் அதே வேளையில், நமது வளர்ச்சி தூய்மையானதாகவும் பசுமையானதாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளோம். உதாரணமாக, ஒரு தசாப்தத்தில் நமது சூரிய ஆற்றல் சுமார் 40 மடங்கு வளர்ந்துள்ளது.

நண்பர்களே,

முன்பு இந்தியா ஒரு பெரிய சந்தையாக மட்டுமே பார்க்கப்பட்டது. இப்போது நாம் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான ஒரு மையமாக இருக்கிறோம். வளர்ச்சிக்கான ஒரு நம்பகமான பங்காளியாக இந்தியா பார்க்கப்படுகிறது. பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. நம்பிக்கை என்பது இந்தியாவின் வலிமையான நாணயமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

இந்தியா உங்களை எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்கும். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தோம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியக் குடிமக்களுக்கான வெளிநாடுவாழ் இந்தியர் அடையாள அட்டை தகுதியை 6-வது தலைமுறை வரை நாங்கள் நீட்டித்துள்ளோம்.

----

(Release ID:2224939):

AD/VK/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2265314) வருகையாளர் எண்ணிக்கை : 14