குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பி.என். பணிக்கர் குறித்த புத்தகத்தை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர், வாசிப்புப் பழக்கத்தைப் புத்துயிர் பெறச் செய்ய அழைப்பு விடுத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 6:19PM by PIB Chennai
பி. பி. சத்யன் எழுதிய ‘இந்தியாவின் நூலக மனிதர்: பி.என். பணிக்கரின் கதை’ என்ற புத்தகத்தை இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், திரு பி. என். பணிக்கருக்குப் புகழஞ்சலி செலுத்தியதோடு, புத்தகங்கள் மற்றும் மௌனமான அறிவு சக்தியின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் தலைவிதியை மாற்றியமைத்த ஒரு தொலைநோக்காளர் என்று அவரை வர்ணித்தார். நூலாசிரியர் திரு பி. பி. சத்யனுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், இந்த வெளியீடு திரு பணிக்கரின் அசாதாரணமான தொலைநோக்குப் பார்வைக்கும், நீடித்த பாரம்பரியத்திற்கும் ஒரு சான்றாகத் திகழ்கிறது என்று கூறினார்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த திரு பணிக்கர், சாதி, வர்க்கம், வறுமை, புவியியல் பேதமின்றி ஒவ்வொரு தனிநபரும் அறிவைப் பெற வேண்டும் என்ற அசாதாரணமான கனவைக் கொண்டிருந்தார் என்று அவர் குறிப்பிட்டார். கேரளாவின் குட்டநாட்டில் திரு பணிக்கரின் எளிமையான தொடக்கங்களை நினைவு கூர்ந்த அவர், எழுத்தறிவின்மை என்பது வெறும் வாசிக்க இயலாமை மட்டுமல்ல, அது கண்ணியம், வாய்ப்பு மற்றும் மனித முன்னேற்றத்திற்கான ஒரு தடை என்பதை திரு பணிக்கர் தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தார் என்று குறிப்பிட்டார்.
நூலகங்களின் பரிணாம வளர்ச்சி குறித்துப் பேசிய திரு சி. பி. ராதாகிருஷ்ணன் உலகெங்கிலும் உள்ள அறிஞர்களை ஈர்த்த நாளந்தா, தக்ஷசீலா போன்ற கல்வி மையங்களைக் கொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். மின் புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணக் காப்பகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் நூலகங்கள் டிஜிட்டல் யுகத்தில் நுழைந்துள்ள நிலையில், இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து வருவது ஒரு தீவிரமான கவலையாக நீடிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வாசிப்பதை நிறுத்தும் ஒரு சமூகம், படிப்படியாகத் தனது திறனாய்வுச் சிந்தனை, படைப்பாற்றலுடன் கற்பனை செய்தல் மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறனை இழக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இளைய தலைமுறையினரிடையே வாசிப்பு மற்றும் சிந்தனைப் பழக்கத்தை மீட்டெடுப்பதில், ‘இந்தியாவின் நூலக மனிதர்’ போன்ற நூல்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை ஆற்ற முடியும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி; மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவர் பி. ஜே. குரியன்; பி.என். பணிக்கர் அறக்கட்டளையின் துணைத் தலைவர் திரு என். பாலகோபால் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264260®=3&lang=1
***
TV/SMB/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264388)
வருகையாளர் எண்ணிக்கை : 10