சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச உயிரியல் பன்மை தினம் 2026-ல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 1:15PM by PIB Chennai
போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் தேசிய அளவிலான சர்வதேச உயிரியல் பன்மை தினம் 2026 சிறுத்தை பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதற்கு மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவுடன் இணைந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். ‘உலகளாவிய தாக்கத்திற்காக உள்ளூரில் செயல்படுதல்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்நிகழ்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு, சூழலியல் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சர்வதேச உயிரியல் பன்மை தினத்தின் கருப்பொருள் என்பது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை அடைவதற்கு சமூகங்களுக்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் வலுவூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டார். வலுவான உள்ளூர் நடவடிக்கைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறைகள் மூலமாக மட்டுமே அர்த்தமுள்ள உலகளாவிய விளைவுகள் உருவாக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளமான பல்லுயிர் பாரம்பரியத்தையும், பாரம்பரிய சூழலியல் அறிவு முறைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, இமயமலை, காடுகள் முதல் சதுப்புநிலங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடல்சார் சூழல் அமைப்புகள் வரை பலதரப்பட்ட சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சமூகம் சார்ந்த பல்லுயிர் பாதுகாப்பு மரபுகள், மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, சூழலியல் உறவை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், பல்லுயிர் பாதுகாப்பு என்பது உணவுப் பாதுகாப்பு, நீர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், நிலையான வளர்ச்சி ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பாரம்பரிய சூழலியல் ஞானம், நிலையான வாழ்க்கை முறைகளின் முக்கியத்துவத்தையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற உலகளாவிய இயக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். பல்லுயிர் பாதுகாப்பு குறித்த உரையாடல் அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அடித்தளமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கருப்பொருள் சார்ந்த கண்காட்சிகள் மூலம் மாநில பல்லுயிர் வாரியங்கள், பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அமைப்புகள், தங்களின் சாதனைகள், புதுமையான முன்னெடுப்புகள், உயிரி சார்ந்த தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின. சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், சமூகம் சார்ந்த பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், பல்லுயிர் அடிப்படையிலான நிலையான வாழ்வாதாரங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் இந்தக் கண்காட்சி உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264014®=3&lang=1
***
SS/SMB/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264221)
வருகையாளர் எண்ணிக்கை : 37