பிரதமர் அலுவலகம்
இத்தாலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:19PM by PIB Chennai
ரோமில் உள்ள அதிபர் மாளிகையில், இத்தாலிய குடியரசின் அதிபர் மேதகு திரு செர்ஜியோ மட்டரெல்லாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இந்திய-இத்தாலி உறவுகளை வலுப்படுத்துவதில் அதிபர் திரு மட்டரெல்லா வழங்கிய ஆதரவிற்கும் தலைமைத்துவத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்திய-இத்தாலி உத்திசார் கூட்டாண்மையின் வளர்ச்சிப் பாதையை இரு தலைவர்களும் குறிப்பிட்டதுடன், வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்தனர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவது, கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதில், இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததுடன், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மோதல்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சர்வதேசச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும் தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
அதிபர் திரு மட்டரெல்லாவின் அன்பான உபசரிப்புக்குப் பிரதமர் நன்றி தெரிவித்ததுடன், இருவரையும் இந்தியாவிற்கு வருகை தருமாறு அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.
(Release ID: 2263390)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263466)
வருகையாளர் எண்ணிக்கை : 9